எம்.வை.அமீர் -
அண்மையில் சாய்ந்தமருதில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான றிஷாத் பதியூதீனுடைய உருவபொம்மையை எரித்த விடயத்துக்கும் பள்ளிவாசல் மற்றும் உண்மையாக சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சிசபையை கோருபவர்களுக்கும் சம்மந்தம் இருப்பதாக தான் கருதவில்லை என்றும், அமைச்சர் றிஷாத் பதியூதீனுடைய அபார வளர்ச்சியில் கொண்ட காழ்ப்புணர்ச்சியின் காரணமாகவே ஒரு சிறு குழுவினரால் குறித்த செயற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இவ்வாறான செயற்பாடு கவலையானதும் மிகுந்த கண்டனத்துக்குரியதுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தலைவரும் அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவருமான கலாநிதி ஏ.எம்.ஜெமில் தெரிவித்தார்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் 1000 மூக்குக்கண்ணாடிகளை அம்பாறை மாவட்டத்துக்கு வழங்கும் திட்டத்தின்கீழ் கலாநிதி ஏ.எம்.ஜெமிலின் வழிகாட்டலில் அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் சமூக அபிவிருத்தித் திட்டத்தின் ஊடாக Double A Pulp And paper நிறுவனத்தின் அனுசரணையுடன் தேவையுடைய மாவடிப்பள்ளியைச் சேர்ந்த ஒரு தொகுதி பயனாளிகளுக்கு மூக்குக்கண்ணாடிகள் வழங்கும் நிகழ்வு 2017-11-12 ஆம் திகதி அல் அஷ்ரப் வித்தியாலயத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றியபோதே கலாநிதி ஏ.எம்.ஜெமில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
சாய்ந்தமருது மக்கள் தங்களை தாங்களே ஆளவேண்டும் என்பது மிகவும் நியாயமான விடையமாகும். நானும் அந்த மண்ணில் பிறந்தவன் என்ற அடிப்படையில் மாகாணசபையில் தனிநபர் பிரேரணை நிறைவேற்றியது முதல், அமைச்சர் றிஷாத் பதியூதீனை சாய்ந்தமருத்துக்கான உள்ளுராட்சிசபை விடயத்தில் முழுமையாக சம்மந்தப்படுத்தி பல்வேறுபட்ட முன்னெடுப்புக்களை மேற்கொண்டோம். அமைச்சர் இந்த விடயத்தில் மிகுந்த உளத்தூய்மையுடன் செயற்பட்டார். இன்னும் செயற்பட்டுக்கொண்டு இருக்கிறார். தூய்மையான எங்களது முன்னெடுப்புக்களை யாரும் தடைசெய்ய முடியாது என்றும் தெரிவித்தார்.
சாய்ந்தமருது மக்களுக்கு உள்ளுராட்சிசபையை பெற்றுத்தருவோம் என போலியான வாக்குறுதிகளை பல்வேறு சந்தர்ப்பங்களில் வழங்கி தங்களது வாக்கு வங்கியை நிரப்பிக்கொண்டு, அதனூடாக சுகபோகம் அனுபவிக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் மற்றும் பிரதி அமைச்சர் ஹரீஸ் உள்ளிட்டவர்கள்தான் அந்த மக்களின் அபிலாஷைகளுக்கு தடையாக இருக்கிறார்கள் என்பதை பளிவாசல் சமூகமோ அல்லது போராட்டத்தை முன்னேடுப்பவர்களோ அறியாமல் இல்லை என்றும் தெரிவித்தார்.
தான் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்துகொண்டபோது சாய்ந்தமருதில் அந்தக் கட்சிக்கு பாரிய எழுச்சி ஏற்பட்டதாகவும் அதனூடாக தங்களது கட்சிக்கு வீழ்ச்சி ஏற்படும் என பயந்தே பிரதமர் ரணிலைக் கூட்டிவந்து சாய்ந்தமருது மக்களின் நீண்ட நாள் கனவை நனவாக்குவதாக பொய்யான வாக்குறுதிகளை வழங்கி அந்த மக்களின் வாக்குகளை பெற்றுக்கொண்டதாகவும் இனிமேல் இவ்வாறான பொய்களை மக்கள் நம்பப்போவதில்லை என்றும், கல்முனையைச் சேர்ந்த சில அரசியல் வாதிகளே சாய்ந்தமருது மக்களின் நியாயத்தை ஏற்றுக்கொள்ள வில்லையென்றும் அநேகமான கல்முனை மக்கள் சாய்ந்தமருதுக்கு உள்ளுராட்சிசபையை வழங்க வேண்டும் என்றே விரும்புவதாகவும் தெரிவித்தார்.
பலவருடங்களாக ஏமற்றியவர்களுக்குச் சமனாக உளத்தூய்மையுடன் உதவ வந்தவருக்கு உருவபொம்மையை எரித்த சதிகாரர்களின் எண்ணம் நிறைவேறப்போவதில்லை என்றும் தானும் அவர்களுடன் இணையப்போவதாக போலியான பிரச்சாரம் செய்வதாகவும், ‘சோறு சாப்பிடும் வாயால் தான் சோறே தின்பவன்’ என்றும் அழுத்தமாக குறிப்பிட்டார்.
மறைந்த தலைவர் அஷ்ரபுக்கு பின்னர் இலங்கை முஸ்லிம்களை வழிநடத்தக்கூடிய சிறந்த தலைவர் என்றால் அது அமைச்சர் றிஷாத் பதியூதீன் மட்டுமே என்று தெரிவித்த கலாநிதி ஜெமில், அவரது தூர நோக்குடைய சமூக சிந்தனையையும் அர்ப்பணிப்பையும் யாராலும் மிஞ்ச முடியாது என்றும் தெரிவித்தார்.