அகில இலங்கை கராத்தே சுற்றுப் போட்டிகளில் ஆலையடிவேம்பு மாணவன் சாதனை - ராம் கராத்தே சங்கத்தின் மற்றுமொரு மைல்கல்



கொழும்பு, சென். ஜோசப் கல்லூரியின் உள்ளக விளையாட்டரங்கில் அண்மையில் இடம்பெற்ற இவ்வாண்டுக்கான அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான கராத்தே சுற்றுப் போட்டிகளில் கிழக்கிலங்கையில் பிரசித்தி பெற்ற ராம் கராத்தே சங்கத்தின் பயிலுனரும், அக்கரைப்பற்று ஸ்ரீ இராம கிருஷ்ணா தேசிய கல்லூரியின் க.பொ.த. சாதாரண தர மாணவனுமான சோதீஸ்வரன் ரிசோபன் வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்று தேசிய சாதனை படைத்துள்ளார்.

குறித்த போட்டித் தொடரில் 18 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான குமித்தே பிரிவின் இறுதிப் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தினை வென்ற அவர், அதே வயதுப் பிரிவில் காட்டா போட்டிகளில் கலந்துகொண்டு வெண்கலப் பதக்கத்தினைக் கைப்பற்றி இந்தத் தேசிய சாதனைக்குச் சொந்தக்காரரானார்.

இவ்வருடம் இலங்கைத் தீவின் 9 மாகாணங்களிலிருந்தும் தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளைப் பிரதிநிதித்துவப்படுத்திய மாணவர்களிடையே நடாத்தப்பட்ட அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான கராத்தே சுற்றுப் போட்டிகளில் இம்முறை வட மாகாணம் பதக்கங்கள் எதனையும் கைப்பற்றாதநிலையில் கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்துக்கு ஒரு பதக்கமும், அம்பாறை மாவட்டத்துக்கு சோதீஸ்வரன் ரிசோபன் வென்றெடுத்த குறித்த இரண்டு பதக்கங்களுமாக மொத்தம் மூன்று பதக்கங்கள் வென்றெடுக்கப்பட்டுள்ளன.

ஆலையடிவேம்பு பிரதேசத்தைச் சேர்ந்த சோதீஸ்வரன் – சுந்தரலெட்சுமி தம்பதிகளின் கனிஷ்ட புதல்வனான இவர், கிழக்கிலங்கையில் பிரசித்தி பெற்ற ராம் கராத்தே சங்கத்தின் ஸ்தாபகத் தலைவரும் ஆலையடிவேம்பு பிரதேச செயலகப் பதவிநிலை உதவியாளருமான சிகான். கந்தசாமி கேந்திரமூர்த்தியின் நேரடிப் பயிற்றுவிப்பின் கீழ் பயிற்சி பெற்ற ஒரு வீரராவார். மேலும் இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு இடம்பெற்ற அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான கராத்தே சுற்றுப் போட்டிகளில் காட்டா பிரிவில் வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றியிருந்ததுடன், மலேசிய நாட்டில் இடம்பெற்ற சர்வதேசப் பாடசாலைகளுக்கிடையிலான காட்டா போட்டிகளில் தங்கப் பதக்கத்தினையும், குமித்தே போட்டிகளில் வெண்கலப் பதக்கத்தையும் வென்று முழு இலங்கைத் தேசத்துக்கும் பெருமை சேர்த்திருந்தார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இவரைப் போலவே சிகான். கே.கேந்திரமூர்த்தியினால் பயிற்றுவிக்கப்பட்ட வீர, வீராங்கனைகள் கடந்த காலங்களைப் போலவே தொடர்ச்சியாகத் தமது திறமைகளைத் தேசிய ரீதியில் வெளிப்படுத்தி வெற்றிகளைக் குவித்து வருகின்றமையானது ஆலையடிவேம்பு பிரதேசத்தின் கீர்த்தியை இலங்கை தேசம் முழுவதும் ஓங்கச் செய்துள்ளது.

மேலும் இந்த வெற்றி குறித்து பற்றி நியூஸுக்குக் கருத்துத் தெரிவித்த சிகான். கே.கேந்திரமூர்த்தி, தனது மாணவனான சோதீஸ்வரன் ரிசோபன் இந்த சாதனையை நிகழ்த்துவதற்கு தன்னோடு இணைந்து பயிற்சிகளை வழங்கிய கே.ராமிலன் மற்றும் கே.சாரங்கன் ஆகியோருக்கு நன்றி தெரிவித்ததுடன், இச் சுற்றுப் போட்டிகளில் கலந்துகொள்வதற்குப் பல வழிகளிலும் உதவிகளையும் ஒத்தாசைகளையும் வழங்கி உதவிய அனைவருக்கும் தனது இதயபூர்வமான நன்றிகளைத் தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டார். அத்துடன் இச் சாதனை நிகழ்த்தப்பட்ட பின்னர் தொடர்ச்சியாகத் தமக்கு வாழ்த்துத் தெரிவித்த அனைவருக்கும் நன்றி கூறினார்.
Regards,

Divisional Secretariat,
Alayadivembu.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -