கலஹா ஸ்ரீ சண்முகா பாடசாலைக்கு உரிய கட்டிடங்கள் ஏற்படுத்தாத காரணத்தினால் மாணவர்கள் அவதி : மாகாணசபை உறுப்பினர் சோ.ஸ்ரீதரன் எடுத்துரைப்பு
கண்டி கல்வி வலயத்துக்குட்பட்ட கலஹா ஸ்ரீசண்முகா பாடசாலை தரம் ஒன்று வகுப்புடன் மாத்திரம் கடந்த 5 வருடங்களாக இயங்குவதால் இந்தப்பாடசாலையை கலஹா ராமகிருஷ்ணா பாடசாலையுடன் இணைப்பதற்கு மத்திய மாகாண கல்வியமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டுமென மத்திய மாகாணசபை உறுப்பினர் சோ.ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.
மத்திய மாகாணசபை அமர்வில் கலந்து கொண்டு பேசிய போதே இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அவர் மேலும் பேசுகையில் கூறியதாவது :
ஆயிரம் பாடசாலைகள் திட்டத்தின் கீழ் 2013 ஆம் ஆண்டு கலாஹா ராமகிருஷ்ணா பாடசாலையின் ஆரம்பப்பிரிவு வேறாக்கப்பட்டு இந்தப்பாடசாலையின் ஆசிரியர் விடுதியில் ஸ்ரீ சண்முகா பாடசாலை என்று புதிய பாடசாலை ஏற்படுத்தப்பட்டது. எனினும் இந்தப்பாடசாலைக்கு நிரந்தர காணி ஒன்றில்லாத காரணத்தினால் தொடர்ந்து இந்தப்பாடசாலை தரம் ஒன்றுடன் 76 மாணவர்களுடன் இயங்கி வருகின்றது. தரம் இரண்டு மாணவர்கள் ராமகிருஷ்ண பாடசாலைக்கு வருடந்தோறும் அனுமதிக்கப்படுகின்ற நிலைமையே காணப்படுகின்றது. தற்போதுள்ள ஸ்ரீசண்முகா பாடசாலையில் எவ்வித அடிப்படை வசதிகளுமில்லாத காரணத்தினால் மாணவர்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர் என்று பெற்றோர் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில் கலஹா ராமகிருஷ்ணா பாடசாலையில் தனியாக ஆரம்பப் பிரிவு பாடசாலை ஒன்றை ஏற்படுத்தும் முயற்சிக்குப் பெரும்பாலான பெற்றோர்களும் பழைய மாணவர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். எனவே ஸ்ரீசண்முகா பாடசாலைக்கு உரிய நிலத்தைப் பெற்றுக்கொடுக்க வேண்டும். அல்லது இந்தப்பாடசாலையின் தரம் ஒன்றை கலஹா ராமகிரஷ்ணா பாடசாலையுடன் இணைப்பு செய்வதற்கு மத்திய மாகாண கல்வியமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும்.