விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சட்டத்தரணி அல்ஹாஜ் எச்.எம்.எம். ஹரீசின் வேண்டுகோளுக்கு அமைவாக கல்முனை சந்தாங்கேணி மைதானத்தை சகல வசதிகளும் கொண்ட மைதானமாக அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டத்தை 2018 ஆம் ஆண்டில் பூர்த்தி செய்யும் வகையில் அதற்கான நிதி 2018ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீர 2018ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டத்தை இன்று (9) பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றும் போது கல்முனை சந்தாங்கேணி மைதானத்தை சகல வசதிகளும் கொண்ட மைதானமாக அபிவிருத்தி செய்வதற்கான நிதியினை ஒதுக்கீடு செய்துள்ளதாக தெரிவித்தார்.
மேலும் பிரதி அமைச்சர் ஹரீசின் வேண்டுகோளின் பேரில் கல்முனை மற்றும் சம்மாந்துறை ஒருங்கிiணைந்த நகர அபிவிருத்தி திட்டத்திற்கு நகர திட்டமிடல் அமைச்சர் ரவூப் ஹக்கீமினால் 2000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதனைத் தொடர்ந்து குறித்த நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் தனது வரவு செலவுத்திட்ட உரையில் குறிப்பிட்டார். இதன் மூலம் 2018ஆம் ஆண்டில் கல்முனை மற்றும் சம்மாந்துறை பிரதேசங்களில் பாரிய அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.