ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ்-
சிறுநீரக நோய்த்தடுப்பு ஜனாதிபதி செயலணியின் பணிப்பில் சுகாதார பிரதியமைச்சர் பைசால் காசிமின் வழிகாட்டலில் 'நிந்தவூர் பிரதேசத்திலுள்ள நீரிழிவு நோயாளர்களை விழிப்புணர்வூட்டும் நிகழ்வும், இலவச மருத்துவப் பரிசோதனையும், சிகிச்சையளிக்கும் நிகழ்வுகளும் இன்று(12) நிந்தவூர் தொற்றா நோய் ஆயூர்வேத ஆராட்சி நிலையத்தில் இடம் பெற்றன.
நிந்தவூர் தொற்றா நோய் ஆயூர்வேத ஆராட்சி வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் கே.எல்.எம்.நக்பர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுகளில் சுகாதாரப் பிரதியமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் எம்.ரி. முகம்மட் சப்றாஸ் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
மேலும் இந்நிகழ்வில் பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.ஏ.ஹில்மியா, ஆயூர்வேத ஆராட்சி நிலைய அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.எம்.றியால்டீன் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.
இன்றைய தினம் 120க்கு மேற்பட்ட நிந்தவூர் பிரதேசத்திலுள்ள நீரிழிவு நோயாளர்களுக்கு விழிப்புணர்வு ஊட்டப்பட்டதோடு, இலவச மருத்துவ பரிசோதனைகளும், சிகிச்சைகளும் வழங்கப்பட்டன.
பரிசோதனைகளுக்காகப் பசித்திருந்த அனைவருக்கும் இயற்கை மூலிகைத் தாவரங்கலந்த இலைக்கஞ்சியும், முட்டைகளும் வழங்கப்பட்டன.மேலும் அவர்களுக்கு இரு வாரங்களுக்குத் தேவையான மருந்துகளும் வழங்கப்பட்டன.
இது போன்ற நிகழ்ச்சிகள் எதிர்காலத்தில் இவ்வைத்தியசாலையினூடாக ஏனைய பிரதேச செயலகங்களுக்குட்பட்ட பகுதிகளிலும் நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதுடன், மாதத்தில் 2வது மற்றும் 4வது வாரங்களில் ( செவ்வாய் கிழமைகளில் ) இதே போன்று தொற்றா நோயாளர்களுக்கான கிளினிக்குகளும் இவ்வைத்தியசாலையில் தொடராக நடாத்துவதற்குத் திட்டமிட்டுள்ளதாகவும் ஆயூர்வேத ஆராட்சி வைத்தியசாலைப் பணிப்பாளர் கே.எல்.எம்.நக்பர் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் இங்கு கருத்துத் தெரிவிக்கையில்:- 'எமது இந்த ஆயுர்வேத ஆராட்சி வைத்தியசாலையில் உங்களுக்குத் தேவையான அனைத்து மருந்து வகைகளும் இருக்கின்றன. நீரிழிவு , கொழுப்பு, இரத்தழுத்தம் போன்ற பல்வேறு பெறுமதியான பரிசோதனைகள் இலவசமாக இடம் பெறுகின்றன. இவற்றை அனுபவியுங்கள். இவற்றுக்காக உழைத்து வருபவர்களுக்கு இறைவனிடம் பிரார்த்தனை புரியுங்கள்' எனக் கேட்டுக் கொண்டார்.
பிரதியமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் எம்.ரி. முகம்மட் சப்றாஸ் இங்கு கருத்துத் தெரிவிக்கையில்:- 'இந்த வைத்தியசாலையை 2020ம் ஆண்டுக்குள் அதற்குரிய காணியில் முழுமையாக கட்டி முடித்துவிட வேண்டுமென்று நமது பிரதியமைச்சர் கடினமாக உழைத்து வருகிறார். விரைவில் அதற்கான பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. நாங்கள் இலங்கையின் நாலாபக்கங்களிலுமுள்ள இது போன்ற வைத்தியசாலைகளுக்குச் சென்று பார்த்திருக்கின்றோம். அவைகளோடு ஒப்பிடுகையில் நமது வைத்தியசாலையில் நடைபெறுகின்ற சேவைகள் அதிகமென்றுதான் சொல்ல வேண்டும். இதற்குக் காரணம் எமது வைத்தியசாலைகளில் பணியாற்றி வரும் வைத்தியர்கள், ஏனைய உத்தியோகத்தர், ஊழியர்களின் தியாகமே! எனவே, அவர்களின் நல்வாழ்வுக்காகப் பிரார்த்திக்க வேண்டியது நமது கடமையாகும்' எனத் தெரிவித்தார்.