நுஸ்கி முக்தார்-
இஸ்ரேலின் தலைநகராக ஜெரூஸலத்தை அங்கீகரித்து அமெரிக்க ஜனாதிபதி வெளியிட்ட அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இலங்கையில் பாரிய எதிர்ப்பு பேரணியொன்று (Protest Rally) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அனைத்து பலஸ்தீன நட்புறவு அமைப்புகள், அனைத்து மத தலைவர்கள், வெளிநாட்டு தூதுவர்கள், அரசியல் காட்சிகள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கம், கலைஞர்கள், சட்டத்தரணிகள் சங்கம் போன்ற அமைப்புகள் ஒன்றிணைந்து இந்த பேரணியை எதிர்வரும் 22ம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 3:30 மணிக்கு ஏற்பாடு செய்துள்ளது.
கொழும்பு புதிய நகர மண்டபத்தில் நடைபெறும் இந்த நிகழ்வு "உலக அபிப்ராயத்தை மதிப்போம்! கிழக்கு ஜெரூஸலத்தை பலஸ்தீனத்தின் தலைநகராக ஏற்றுக்கொள்" ("Respect World Opinion! Accept East Jerusalem as the Capital of Palestine") எனும் தொனிப்பொருளில் நடைபெறவுள்ளது.
இதேவேளை, இந்த நிகழ்வின் போது மேற்குறித்த அனைத்து பங்காளர்களும் இணைந்து கையொப்பமிட்டு தீர்மானமொன்றும் நிறைவேற்றப்படவுள்ளது. இந்த தீர்மானம் எதிர்வரும் 12.01.2018ம் திகதி ஐக்கிய அமெரிக்க தூதுரகத்தில் கையளிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஐக்கிய தேசிய கட்சி, ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, ஸ்ரீ லங்கா பொதுஜன பெறமுண, தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஜாதிக ஹெல உறுமய, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி, லங்கா சமசமாஜ கட்சி ஆகிய பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் இந்த எதிர்ப்பு பேரணியில் ஒன்றிணைந்துள்ளது. ஒரு பொது நோக்கத்துக்காக இலங்கையில் உள்ள அரசியல் காட்சிகள் ஒன்றினையும் முதல் சந்தர்ப்பமும் இதுவாகும்.
குறித்த எதிர்ப்பு பேரணியை ஏற்பாடு செய்வது தொடர்பான கலந்துரையாடலொன்று நேற்று பிற்பகல் கொழும்பு ஹெவலொக் சிட்டி கிளப் ஹவுஸில் இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில் அமைச்சர் ராஜித சேனாரத்ன, பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க, பலஸ்தீன தூதுவர் ஸுஹைர் ஹம்தல்லா ஸைத், தேசிய ஊடக மத்திய நிலைய தலைவர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார், முஸ்லிம் கவுன்சில் ஒப் ஸ்ரீ லங்கா தலைவர் என்.எம். அமீன், ஏனைய இயக்கங்களின் பிரதிநிதிகள், வர்த்தக சமூக பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
இதேவேளை, இஸ்ரேலுக்கான இலங்கை தூதரகத்தை ஜெரூஸலம் நகருக்கு மாற்றுவதில்லை எனவும், ஜெரூஸலத்தை இஸ்ரேலின் தலைநகராக இலங்கை ஏற்றுக்கொள்வதில்லை எனவும் கடந்த வாரம் இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலார் மாநாட்டின் போது அமைச்சரவை இணை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாட்டை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.