க.கிஷாந்தன்-
நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலையினால் பிரதேசங்கள் வாரியாக பாரிய பாதிப்புகள் ஏற்பட்ட வண்ணமே இருக்கின்றது. நுவரெலியா மாவட்டத்தில் டயகம பிரதேசம் தலவாக்கலை மற்றும் நுவரெலியா உள்ளிட்ட பகுதிகளில் கடந்த இரு தினங்களாக பெய்து வந்த அடை மழை காரணமாக பாதிப்புக்குள்ளான விவசாய காணிகள் மற்றும் குடியிருப்புகள் சில பாதிக்கப்பட்டமை தெரிந்தே.
இந்த நிலையில் டயகம, அக்கர்ப்பத்தனை, தலவாக்கலை, நுவரெலியா ஆகிய பிரதேசங்களில் பாதிக்கப்பட்டுள்ள விவசாய காணிகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் நிரம்பிய வெள்ள நீர் வற்றி வருகின்றது.
விவசாய காணிகளில் நீர் வற்றும் நிலையில் பாதிக்கப்பட்ட பயிர்களை மேலும் பராமரிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் இப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேவேளை குடியிருப்பு பகுதிகளில் உட்புகுந்த வெள்ள நீர் வழிந்தோடுவதால் அப்பாதிப்புகளிலிருந்து மீள்வதற்கு குடியிருப்பாளர்கள் தமது வீடு வளாகத்தை சுத்தப்படுத்தி வருகின்றனர்.
இவ்வாறாக அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பில் அவ்வப் பகுதி கிராம சேவகர்கள் சேத விபரங்களை திரட்டி வருகின்றனர்.
அதேவேளையில் அரசியல்வாதிகள், தொழிற்சங்கவாதிகள் என பலரும் சேதங்களை பார்வையிடுவதற்காக படை எடுத்துள்ள போதிலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு எவ்விதமான உதவி கரங்களையும் நீட்டவில்லை என பாதிக்கப்பட்டவர்களால் குறை சொல்லப்படுகின்றது.
இது இவ்வாறிருக்க டயகம - தலவாக்கலை பிரதான வீதியில் கிளாஸ்கோ பகுதியில் பிரதான வீதி தாழிறங்கியுள்ளதால் அவ்வீதியில் பயணிக்கும் வாகனங்கள் மிகுந்த அவதானத்துடன் செல்லுமாறு சாரதிகளுக்கும், மக்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வீதி ஓரங்களில் ஏற்பட்டுள்ள மண்சரிவுகளை சீர் செய்ய நடவடிக்கைகளை ஏற்படுத்துமாறு சம்மந்தப்பட்ட திணைக்கள அதிகாரிகளுக்கு பணிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடதக்கது.
மேலும் இயற்கையின் சீற்றதால் பாதிக்கப்பட்ட டயகம வெஸ்ட் பகுதி மக்கள் டயகம ஆலய மண்டபத்திலேயே தொடர்ந்தும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கான உலர், உணவு தோட்ட நிர்வாகம் மற்றும் கிராம அதிகாரியின் ஊடாக வழங்கப்பட்டு வருகின்றதாகவும், இவர்களுக்கு மாற்று நடவடிக்கைகளை ஏற்படுத்தி தருமாறு சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் பாதிப்புக்குள்ளான மக்கள் கோரிக்கை விடுத்துள்ளமையும் மேலும் குறிப்பிடதக்கது.