அதன்படி தேர்தல்கள் சட்டம் நாடளாவிய ரீதியில் நேற்று முதல் அமுலுக்கு வந்ததால் பேரணிகள் அனைத்தும் தடை செய்யப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி ருவன் குணசேகர தெரிவித்தார்.
பிரதேசங்களுக்கு பொறுப்பான உதவி பொலிஸ் அத்தியட்சர்கள், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கு பேரணிகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கும் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளதாகவும், மாகாணங்களுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்களுக்கும் அதனை மேற்பார்வை செய்து வழி நடத்தும் நேரடி கடமைகள் தொடர்பிலான ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
பொலிஸ் தலைமையகத்தில் நேற்று நண்பகல் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது,
தேர்தல் காலப்பகுதியில் வன்முறைகள் அதிகம் இடம்பெற இந்த பேரணிகள் காரணம் என்பதை நாம் அடையாளம் கண்டுள்ளோம். தேர்தல்கள் சட்ட திட்டங்களின் பிரகாரம் வேட்பு மனு தாக்கல் செய்யப் படும் தினத்தில் இருந்து தேர்தல்கள் நிறைவுற்று பிரகடனம் செய்யப்படும் தினம் வரை பேரணிகள், ஊர்வலங்கள் செல்ல முடியாது. மத, கலாசார பேரணிகளுக்கு அனுமதி உள்ள போதும் அவை கூட தேர்தல் நடவடிக்கைகளுடன் தொடர்புபடுமாயின் அதற்கும் அனுமதியில்லை.
இம்முறை பேரணிகளை கட்டுப்படுத்த அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் நாம் எழுத்து மூல உத்தரவுகளை வழங்கியுள்ளோம். பேரணிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் அவற்றைக் கட்டுப்படுத்தவும் பிரதேசங்களின் உதவி பொலிஸ் அத்தியட்சர்களுக்கும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கும் பொறுப்புச் சாட்டப்பட்டுள்ளது.
ஏதேனும் ஒரு பகுதியில் பேரணிகள் இடம்பெறுமாயின் அது தொடர்பில் 24 மணி நேரத்துக்குள் பொலிஸ் நிர்வாகம் மற்றும் தேர்தல்கள் கடமைகளுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எஸ்.எம்.விக்ரமரத்னவுக்கு அறிவிக்க வேண்டும் என பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அத்துடன் அதே 24 மணி நேரத்துக்குள் மாகாணங்களுக்கு பொறுப்பான அந்தந்த சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்களின் நேரடிக் கட்டுப்பாட்டில் விசாரணைகள் ஆரம்பமானதை உறுதி செய்து சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஊடாகவும் தேர்தல்கள் கடமைகளுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எஸ்.எம். விக்ரமரத்னவுக்கு அறிவிக்க வேண்டும் என பொலிஸ் தலைமையகம் அறிவுறுத்தியுள்ளது.
இந் நிலையில் அவ்வாறு ஆரம்பிக்கப்படும் விசாரணைகளின் நிலைமையையும் 7 நாட்களுக்கு ஒரு முறை மாகாணங்களுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள், தேர்தல்கள் கடமைகளுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எஸ்.எம். விக்ரமரத்னவுக்கு அறிவிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
எனவே இம்முறை தேர்தல் சட்டதிட்டங்களை மீறி பேரணிகள் செல்வோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.