முதலமைச்சரின் வரவு செலவுத்திட்ட உரை பழுதடைந்த கேக்கிற்கு ஐசிங் போட்டதைப் போல இருக்கின்றது. அ.அஸ்மின் சுட்டிக்காட்டு!!!



 எம்.எல்.லாபிர்-


டக்கு மாகாணசபையின் 2018ம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்ட விவாதம் இன்றைய தினம் வடக்கு மாகாணசபையில் விவாதத்திற்காக எடுத்துக்கொள்ளப்பட்டது, அதன்போது கருத்துவெளியிட்ட வடக்கு மாகாணசபை உறுப்பினர்  அய்யூப் அஸ்மின்  மேற்கண்டவாறு தெரிவித்தார், அவர் மேலும் தெரிவிக்கையில்

2018ம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டத்திற்கு ஒரு விவாதம் அவசியம்தானா என்ற கேள்வி என்னுள் எழுகின்றது, என்னைப் பொறுத்தவரையில் இவ்வாறான ஒரு விவாதம் அவசியமேயில்லை, கடந்த 4 வருடங்களாக பல்வேறு வாதப்பிரதிவாதங்கள் வரவுசெலவுத்திட்டங்களின் மீது இடம்பெற்றன ஆனால் இறுதியில் அவை நாம் எதிர்பார்த்த பலனை எமது மக்களுக்குப் பெற்றுத்தரவில்லை.

மாகாணசபை உறுப்பினர்கள் கொள்கை வகுப்பாளர்கள்; அவர்கள் எந்தக் கொள்கையின் கீழ் இந்த வரவு செலவுத்திட்டத்தை விவாதத்திற்கு உட்படுத்துகின்றார்கள், எமக்கு நிதி சார்ந்த அல்லது அபிவிருத்தி சார்ந்த ஏதாவது கொள்கைகள் இருக்கின்றனவா? எமது மக்களின் அடிப்படையான தேவைகள் என்ன என்று நாம் ஆய்ந்தறிந்துதான் இத்தகைய திட்டங்களை முன்வைக்கின்றோமா, முதலமைச்சர் அவர்களுடைய வரவுசெலவுத்திட்ட உரையில் முன்னேற்றகரமான விடயங்கள் இருக்கின்றன ஆனால் அவை நடைமுறைப்படுத்தப்படுமா என்பது என்னுடைய பிரதான கேள்வியாகும், ஏனெனில் பழுதடைந்த கேக்கின் மீது அழகான ஐசிங் பூசியதைப் போலத்தான் அவரது உரை அமைந்திருக்கின்றது. உள்ளீடுகள் தவறானவையாக இருக்கின்றபோது இப்படியான கவர்ச்சிகள் மாத்திரம் எமது மக்களுக்குத் தீர்வைப் பெற்றுத்தராது.

கடந்த நான்குவருடங்களாக வேறு ஒரு உலகத்தில் வாழ்ந்துவிட்டு, பறக்கும் தட்டில் வந்திறங்கிய வேற்றுக்கிரகவாசிகளைப் போல செயற்பட்டுவிட்டு இப்போதுதான் முதலமைச்சர் வடக்கு மாகாணத்திலே தரையிறங்கியிருக்கின்றார். இவ்வளவு நாளும் இராணுவமே வெளியேறு, எமது காணிகளை விடுவியுங்கள், அரசியல் கைதிகளின் விவகாரங்கள், காணாமல் ஆக்கப்பட்டோரின் விவகாரங்களை வைத்து மேடைப் பேச்சுக்களைப் பேசி, தமிழ் மக்களை உசுப்பேத்திவிட்டு, தமிழ் மக்களின் அரசியல் பலத்தை சிதைத்துவிட்டு இப்போது வடக்கின் அபிவிருத்தி தொடர்பில் முதலமைச்சர் பேச வந்திருக்கின்றார், இது வேடிக்கையானது, இருப்பினும் இதனை நான் வரவேற்கின்றேன், இந்த மாற்றத்தின் மூலம் எமது மக்களுக்கு நன்மை கிடைக்குமாக இருந்தால் அதனை நாம் வரவேற்கவேண்டும்.

முதலமைச்சரின் கீழ் 11ற்கும் மேற்பட்ட விவகாரங்களும் பொறுப்புக்களும் காணப்படுகின்றன, இருப்பினும் அவர் இங்கு 9 விடயங்களை மாத்திரமே கையாண்டிருக்கின்றார். அதிலும் இரண்டு விடயங்களில் நான் கருத்துரைக்க விரும்புகின்றேன். முதலாவது சுற்றுலாத்துறை, சுற்றுலா என்றது அரைகுறை ஆடைகளோடு கூடிய பெண்களையும், குடித்துவிட்டு கும்மாளமிடுகின்ற இளைஞர்களையும், காதல் ஜோடிகளையும் எம்மவர்கள் அவர்களது மனக்கண்முன் கொண்டுவருகின்றார்கள், அதனையே சுற்றுலாத்துறை என்று எண்ணுகின்றார்கள், இதனால் கலாசாரச் சீரழிவு பிறழ்வு ஏற்படுகின்றது என்று குறிப்பிடுகின்றார்கள், உண்மையில் சுற்றுலாத்துறை மிகவும் விசாலமானது, எமது மண்ணுக்குப் பொறுத்தமான சுற்றுலாத்துறை என்ன என்று நாம் ஆய்ந்தறிதல் அவசியமாகும், யுத்தத்திற்குப் பின்னரான சூழலில் யுத்த வடுக்களைக் காட்டுகின்ற “கருப்புச் சுற்றுலா” என்ற ஒரு துறை இருக்கின்றது “கலாச்சாரச் சுற்றுலா” என்ற விடயம் இருக்கின்றது “விவசாய சுற்றுலா” என்றெல்லாம் துறைகள் இருக்கின்றன, எனவே இவற்றுள் எமக்குப் பொறுத்தமானதை நாம் தெரிவு செய்தல் அவசியமாகும்.

அடுத்து வீடமைப்பு, வீடமைப்பு விடயத்தில் மாகாணசபைக்கு போதிய நிதி இன்மை ஒரு முக்கிய விடயமாகும், இவ்வாறான நிலையில் யாழ்ப்பாண மாவட்டத்திலே மீள்குடியேறிவருகின்ற முஸ்லிம் மக்களுக்கு வழங்கவென மீள்குடியேற்ற அமைச்சினூடாக 200 வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன, 288 பயனாளிகள் வீட்டுத்திட்டங்களுக்காக விண்ணப்பித்திருக்கின்ற நிலையில் அவர்களுள் 20ற்கும் குறைவானவர்களுக்கே வீட்டுத்திட்டங்கள் வழங்கப்பட்டன, அதிகாரிகளின் கெடுபிடிகளாலேயே இந்த நிலைமை ஏற்பட்டிருக்கின்றது, வடக்கின் மீள்குடியேற்றத்திற்குப் பொறுப்பான அமைச்சர் என்ற ரீதியில் முதலமைச்சரின் கவனத்திற்கு இவ்விடயத்தை நான் முன்வைக்கின்றேன் என்றும் தெரிவித்தார்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -