அம்பாரை மாவட்டத்தின் சாய்ந்தமருது பிரதேச செயலகத்திற்கான உள்ளுராட்சி மன்றத்தை வழங்குமாறு கோரி அடிப்படை உரிமை மீறல் வழக்கொன்றை சாய்ந்தமருதை சேர்ந்த இருவர் உயர் நீதிமன்றில் தாக்கல் செய்துள்ளனர்.
சாய்ந்தமருதுக்கான தனியானதொரு உள்ளுராட்சிசபை வழங்கவேண்டும் என்ற கோரிக்கைகள் அந்த ஊரில் வலுவடைந்துள்ள நிலையில் அங்கு பல்வேறு வடிவங்களில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எதிர்வரும் உள்ளுராட்சிசபை தேர்தலுக்குக்கூட சுயட்சையாக வேட்பாளர்களை களமிறக்கவுள்ள நிலையில் மேற்படி வழக்கும் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சாய்ந்தமருது 17 ஆம் பிரிவை சேர்ந்த முஹம்மது அலியார் பளீல், சாய்ந்தமருது 14ஆம் பிரிவை சேர்ந்த முஹம்மது கண்டு நௌபர் ஆகியோர் மேற்படி வழக்கை சட்டத்தரணி காய்த்திரி டி சில்வா ஊடாக தாக்கல் செய்துள்ளனர்.
இவ்வழக்கின் பிரதிவாதிகளாக உள்ளுராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபா, அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையிலான ஐவர் கொண்ட புதிய உள்ளுராட்சி மன்றங்களை ஏற்படுத்துவதற்கான கருத்துரை பெறும் குழு, மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
சாய்ந்தமருது பிரதேசம் கல்முனை மாநகர சபையுடன் இணைக்கப்பட்டுள்ளதால் தமது கிராமம் பல்வேறு வகையான புறக்கனிப்புக்குள்ளாக்கப்பட்டு வருவதாகவும் அபிவிருத்தி நடவடிக்கைகளில் பாரபட்சம் காட்டப்படுவதாகவும் மனுதாரர்கள் தெரிவித்துள்ளனர்.
சாய்ந்தமருது பிரதேச செயலகப்பிரிவில் 19,000 வாக்காளர்கள் இருந்தும் அம்பாரை மாவட்டத்தில் ஒரு பிரதேச செயலகப்பிரிவுக்கு ஒரு உள்ளுராட்சி மன்றம் வழங்கப்பட்டிருக்கையில் சாய்ந்தமருது பிரதேசத்திற்கு உள்ளுராட்சி மன்றத்தை வழங்காதிருப்பது தமது அடிப்படை உரிமை மீறலாகும்.
அம்பாரை மாவட்டத்தில் எண்ணிக்கை அடிப்படையில் குறைந்த வாக்காளர்களை கொண்ட இறக்காமம், நாவிதன்வெளி, காரைதீவு, ஆகிய பிரதேசங்களுக்கு உள்ளுராட்சி மன்றங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதே போன்று பிரதேச செயலகம் அல்லாத பிரதேசமான அக்கரைப்பற்றுக்கு பிரதேச சபை வழங்கப்பட்டிருப்பதனையும் மனுதாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
சாய்ந்தமருதுக்கான தனியான உள்ளுராட்சி சபை வழங்கப்படும் என பிரதமரும் உள்ளுராட்சி மாகாணசபைகள் அமைச்சரும் மு.காங்கிரஸ் தலைவரும் பல வாக்குறுதிகளை அளித்துள்ளனர்.
தற்போது உள்ளுராட்சி அமைச்சர் சாய்ந்தமருதுக்கு உள்ளுராட்சி சபையினை வழங்க வேண்டுமானால் கல்முனை பிரதேச அரசியல்வாதிகள் சம்மதிக்க வேண்டும் எனக் கூறுவது அரசியல் ரீதியாக சாய்ந்தமருது பிரதேசத்தை புறக்கணிப்பதாகும் எனவும் மனுவில் சுட்டிக்காட்டியுள்ளனர்.
கடந்த வியாழன் அன்று இவ் வழக்கு உயர் நீதி மன்றத்தில் 437/2017 எனும்இலக்கத்தில்தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.