பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ள ரயில்வே தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் பொருட்டு நியமிக்கப்பட்டுள்ள அமைச்சரவை உபகுழு உறுப்பினர்களுக்கிடையில் இன்று விசேட கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளது.
இன்று காலை 9.30 அளவில் இந்த பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்படும் என அமைச்சரவை உபகுழுவின் தலைவர் அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்துள்ளார்.
பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுப்பட்டுள்ள அனைத்து ரயில்வே தொழிற்சங்கங்களும் பங்குபற்றுவதாக ரயில்வே ஊழியர்களின் சங்கத்தின் செயலாளர் இந்திக்க தொடங்கொட தெரிவித்துள்ளார்.
ரயில்வே ஊழியர்களின் பணிப்பகிஸ்கரிப்பு இன்றுடன் 7 ஆவது நாளாக தொடர்கின்றது.
2006 ஆம் ஆண்டின் 6 ஆம் இலக்க சம்பள சுற்று நிரூபத்திற்கு அமைய தமது சம்பளத்தை மறுசீரமைககுமாறும் பதவி உயர்வுகளை வழங்குமாறும் அரசாங்கத்தை வலியுறுத்தி ரயில் ஊழியர்கள் இந்த தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
பணிபகிஸ்கரிப்பில் ஈடுபட்டிருந்த 7 ரயில்வே தொழிற் சங்கங்களின் உறுப்பினர்கள் நேற்று மீண்டும் சேவைக்கு சமூகமளித்துள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுப்பட்ட ஒப்பந்த சேவையாளர்கள் இன்று சேவைக்கு சமூகமளிக்காவிடின், அவர்கள் சேவையில் இருந்து இடைநிறுத்தப்படுவார்கள் என ரயில்வே பொது முகாமையாளர் மகாநாம அபேவிக்ரம தெரிவித்துள்ளார்.