காருண்ய நபிகளின் கருணை உள்ளம்!!!

சுஐப் எம் காசிம்-

கஇறைத் திருத்தலமாம் கஃபா தன்னை
இபுறாகீம் நபியவர்கள் அமைத் தளித்தார்
ஏகஇறை தன்னை- யங்கே வணங்க வேண்டும்
இணையாக வேறு இறை அங்கே இல்லை.

                     <* XXXXXXXXX*>

ஏகனையே வணங்கி வந்த ஆலயத்தில்
இணைவைப்பார் புகுந்து சிலை வைக்கலானார்
வேதனைக்கே உரியஇந்த நிலைமை தன்னை
வேரோடு களைந்தெறிதல் கடமை என்றே.

                          <* XXXXXXXXX*>  

மாதவராம் எங்கள்நபி முனைந்து நின்றார்
மக்காவுக் கேகிடவே கனிந்து நின்றார்
தோழர்பத் தாயிரம்பேர் இணைந்து சென்றார்
தூயபணி செய்திடவே மக்கா சென்றார்

                       <* XXXXXXXXX*>                 

வழிதனிலே அபூசுபியான் ஒளிந் திருந்து
வள்ளல்நபிக் கூறுசெய்ய முனைந்த போது
வழிமேலே விழிவைத்த தோழர் கூட்டம்
வாகாகச் சுபியானைக் கைது செய்தார்
 
                       <* XXXXXXXXX*>         

சுபியானின் மீதுள்ள குற்றம் அந்தோ
சொற்களிலே அடங்காது அனந்தம் கண்டீர்
இஸ்லாத்தின் ஆரம்ப காலம் தொட்டே
எதிரியாய் இயங்கி வந்தார் நபிகள்மீது
                       
                      <* XXXXXXXXX*>          

வசைபாடித் துன்புறுத்தி மகிழ்ச்சி கொண்டார்
வள்ளல் - நபிதனைக் கொல்லத் திட்ட மிட்டார்
மதீனா – மேல் போர் தொடுக்க முனைந்து நின்றார்
மக்கத்துக் காபிர்களின் தலைவர் ஆனார்.

                     <* XXXXXXXXX*>                    

இத்தனையும் செய்த அபூ சுபியான் தன்னை
இங்கிதராம் நபிமுன்னே நிறுத்தி னார்கள்
குற்றங்கள் பலபுரிந்த சுபியான் தன்னை
கொலைசெய்யும் தண்டனையே வேண்டும் என்றே

                         <* XXXXXXXXX*>                 

மற்றவர்கள் எண்ணிநின்ற போதும் ஆங்கே
மாநபிகள் அற்புதமாய் நடந்து கொண்டார்
சுபியானைக் கருணையுடன் நோக்கி நின்றார்
சுபியானே ! என்மொழியைக் கேளும் என்றார்
 
                            <* XXXXXXXXX*>                   

அகிலத்தின் அதிபதியாம் அல்லாஹ் என்னை
அவன்தூதாய் அனுப்பி வைத்தான் மாந்தருக்கு
இறைதூதை எத்திவைத்து இஸ்லாம் தன்னை
இயன்றவரை பரப்பு தென் கடமை காண்பீர்

                       <* XXXXXXXXX*>            

குற்றம் செய் மாந்தர் தமை கொல்வ தெங்கள்
கொள்கையன்று குற்றத்தை உணர வைத்து
வெற்றிதரும் நேர்வழியில் நிலைப்ப டுத்தி
வாழவைத்தல் நபிவழியாம் என்றுரைத்தார்.

                         <* XXXXXXXXX*>                    

ஆனந்த மேலீட்டால் ...அபூ சுபியானும்
அன்புநபி பாதத்தைப் பணிந்து தொட்டார்
மாதவத்து மாநபியே அருட் பிழம்பே
மன்னியுங்கள் என்னை எனக் கெஞ்சிக் கேட்டார்

                              <* XXXXXXXXX*>

நான் செய்த குற்றமெலாம் மன்னித் தென்னை
நல்வழிக்குத் திருப்பிவிட்ட நபிகள்கோனே!!
வாழ் நாளில் இனிநானும் உங்கள் தோழன்
அல்லவனைப் புகழ்ந் திஸ்லாம் ஏற்றேன் என்றார்.
                           <* XXXXXXXXX*>                   

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -