க.கிஷாந்தன்-
திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டகலை ரொசிட்டா தோட்டத்தில் 11.12.2017 அன்று மாலை தோட்டத்தொழிலாளி ஒருவரை சிறுத்தையொன்று தாக்கியதால் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரொசிட்டா தோட்டத்தைச் சேர்ந்த தோட்டத்தொழிலாளர்கள் 12.12.2017 அன்று தோட்ட ஆலயத்துக்கு முன்பாக கூடி எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதுடன் வேலை நிறுத்தப்போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
அண்மைக்காலமாக தோட்டங்கள் காடாகி வருவதால் சிறுத்தைகளின் தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாகவும், கடந்த ஒரு சில மாதங்களில் இத்தோட்டத்தில் பலர் சிறுத்தைத் தாக்குதலுக்கு இலக்காகி இருப்பதாகவும், தாக்கப்பட்டவர்களுக்கும் எந்தவித நஷ்டஈடும் வழங்க முன்வரவில்லையெனவும், 15 கிலோமீற்றருக்கு அப்பாலிருந்த சிறுத்தைகள் தற்போது ஒரு கிலோமீற்றர் தூரத்தில் குடியிருப்புகளுக்கு வந்து தொழிலாளர்களை தாக்குவதாகவும், தோட்ட நிர்வாகமோ, வன ஜீவராசிகள் திணைக்களமோ இதுகுறித்து எந்த அக்கறையும் காட்டுவதில்லையெனவும் தொடர்ந்தும் அச்சத்தில் இவர்கள் வாழ்ந்து வருவதாகவும்; தெரிவிக்கின்றனர்.
இதேவேளை வனவிலங்கு அதிகாரிகள் சிறுத்தைகளை தாக்கினால் தொழிலாளர்கள் கைது செய்யப்படுவார்கள் என அச்சுறுத்துவதாகவும், சிறுத்தைகளின் உயிருக்கு அளிக்கப்படும் மதிப்புகூட தோட்டத்தொழிலாளர்களின் உயிருக்கு அளிக்காதிருப்பது ஏன் என இவர்கள் கேள்வியெழுப்புகின்றனர்.
தோட்ட நிர்வாகம் சிறுத்தைகளை விரட்டுவதற்காக பட்டாசுகளை போடுமாறும் ஆனால் பட்டாசுகளை தோட்ட நிர்வாகம் பெற்றுக்கொடுப்பதில்லை என்றும் தெரிவித்த இவர்கள் பட்டாசை போடும் பொழுது சிறுத்தைகள் தமது குடியிருப்புகளுக்கு சென்று தமது பிள்ளைகளை தாக்கினால் என்ன செய்வது என்று இவர்கள் தெரிவிக்கின்றனர்.
சுமார் இரண்டு மணித்தியாலங்கள் நடைபெற்ற கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் பின் தொடர்ந்தும் தோட்டத்தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் கருத்து தெரிவிக்கையில், அண்மைகாலமாக தோட்டத்தொழிலாளர்கள் சிறுத்தைகளின் தாக்குலுக்கு உட்பட்ட வருவதாகவும், தோட்ட நிர்வாகம் இதற்காக வேலை நேரத்தில் பாதிக்கப்பட்டாலும் கூட எவ்வித நஷட ஈடு வழங்கப்படுவதில்லை என்றும் இது குறித்து தொழிற்சங்கங்களும் அரசியல் தலைவர்களும் பாராமுகமாக இருந்து வருவதாகவும் சிறுத்தைகள் தாக்குதலுக்குட்பட்டவர்கள் தோட்ட நிர்வாகத்திடம் தெரிவிக்கும் போது அது சிறுத்தை அல்ல என தெரிவிப்பதாகவும் தொழிலாளர்கள் எவ்வித பாதுகாப்புமில்லாத நிலையில் மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் இவர்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே இது குறித்து பொறுப்பு வாய்ந்தவர்கள் உரிய நடவடிக்கையினை மேற்கொண்டு உரிய தீர்வினை பெற்றுத்தர வேண்டும் என இவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.