இழக்கப்பட்ட காணியின் பெயரால் அமைச்சுப்பதவி பாதுகாப்பு



சமகால முஸ்லிம் அரசியலும் உள்ளூராட்சித் தேர்தலும்:
ஓர் ஒப்பீட்டு ஆய்வு: பாகம்-4 ( இரண்டாம் பகுதி)


வை எல் எஸ் ஹமீட்

னாதிபதி முன்கூட்டியே முசலி மக்களின் காணிகளுக்கெதிராக நடவடிக்கை எடுக்கப்போகிறார்; என்று தெரிந்தும் காத்திரமான எந்த நடவடிக்கையும் எடுக்காமல் ஊடகங்களில் வீரமுழக்கம் செய்துகொண்டிருந்தார்; அந்த அமைச்சர். இறுதியாக ஜனாதிபதி ஒரு லட்சம் ஏக்கர் காணிகளைக் கையகப்படுத்தும் வர்த்தமானியில் கையொப்பமிட்டார்.

வெந்த புண்ணில் வேல் பாயச்சுவது போல், எந்த பாவமும் செய்யாமல் அகதியாகி சோகவாழ்வுக்கு சொந்தக்காரர்களாகி சொல்லொணாத்துன்பம் அனுபவித்து தன் சொந்த மண்ணில் நிம்மதிக்காற்றைச் சுவாசிக்க காலடியெடுத்துவைத்த மக்களுக்கு முதல்தடவை பன்னிரண்டாயிரம் ஏக்கர் பறிகொடுத்தது போதாதென்று இப்பொழுது ஒரு லட்சம் ஏக்கரே பறிபோயின.

வாழ்ந்த காணிகளும் இல்லை, எதிர்கால விரிவாக்கத்திற்கும் காணியில்லை. காலாகாலமாய் விவசாயம் செய்துவந்த காணிகளும் இல்லை. அனைத்தும் பறிபோய் விட்டன. வன்னியின் தவப்புதல்வன் என நினைத்து அம்மக்கள் 2001 ம் ஆண்டிலிருந்து வாக்களித்து தெரிவுசெய்த அத்தவப்புதல்வனோ ஊடகங்களில் வன்னிமக்களின் காணிகளை மீளப்பெற்றுக்கொடுக்க ஓர் மாபெரும் விளம்பர போர் செய்துகொண்டிருந்தார்.

ஜனாதிபதியைச் சந்திக்க பொது நிறுவனங்கள் உதவவேண்டிய நிலை
————————————————————-
வன்னிமக்களின் அவல நிலையை ஆட்சியாளனிடம் எடுத்துரைக்க சில பொதுநிறுவனங்களும் அதிகாரத்தில் இல்லாதபோதும் ஜனாதிபதியிடம் தனிப்பட்ட செல்வாக்குள்ள சில கொழும்பு அரசியல்வாதிகளும் முன்வந்தார்கள். பொது நிறுவனங்கள் பொதுவாக நடப்பான் வேண்டி மு கா பிரதிநிதிகளையும் அழைத்தார்கள். வருகிறோம் என்றனர் பைசல்காசிமும் ஹுனைஸ் பாருக்கும்.

வேண்டாம், என்றார் தவப்புதல்வன். என்னை ஓர் போராட்ட வீரனாக சித்தரிக்க, எனக்கு வாக்களித்த மக்களுக்கே துரோகமிழைக்கும் என் விளம்பர மேடையில் பங்குதாரரா? பொறுக்கமுடியாது; என்று அவர்களும் தடுக்கப்பட்டார்கள். ஈற்றில் பேராசிரியர் நௌபல் போன்றவர்களின் உதவியுடன் ஜனாதிபதியின் செயலாளருக்கு சில தெளிவுகள் வழங்கப்பட்டன.

சிந்திக்கத் தெரிந்த ஒரு சமூகம் இங்கு எழுப்பவேண்டிய கேள்வி என்ன?

‘வருமுன் காப்போம்’ என்று ஆரம்ப பாடசாலையிலேயே கற்றிருக்கின்றோம். இதே பேராசிரியர் நௌபல் போன்றவர்களை வர்த்தமானி வெளியாவதற்கு முன் அழைத்துச் சென்று தெளிவுபடுத்தியிருந்தால் ஒன்றில் வர்த்தமானியைத் தடுத்திருக்கலாம் அல்லது தாமதப்படுத்த வைத்து மேலதிக தலையீடுகளுக்கு வழிகோலியிருக்கலாம்.

இவை எல்லாவற்றிற்குமேலாக தன்னிடம் இருக்கும் ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்களுடன் அரசைவிட்டு வெளியேறுவேன் இவ்வர்த்தமானியை வெளியிட்டால் என்று ஜனாதிபதியிடமும் பிரதமரிடமும் தெரிவித்திருந்தால் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டிருக்குமா? தொங்குபாராளுமன்றத்தில் ஆட்சி செய்யும் இவ்வரசு துணிந்திருக்குமா?

‘சமூகத்தைப் பாதுகாக்க ஆணை தாருங்கள்’; ‘முஸ்லிம்களுக்கு வரும் ஆபத்தைத் தடுக்க வாக்களியுங்கள்’; என்றெல்லாம் மேடைகளில் முழங்குவதன் அர்த்தம் என்ன? எதற்காக உங்களுக்கு கட்சி? எதற்காக உங்களுக்கு பாராளுமன்ற ஆசனங்கள்? ஐந்து பாராளுமன்ற ஆசனங்களை வைத்துக்கொண்டு அநியாயமாக முசலி மக்களுக்கெதிராக, தொங்கு பாராளுமன்றத்தைக்கொண்ட ஒரு அரசால்வெளியிடப்பட்ட ஒரு வர்த்தமானியை தடுத்து நிறுத்த முடியாத நீங்கள் எந்த முகத்துடன் வந்து வாக்கு கேட்கின்றீர்கள். என்ன அடிப்படையில் உங்களுடன் இருப்பவர்கள் உங்களுக்கு வாக்களிப்பதை நியாயப்படுத்தப் போகிறார்கள்.

உங்கள் கையாலாகத்தனத்தை மறைப்பதற்கு ‘அவர்’ பிழை என்கிறீர்கள். ‘அவரின்’ பிழைகளை மக்கள் பார்த்துக் கொள்வார்கள். ஆனால் அவரின் பிழைகளை சுட்டிக்காட்டுகின்ற தகுதி முதலாவது உங்களுக்கு இருக்கின்றதா? உங்கள் பிழைகளுக்கு முதலில் நீங்கள் பதில் கூறுங்கள்.

அதிகாரிகளை அழைத்துச் சென்று ஏன் காட்டவில்லை ?
—————————————————-
ஆயிரம் தடவை ஊடகவியலாளர்களை முசலிக்கு அழைத்துச் சென்று தொலைக்காட்சிகளிலும் ஏனைய ஊடகங்களிலும் விளம்பரம் செய்யத்தெரிந்தவர் சம்பந்தப்பட்ட திணைக்கள உயர்அதிகாரிகளை ஒருதடவையேனும் அழைத்துச் சென்று ஏன் காட்டவில்லை. எத்தனைபேர் பிழை சொன்னாலும் இறுதியாக ஜனாதிபதி தரவு கேட்பது அந்த அதிகாரிகளிடம்தான். வர்த்தமானியை வரைவதும் அந்த அதிகாரிகள்தான்.

அவர்களை அழைத்துச் சென்று இதுதான் என் மக்கள் என் பாட்டன், பூட்டன் காலத்திலிருந்து வாழ்ந்த்து வந்த காணி. இதோ தஸ்தாவேஜுக்கள். இதோ மக்கள் வெளியேற்றப்பட்டதால் பாழடைந்த பள்ளிவாசல்! இது வில்பத்து ஆயின் யானைகளும் கரடிகளுமா இப்பள்ளிவாயிலைக் கட்டின. இதோ முன்னாள் ஜனாதிபதி ஆர். பிரேமதாச கட்டியவீடுகள்! மக்கள் நீண்ட காலம் வாழாததனால் காடாக காட்சி தருகின்றன. கானகத்தில் கால்நடைகளுக்கு காலாற கல்வீடமைப்பதுண்டோ? இது என் மக்கள் வாழ்ந்தபூமி; என்று அவர்களுக்கு காட்டியிருந்தால் அவர்கள் கொழும்பில் இருந்து முசலியை எட்டியும் பாராமல் GPRS முறையில் எல்லை வரைந்து வர்த்தமானி வெளியிட்டிருக்க முடியுமா?

ஒரு தடவை தவறு செய்து பன்னிரண்டாயிரம் ஏக்கரை இழந்தோம். அடுத்த தடவை தன் கையாலாகாத்தனத்தால் ஒரு லட்சம் ஏக்கரை இழந்ததற்கு இவர் பொறுப்புக் கூறக்கூடாதா? இவருக்கு எதற்காக மக்கள் வாக்களித்தார்கள்? இந்த லட்சணத்தில் எந்த அடிப்படையில் இவர்களுக்கு வாக்களிக்க முடியும்; என்று மக்கள் சிந்திப்பது அவசியமில்லையா? இப்பொழுது கிழக்கில் காணி மீட்க கிராம ஆட்சி சபைகளை கிரயம் தரட்டுமாம்!

அதிகாரிகள் தடுக்கப்பட்டதேன்?
——————————————
சரி, இவர் அதிகாரிகளை அழைத்துச் செல்லவில்லை. அடுத்த கட்சியின் தலைவர் அந்த ‘அதிகாரிகளை’ முசலிக்கு அழைத்துச் சென்றார். அவரது கூட்டத்தைக் குழப்பி, அந்த அதிகாரிகள் அந்த காணிகளைப் பார்க்கவிடமல் தடுத்ததேன்? இதற்குள் இருந்த மர்மம் என்ன? இதனைக் கேட்டவர்கள் யார்? இன்று இவருக்காக வாக்குத் தேடுபவர்கள் கேட்டார்களா? அல்லது அவராவது கூறினாரா? இனிமேலாவது கூறுவாரா? இவர் கூறுகிறார், அவர் பிழையாம்; இவருக்கு வாக்களிக்கட்டுமாம். அதிகாரிகளை அழைத்துவந்த அந்த அடுத்த கட்சியின் தலைவருக்கெதிராக தனது இணைப்பாளர் தலைமையில் ஆர்ப்பாட்டம் செய்யவைத்து அவரை ‘ நாசமாப்போ’ என்று திட்டவைத்தார்.

அந்த கட்சியின் தலைவர் அதற்கு முன்பும் முசலி போய்த்தான் இருக்கிறார். ஆனால் அந்த அதிகாரிகளை அழைத்துப்போனபோதுதான் ‘ நாசமாப்போ’ என்று திட்டவைத்தார்; என்றால் அவரும் அந்த அதிகாரிகளை அழைத்துச்செல்ல விரும்பாமல் அடுத்தவரும் அழைத்துச் செல்வதை விரும்பாமல் விடக்காரணம் என்ன?

காணி பறிப்புக்கெதிராக சத்தியாக்கிரகம்
—————————————————-
இந்த காணி பறிப்புக்கெதிராக இவரால் முசலியில் ஏற்பாடு செய்யப்பட்ட ஓர் சத்தியாக்கிரகப் போராட்டம் தொடர்ச்சியாக சில நாட்கள் இடம்பெற்றன. வழமைபோன்று வானைத்தொடும் விளம்பரங்களும் கொடுக்கப்பட்டன. வீறுகொண்டெழுந்துவிட்டான் வீரமகன், கானகமாக்கப்பட்ட காணிகளை கண்டிப்பாய் மீளப்பெற்றிடுவான்; என்று மக்களும் நம்பினார்கள்.

‘மோடி’ வரவுக்காய் மேளங்கள் முழங்கின. மோடிவரும்போது முசலியில் போர்முரசா? முடியாது. முடித்துவிடு முசலியின் முறுகலதை; முழங்கினானான் ( நாட்டு) மன்னவனும். பறந்தனர் மந்திரிகள், மந்திரக்கோலுடன் முசலிக்கு. தீர்ந்தது பிரச்சினை, தீர்வுக்கு பேச்சுவார்த்தை திட்டமாக இரண்டு நாட்களில். நம்புங்கள் எங்களை, நகருங்கள் இங்கிருந்து; நவின்றனர் மந்திரிமார்; நம்பினர் நம்மவரும் அந்தரங்கம் அறியாமல்.

இங்கு அறிவுடமைச் சமுதாயம் எழுப்பவேண்டிய கேள்விகள்:
—————————————————————
மோடி மீண்டும் நாடு திரும்பியதும் பேச்சுவார்த்தை. பேச்சுவார்த்தைக்கு உறுதியளிக்கப்பட்ட நாள் சனிக்கிழமை. உத்தரவாதமளிக்கப்பட்ட தினத்திற்கும் பேச்சுவார்த்தைக்காக குறிக்கப்பட்ட தினத்திற்கும் இடைவெளி இரண்டு அல்லது மூன்று நாட்கள்.

சனிக்கிழமை விடுமுறை நாள். அதிகாரிகள் வரமாட்டார்கள். அல்லது கண்டிப்பான விசேட உத்தரவின் மூலம் அவர்களை வரவைக்க வேண்டும். (அந்த சனிக்கிழமை உத்தரவாதமளிக்கப்பட்ட கூட்டம் நடைபெறவில்லை; என்பது ஒரு புறமிருக்கட்டும்) அவ்வாறான ஒரு உத்தரவாதத்தை கொடுத்து அம்மக்களின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவரவேண்டிய ஏற்பட்ட அவசரமென்ன? மோடியின் வருகை காரணமில்லையென்றால். தீர்வு கிடைக்கும்வரை போராட்டம் ஓயாது; என்று முழங்கிய கோசத்திற்கு என்ன நடந்தது; அந்த போராட்ட வேங்கை அதற்கு ஏன் சம்மதித்தார்? ஆனால் மோடியின் வருகை காரணமே இல்லை; என சாதித்தார்கள்.

அம்மக்களின் பிரதிநிதி அவர். அவரது உள்ளத்தில் தூய்மை இருந்திருந்தால் அவருக்கு நம்பிக்கை இருந்திருக்க வேண்டும், தம்மக்கள் தம்மை நம்புவார்கள்; என்று. எதற்காக வேறு அமைச்சர்களை அழைத்துச் சென்றார் முசலி மக்களை நம்பவைக்க. ஏனெனில் அவருக்குத் தெரியும், போராடிய மக்களுக்கு துரோகம் செய்கிறோம்; நம்மை மக்கள் நம்பமாட்டார்கள்; என்று. ஜனாதிபதிக்கும் தெரியும், இவர் சொன்னால் மக்கள் நம்பமாட்டார்கள்; என்று. இன்று இவர் தன்னை மறைந்த தலைவருக்கு ஒப்பிடுகின்றார், மறைந்த தலைவர் மக்கள் தன்னை நம்பமாட்டார்கள்; என்று அரசியல் செய்த சந்தர்ப்பமுண்டா?

இதன் அந்தரங்கமென்ன?
———————————-
இந்த சம்பவம் நடப்பதற்கு ஒரு சில வாரங்களுக்கு முன்பிருந்தே இவரது அமைச்சு பறிபோகப்போகின்ற செய்தி ஊடகங்களில் அரசல் புரசலாக வெளிவந்து கொண்டிருந்தது. நாடகம் அரங்கேறியது. மோடி வருகையின்போது நாட்டில், குறிப்பாக வட கிழக்கில் போராட்டங்கள் நடைபெறுவதை அரசு விரும்பாது. எனவே, அரசுக்கு போராட்டம் முடிவுற வேண்டும். இவருக்கு அமைச்சு பாதுகாக்கப்பட வேண்டும். பேச்சுவார்த்தை நடுவர்கள் கொழும்பின் சில அரசியல்வாதிகள்.

எனவே, இவர் எத்தனை கரட்? என்பதை சிந்தியுங்கள். இவர்தான் இப்பொழுது கிழக்கின் விடிவுக்காய்ப் புறப்பட்டிருக்கின்றார். அடுத்தவரை பிழை என்கிறார். இவரிடம் இருந்து முஸ்லிம் சமுதாயம் பாதுகாக்கப்பட வேண்டுமா? இல்லையா? முடிவு உங்கள் கைகளில்.

( தொடரும்)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -