இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் சாடல்
"நாங்கள் செலவு செய்து அரசியலுக்கு கொண்டு வந்து அரசியல் அடையாளத்தைப் பெற்றுக்கொடுத்த பின்னர் எமக்குத் துரோகம் செய்து விட்டுச் சென்றவர்களுக்கு பாடம் புகட்டுவதற்கு சிறந்த சந்தர்ப்பம் இதுவாகும் " என புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார். இதேவேளை, காத்தான்குடி மக்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை திட்டமிட்டு இல்லாமல் செய்ந்தவர்கள் காத்தான்குடி நகர சபையை அதிகாரமற்ற சபையாக மாற்றுவதற்கான சதித்திட்டங்களையும் தீட்டி வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
காத்தான்குடி பதுறியா பள்ளி சதுக்கத்தில் நேற்று திங்கட்கிழமை இரவு நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் இது தொடர்பில் மேலும் கூறியதாவது:-
தேர்தல் நெருங்கும் போது எமக்கு எதிராக எங்களைத் தோற்கடிப்பதற்கு பல சதித்திட்டங்கள் தீட்டப்படுகின்றன. அவர்களால் தோற்கடிக்க மாத்திரமே முடியும். இந்த மண்ணைக் கட்டியெழுப்ப ஒருபோதும் முடியாது.
கடந்த பொதுத் தேர்தலில் என்னைத் தோற்கடித்தார்கள். அவர்கள் என்னைத் தோற்கடிக்கவில்லை இந்த மண்ணை இந்த மண்ணின் பிரதிநிதித்துவத்தையே தோற்கடித்தனர்.
என்னை திட்டமிட்டு தோல்வியடையச் செய்ந்தாலும் எமது மக்களின் கண்ணீர், பிரார்த்தனை எனக்கு தேசியப் பட்டியலுடன் இராஜாங்க அமைச்சும் பதவியும் கிடைத்தது. தற்போது, உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் மீண்டும் நான் சார்ந்த கட்சியை தோற்கடிக்க வேண்டும் என்று சதித்திட்டம் தீட்டியுள்ளனர். ஆனால், இம்முறை மக்கள் மிகத்தெளிவாக இருக்கின்றனர். மீண்டும் ஏமாற மாட்டார்கள்.
காத்தான்குடி நகர சபைத் தேர்தலில் 10 வட்டாரங்களையும் நாங்கள் வெற்றி கொள்வோம். எமக்கு எதிராக சதித்திட்டம் தீட்டுபவர்களை தோற்கடித்து செல்லாக்காசுகளாக மாற்றுவோம்.
நாங்கள் அரசியலுக்கு கொண்டு வந்து செலவு செய்து அரசியல் அடையாளத்தைப் பெற்றுக்கொடுத்த பின்னர் எமக்குத் துரோகம் செய்து விட்டுச் சென்றவர்களுக்கு பாடம் புகட்டும் சந்தர்ப்பமும் இதுவாகும்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மரச்சின்னத்தில் போட்டியிட்டு கடந்த பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற ஒரே ஒருவர் அலி சாஹிர் மௌலானா மாத்திரமே. அவருக்கும் அவரது கட்சியின் பிரதித் தலைவர் முன்னாள் முதல்வர் நஸீர் அஹமட்டுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள பிரச்சினையை தீர்த்து வைக்க வேண்டிய கட்சித் தலைவர் ஹக்கீம் பிரச்சினைக்கு உரம் சேர்த்துள்ளார். ஒரே கட்சியினர் இரு அணிகளாக பிரிந்து தேர்தலில் போட்டியிடுகின்றனர். இவ்வாறான நிலை காத்தான்குடியில் மாத்திரமல்ல வேறு எங்குமே நடைபெறக் கூடாது. என்னை விமர்சித்து காத்தான்குடியை பிளவடையச் செய்யலாம் என்ற எண்ணத்தில் சிலர் இருக்கிறார்கள். நான் இருக்கும் வரை அது நடைபெறாது என்பதை அவர்களுக்குத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
வடக்கும் கிழக்கும் இணைக்கப்பட வேண்டும் என்று தமிழர் தரப்பு கோருகின்றனர். அது அவர்களுக்கு சாதாகமாக இருந்தாலும் முஸ்லிம்களுக்கு அது பாதிப்பாகவே அமையும். இந்த விடயம் பற்றி தெளிவாக பேச வேண்டிய ஹக்கீம் மௌனமாகவே இருக்கின்றார். இது எதிர்காலத்தில் முஸ்லிம்களுக்கு பாதிப்பான சூழலை ஏற்படுத்தும். – என்றார்.