
க.கிஷாந்தன்-
மத்திய மாகாண சபை உறுப்பினர் கணபதி கனகராஜ்
சௌமிய மூர்த்தி தொண்டமான் அவர்களின் பெயரை மாற்றுவதற்கு அமைச்சரவை பத்திரத்தை தாக்கள் செய்து அனுமதியை பெற முடியுமாகவிருந்தால் ஏன் ஆசிரியர் உதவியாளர்களை ஆசிரியர் சேவைக்கு உள்வாங்குவதற்கு அமைச்சரவை பத்திரத்தை தாக்கள் செய்து அனுமதியை பெற முடியாது என மத்திய மாகாண சபை உறுப்பினர் கணபதி கனகராஜ் கேள்வி எழுப்பியுள்ளார்.
அம்பகமுவ பிரதேச சபைக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து நடைபெற்ற கூட்டங்களில் கலந்து கொண்டு பேசும் போது இவ்வாறு அவர் கேள்வி எழுப்பினார்.
தற்போது 15000ற்கும் மேற்பட்ட இந்திய வம்சாவளியினர் அரச துறையில் தொழில் செய்கின்றனர். இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மலையகத்தில் படித்துவிட்டு தொழில் வாய்ப்பை எதிர்பார்பவர்களை கருதிற்கொண்டு காலத்திற்கு காலம் அரச தொழில்வாய்ப்பை பெற்றுக்கொடுத்திருக்கிறது.
அரச தொழில் வாய்ப்பை பெருவது இலகுவான விடயமல்ல என்றாலும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் அரசியல் பலத்தை பயன்படுத்தி எமது பேரம் பேசும் யுக்தியின் மூலம் கடந்த காலங்களில் மலையக இளைஞர், யுவதிகளின் தொழில் தேவை நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இதனால் இன்று பல்வேறு அரச திணைக்களங்களிலும் இந்திய வம்சாவளியினர் பிரகாசித்துக்கொண்டிருக்கின்றனர்.
ஒரே தடவையில் அதிகளவானவர்களுக்கு ஆசிரியர் தொழிலை பெற்றுக்கொள்ளும் நோக்கில் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் பொது செயலாளர் ஆறுமுகன் தொண்டமான் முன்னால் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் பேசியதால் 3000ம் ஆசிரியர் உதவியாளர்களை பெருந்தோட்ட பாடசாலைகளுக்கு நியமிக்க இணக்கங்காணப்பட்டது.
அத்துடன் ஒரு அமைச்சரவை பத்திரத்தின் ஊடாக இவர்களை நியமித்த ஒரு வருட காலத்தில் நிரந்தரமாக்குவதற்கும் அப்போதய கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தனவுடன் இணக்கங்காணப்பட்டிருந்தது. ஆனால் 2015ம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டதனால் புதிய அரசாங்கம் இந்த விடயத்தை சரியான முறையில் கையாளாமல் ஆசிரியர் உதவியாளர்களை பல்வேறு வகையான பிரச்சினைகளுக்குல் தள்ளிவிட்டுள்ளது. இவர்களை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளுக்கு செல்லவிடாமல் தடை ஏற்படுத்தப்பட்டது. இந்த விடயத்திலும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலையிட்டு ஆசிரியர் உதவியாளர்களுக்கு நியாயம் கிடைக்க வழிசெய்தது.
ஆசிரியர் உதவியாளர்களை ஒரு அமைச்சரவை பத்திரத்தின் ஊடாக நிரந்தரமாக்குமாறு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பல முறை கோரிக்கை விடுத்தும் அதற்கான எவ்வித முன்னெடுப்பையும் கல்வி அமைச்சு மேற்கொள்ளவில்லை. ஆனால் மலையக மக்களின் கல்விக்கு வித்திட்ட, மலையகத்தில் பல்வேறு கல்வி நிறுவனங்கள் உருவாகுவதற்கு காரணமாகவிருந்த, இலங்கை தொழிலாளர் காங்கிரசின் ஸ்தாபக தலைவர் சௌமிய மூர்த்தி தொண்டமான் அவர்களின் பெயரால் இயங்கிய அரச நிறுவனங்களில் இருந்து அவருடைய பெயரை நீக்குவதற்கு அமைச்சரவை அங்கிகாரம் பெறப்பட்டுள்ளது. இவர்களால் கல்வி நிறுவனங்களை உறுவாக்கிய தொண்டமான் அவர்களின் பெயரை அழிக்க முடிந்ததே தவிர புதிதாக ஒரு கல்வியற் கல்லூரியையோ, தொழிற்பயிற்சி நிறுவனத்தையோ, அல்லது வாக்குறுதி வழங்கியதை போல மலையக பல்கலைகழகத்தையோ உருவாக்க முடிந்ததா?
ஆசிரியர் நியமனங்களுக்கு உரிமை கொண்டாட முற்படும் கல்வி ராஜாங்க அமைச்சர் ராதாகிருஸ்ணன் ஆசிரியர் உதவியாளர்களை நிரந்தரமாக்குவதற்கு முடியாத பாதாகரமான நிலையிலுள்ளார்.
இந்த நாட்டில் எவர் வேண்டுமானாலும் அமைச்சர் பதவியை அலங்கரிக்கலாம். ஆனால் மலையக மக்களுக்கான பேரம் பேசும் சக்தியை அவர்களால் உருவாக்க முடியாது என்பதற்கு ஆசிரியர் உதவியாளர் பிரச்சினை ஒரு சிறந்த உதாரணமாகும். இதனால் தான் இலங்கை தொழிலாளர் காங்கிரசிற்கு அரசியல் பலத்தை வழங்குமாறு மலையக மக்களிடம் கோருகிறோம் எனவும் கணபதி கணகராஜ் தெரிவித்தார்.