காரைதீவில் மீன்சின்ன வேட்பாளர் சி. நந்தேஸ்வரன் கேள்வி?
இந்த உள்ளுராட்சித்தேர்தலுக்கும் வந்து ஜ.நா. கதை கதைக்கிறார்கள்.கடந்த 30வருட காலமாக த.தே.கூட்டமைப்பினர் திரும்பத்திரும்பக் கூறுவதைக்கேட்டு வாக்களித்து ஏமாந்துபோனோம். இன்னமும் ஏமாற வேண்டுமா? சிந்தியுங்கள்.
இவ்வாறு காரைதீவு பிரதேசசபைக்கான தேர்தலில் சுயேச்சைக்குழ-1 இன் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சின்னத்துரை நந்தேஸ்வரன் தெரிவித்தார்.
காரைதீவு 3ஆம் பிரிவில் ஸ்ரீ சித்தானைக்குட்டி ஆலயமருகேயுள்ள வீடொன்றில் நடைபெற்ற ஆதரவாளர்களுடான சந்திப்பில் கலந்துரையாடுகையில் மேற்படி குறிப்பிட்டார். அவருடன் வேட்பாளர்களான ந.ஜெயகாந்தன் வை.சத்தியமாறன் ஆ.பூபாலரெத்தினம் ஆகியோரும் உடனிருந்தனர்.
அவர் மேலும் கூறுகையில்:
கிழக்கு மாகாணத்தையே முஸ்லிம்களுக்க தாரைவார்த்தவர்களுக்கு காரைதீவை தாரை வார்ப்பது ஒன்றும் பெரியவிடமல்ல. கேவலம் சம்மாந்துறையையும் ஆலையடிவேம்பையும் காப்பாற்றமுடியாதவர்கள் காரைதீவைக் எல்லைகளை காப்பாற்றப்போகிறார்களாம்.
எமது சுயேச்சை ஜ.நா. செல்லுமா என்று கேட்டார் எம்.பி.. நான் தெரியாமல் கேட்கிறேன். அம்பாறை மாவட்டத்திற்கென நியமிக்கப்பட்ட அவரால் மாவட்ட ஏன் அவரது பிரதேச பிரச்சினையையே தீர்க்கமுடியாமல் போய்விட்டது. அதற்குள் ஜ.நா.செல்கிறாராம்.
கூரை ஏறி கோழி பிடிக்கத்தெரியாதவன் வானம் ஏறி வைகுந்தம் போவானாம் என்று சொல்வார்கள். அதுபோல அவரின்கதை உள்ளது.
அவ்வப்போது வந்து தாயகம் தேசியம் வடக்கு கிழக்கு இணைப்பு ஜெனீவா ஜ.நா.. இப்படி பல உணர்ச்சிமிகு வசனங்களைப்பேசி மக்களை உசுப்பேற்றி தாம் பாராளுமன்றம் செல்வார்கள். அவர்கள் கொந்தராத்து அதுவும் அவர்களது பகுதியில் மட்டும் செய்வார்கள். ஆனால் இங்கு வாக்களித்த மக்கள் அதேநிலையில் இருப்பார்கள்.
இம்முறையும் வருவார்கள். வீரவசனம் பேசுவார்கள். அவைகள் எமக்கு சோறுபோடாது.
சுனாமியால் வந்த வரப்பிரசாதங்களை விட இந்த காரைதீவு மண்ணில் குறிப்பிடத்தக்க அபிவிருத்திகளை இந்தகட்சியினரால் செய்யமுடிந்ததா?
அபிவிருத்தி அபிவிருத்தி என்கிறார்கள். அவர்களை அபிவிருத்தி செய்தார்களே தவிர இந்த மண்ணை அபிவிருத்திசெய்யவில்லை. அநேகம் தேவையில்லை. இந்தவட்டாரத்திலுள்ள சித்தானைக்குட்டி ஆலயத்திற்கான வீதியைப் பாருங்கள். இவர்களது சேவையை அறிந்துகொள்ளலாம்.
ஒவ்வொரு தேர்தலுக்கும் ஒவ்வொரு கட்சி. ஒவ்வொரு சின்னம். இம்முறையும் வருகிறார்கள். இவர்களுக்கு அளிக்கும் வாக்குகள் மாற்றானுக்குச்செல்லும் என்பதில் எவ்வித ஜயமுமில்லை. எனவே அவருக்கு ஒரு வாக்குத்தானும் அளித்து பொன்னான வாக்குகளை வீணடிக்கக்கூடாது.
காரைதீவானின் வாக்குகள் மாற்றானுக்கு செல்லவேண்டுமா? சிந்தியுங்கள்.
காரைதீவில் பிறக்காதவருக்கே வாக்களித்து 4வருடம் அரசியல்செய்ய வாய்ப்பளித்தவன் காரைதீவான். அவர்கள் பின் மாறிமாறி கட்சிமாறி கொள்கை மாறி இன்று மாற்றானுக்கு வாக்குச்சேகரித்துக்கொடுக்க வந்துள்ளனர். ஒரு வாக்குக்கூட அவர்களுக்கு அளிக்கவேண்டாம்.