அந்தவகையில் நாளை (2018.02.16) ஆரம்ப நாளாக இருப்பதனால் மாலை 5.00 மணிக்கு புனிதம் நிறைந்த கொடியானது ஊரின் தாய் பள்ளியான முஹையித்தீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசலில் இருந்து பக்கீர் ஜமாஅத்தினர் , உலமாக்கள் , பள்ளிவாசல் நிருவாகிகள், கல்விமான்கள் , புத்திஜீவிகள் மற்றும் ஊர்மக்கள் புடைசூழ தீன் கலிமா முழக்கத்துடன் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு நாஹுர் ஆண்டகை தர்ஹா வளாகத்தில் வானுயர்ந்து காணப்படும் ஏழு தட்டு பெரிய மினராவிலும் மூன்று தட்டு சிறிய மினராவிலும் மற்றும் பள்ளியின் மேலே உள்ள மினராவிலும் ஏற்றி வைக்கப்பட்டு உலமாக்களினால் துஆ பிரார்த்தனை இடம்பெறும். அதன் பின்னர் எண்கோண மண்டபத்திற்கு அருகாமையிலுள்ள மினராவில் பக்கீர் ஜமாஅத்தினரினால் சிவப்பு நிறமுடைய கொடியானது ஏற்றிவைக்கப்பட்டு அவ்விடத்திலும் துஆ பிரார்த்தனை ஒன்று இடம்பெற்று நிகழ்வுகள் ஆரம்பமாகும்.
அன்றிலிருந்து 12 தினங்களும் தர்ஹாவில் பக்திப் பரவசம் பொங்கிடச் செய்யும் நிகழ்சிகளான தினமும் அல்குர்ஆன் ஓதுதல் , திகர் மஜ்லிஸ் விசேசமாக வெள்ளிக்கிழமை இரவுகளில் , இஷாஅத் தொழுகையினைத் தொடர்ந்து மீரான் சாஹிப் மௌலிது பாராயணம் செய்தல், மௌலிதினை தொடர்ந்து ஆன்மீக அறவழிப் பாதையில் ஒளிச்சுடர் பரப்பும் உலமாக்களினால் சன்மார்க்க சொற்பொழிவு ,அதனைத் தொடர்ந்து எண்கோண மண்டபத்தில் பக்கீர் ஜமாஅத்தினரின் றிபாய் ராத்திப் மஜ்லிஸ் போன்ற நிகழ்வுகள் இடம்பெறும்.
அத்தோடு உலமாக்களின் பயான் நிகழ்வினைத் தொடர்ந்து பக்தர்களினால் காணிக்கையாக வழங்கப்பட்ட பொருட்கள் தர்ஹாவிற்கு முன்னாள் நிர்வாகத்தினரினால் ஏலத்தில் விடப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவ்வாறு 12 தினங்கள் அனைத்து நிகழ்வுகளும் இடம்பெறும்.
இறுதித் தினமாகிய 2018.02.28ம் திகதி புதன் கிழமை மாலை 05.00 மணிக்கு புனித கொடியானது இறக்கி வைக்கப்பட்டு மாபெரும் கந்துாரி அன்னதானமும் வழங்கி வைக்கப்படும்.