மக்களிடமிருந்து முன்மொழிவுகள் வரவேண்டும் என்கிறார் கோடீஸ்வரன்!
காரைதீவு நிருபர் சகா-கடந்தபலவருடங்களாக காரைதீவு விவசாயம் தொடர்பில் பல தடவைகள் பல முன்மொழிவுகளை சமர்ப்பித்திருந்தோம்.ஆனால் இதுவரை ஒருசதக்காசும் கிடைக்கவில்லை. எம்மைத் திட்டமிட்டுப்புறக்கணிக்கின்றார்களா? அல்லது இங்கு விவசாயம் தேவையில்லை என்று கருதுகின்றார்களா?
இவ்வாறு காரைதீவுப் பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டத்தில் கருத்துரைத்த காரைதீவுப்பிரதேச கமநலஅபிவிருத்தி உத்தியோகத்தர் மா.சிதம்பரநாதன் கேள்வியெழுப்பினார்.
காரைதீவுப் பிரதேச ஒருங்கிணைப்புக்குழக்கூட்டம் நேற்று(16) வியாழக்கிழமை பிற்பகல் த.தே.கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஏ.கே.கோடீஸ்வரன் தலைமையில் பிரதேசசெயலககேட்போர்கூடத்தில் நடைபெற்றது.
காரைதீவு பிரதேச செயலாளர் கந்தையா லவநாதனின் ஒருங்கிணைப்பின்கீழ் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு திணைக்களத்தலைவர்கள் சமுகமட்ட அமைப்புகளின் தலைவர்கள் அதிபர்கள் என பலதரப்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.
முன்னதாக காரைதீவுப்பிரதேச வைத்தியசாலைக்கென பல கோடிருபா பெறுமதியான காணியினை அன்பளிப்புச்செய்து அண்மையில் மறைந்த பேராசிரியர் வைத்தியகலாநிதி த.வரகுணத்திற்கான அனுதாபப்பிரேரணையை முன்வைத்தார் உதவிக்கல்விப்பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா. அதன்பிரகாரம் கூட்டத்தின்தலைவர் கோடீஸ்வரன் எம்பி. அன்னாரின் தன்னலமற்ற சேவையைப் பற்றி வியந்து அனுதாபஉரைநிகழ்த்தியதோடு சபையில் இருநிமிடநேரம் மௌனாஞ்சலி செலுத்தக்கோரினார். சபையும் எழுந்துநின்று மௌனாஞ்சலியை செலுத்தியது.
முன்னால் வைக்கப்பட்டிருந்த மங்கலவிளக்கு ஏற்றப்படாமலேயே கூட்டம் ஆரம்பமாகியமை குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து மா.சிதம்பரநாதன் மேலும் கூறுகையில்:
பெரியநீர்ப்பாசனத்தின்கீழ் வருகின்ற எமது பிரதேச விவசயாத்திற்கு மத்தியஅரசால் ஒருசதக்காசும் கிடைக்கவில்லை. கமநலசேவை நிலையங்களுக்கென தலா 50லட்சருபா ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதுகூட எமக்குவழங்கப்படவிவ்வை; வெட்டப்பட்டிருக்கிறது. அருகிலுள்ள சிறிய பாலம் சீரழிந்துபோய் போக்குவரத்திற்கு இடைஞ்சலாகவுள்ளது. பூரான்பரி கல்லரிச்சல் வாய்க்கால்கள் 10வருடங்களாக புனரமைக்கப்படாதுள்ளன. இதனை யார் கவனிபப்து? என கேள்வியnழுப்பினார்.
நாட்டிலே தளம்பல் நிலை!
அங்குரையாற்றிய பாராளுமன்றஉறுப்பினர் கோடீஸ்வரன்:
இன்று நாட்டிலே இருபெரும் கட்சிகளிடையே குழப்பகரமான சூழ்நிலை தொடர்கிறது. அதனால் அரசஇயந்திரம் தளம்பல்நிலயிலுள்ளது.
எனினும் எமது பிரதேச அபிவிருத்தியை நிருவாகத்தை ஊழலற்றமுறையில் வினைத்திறனுடன் சீரானமுறையில் முன்கொண்டுசெல்ல இக்கூட்டங்கள் வழிவகுக்கவேண்டும்.
எந்த முன்மொழிவானாலும் மக்களிடமிருந்துதான் வரவேண்டும். அடிமட்டத்திலிருந்து வருகின்ற முன்மொழிவுகள் மக்களின் தேவைகளைத்தீர்க்கும். குறிப்பாக தமிழர் முஸ்லிம்கள் அந்நியோன்யமாக வாழ்கின்ற இப்பிரதேசத்தில் பிரதேச அபிவிருத்தியை மையப்படுத்திய செயற்றிட்டங்களை ஒரு புரிந்தணர்வுடன் முன்னெடுக்கவேண்டும். என்றார்.
காரைதீவு பிரதேசசபைச் செயலாளர் அ.சுந்தரகுமார் அங்கு பேசுகையில்:
வலுவூட்டல் நிகழ்ச்சித்திட்டத்தின்கீழ் பல வைலத்திட்டங்களை சபையால் செய்துள்ளோம். கிராமவீதிகள் அனைத்தும் எமது சபைக்கட்டுப்பாட்டிலுள்ளன. அவற்றை புனரமைக்கும்போது எமது கவனத்திற்குக்கொண்டுவரப்பட்டு அனுமதி பெறப்படவேண்டும். இருசாராரும் இணைந்தே ஊரை அபிவிருத்திசெய்யவேண்டும். என்றார்.
ஆலயபிரதிநிதி இரா.குணசிங்கம் கருத்துரைக்கையில்:
காரைதீவில் ஒரு கடற்படை முகாமுள்ளது. ஆனால் அங்கள்ள பெயர்ப்பலகையில் சாய்ந்தமருது எனப்பெயரிடப்பட்டுள்ளது. இது என்ன நடைமுறை? காரைதீவு எல்லைக்குள் இருக்கின்ற ஒரு முகாமிற்கு வேறுஊரின்பெயர் எதற்காக? சிலவேளை அந்த ஊருக்கான முகாமென்றால் அது அங்கிருக்கட்டும்.
அதுபோல காரைதீவு எல்லைக்குள்வருகின்ற வர்த்தக ஸ்தானங்கள் கடைகளுக்கெல்லாம் காரைதீவு என்றபெயரிருக்கவேண்டும்.எல்லையில் பெயர்ப்பலகை இடப்படவேண்டும். என்றார்.
2000ஏக்கர் விவசாயத்திற்கு பேராபத்து!
வளைந்தவட்டை விவசாயஅமைப்பின் தலைவரும் முன்னாள் அதிபருமான ஜ.எம்.இப்றாகிம் கருத்துரைக்கையில்:
காரைதீவுப்பிரதேசத்திற்குட்பட்ட 2000 ஏக்கர் வயல்நிலம் பேராபத்திலுள்ளது. வேளாண்மை செய்யமுடியாதநிலை எழுந்துள்ளது.
இந்த வயல்களுக்கு செல்லும் பாதை தூர்ந்துபோய்க்கிடக்கிறது. விவசாயிகள் பலத்த சிரமத்தின் மத்தியில் தமது வேலைகளை மாற்றுப்பாதையூடாக நீண்டதூரம் சுற்றிவளைத்து செய்யவேண்டியுள்ளது.
இந்த நவீனகாலத்தில் இன்னும் பசளையை தலையில் சுமந்துசெல்லவேண்டிய துர்ப்பாக்கியநிலையுள்ளது. விவசாயப்பாதைகள் அனைத்தும் சீரழிந்துபோயுள்ளது என்றார்.
வீதிகள் அவலநிலையில்:
காரைதீவு உள்ளுர் வீதிகள் தொடர்பில் அதிபர்களான இ.ரகுபதி எஸ்.மணிமாறன் உ.க.பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா அதிபர் சைபுதீன் உள்ளிட்ட பலர் கருத்துரைத்தனர்.
தேசிகர் வீதி பலவருடகாலமாக புனரமைக்கப்படாமையினால் போக்குவரத்திற்க உகந்ததல்லாமலுள்ளது. கொம்புச்சந்தியிலுள்ள தவாளிப்பில் தண்ணீர் தேங்குவதால் மாணவர் முதல் பாதசாரிகளின் போக்குவரத்திற்கு இடையூறாகவுள்ளது. விபுலானந்தமகாவித்தியாலயவீதி காபட் இடப்படுவதெப்போது?
சித்தானைக்குட்டி வீதி விஸ்ணுவித்தியாலய வீதி போன்ற பலவீதிகளின் குறைபாடுபற்றிப் பேசப்பட்டன. விபுலானந்த மத்திய மகாவித்தியாலய முன்முகப்புவாயில் மற்றும் மண்டபதளபாடம் பற்றியும் எடுத்துரைக்கப்பட்டன.
பாடசாலைகளுக்கான தளபாடத்தேவை பற்றியும் எடுத்துரைக்கப்பட்டன. காரைதீவுக்கான நிரந்தர கோட்டக்கல்விப்பணிப்பாளர் பதவி நிரப்பப்படாமல் இழுத்தடிக்கப்பட்டுவருவது தொடர்பாகவும் கூறப்பட்டது.
மாவடிப்பள்ளி முன்னாள் அதிபரும் பள்ளித்தலைவருமான நூகுலெவ்வை கருத்துரைக்கையில்
காரைதீவிலிருந்து மாவடிப்பள்ளி வரை பிரதானவீதியில் மின்விளக்குப்பொருத்துகையில் தொடர்ந்துபொருத்தவேண்டும். வேளாண்மை அறுவடை முடிந்ததும் யானைகள் வரத்தொடங்கும்.
அதுமட்டுமல்ல பிரதானவீதிக்கு வரும்மாவடிப்பள்ள உள்வீதிகள் உயர்ந்திருப்பதால் சில விபத்துக்கள் நடக்கின்றன. அதனை சீர்செய்யவேண்டும். என்றார்.
கூட்டத்திற்கான அழைப்பிதழ் ஆங்கிலத்தில் அல்லாமல் தமிழில் வழங்கப்படவேண்டும் என சகா கோரியதன்பேரில் அடுத்தகூட்டங்களுக்கு தமிழில் அழைப்பிதழ் அனுப்பப்படுமென்று பிரதேச செயலாளர் லவநாதன் உறுதியளித்தார்.