தமிழரசுகட்சி செயலருடன் காரைதீவு சுயேச்சைக்குழுத்தலைவர் பேச்சு!

காரைதீவு நிருபர் சகா-

லங்கைத்தமிழரசுக்கட்சிசெயலாளர் சட்டத்தரணி கி.துரைராஜசிங்கத்துடன் காரைதீவு பிரதேசசபைக்காகப் போட்டியிடும் ஊர்மக்கள் சார்பில் களமிறங்கியிருக்கும் சயேச்சைக்குழு-1 இன் தலைவர் ச.நந்தகுமார் கலந்துரையாடியுள்ளார்.

காரைதீவில் அண்மையில் நடைபெற்ற த.தே.கூட்டமைப்பு பிரசாரக்கூட்டத்தில் செயலாளர் துரைராஜசிங்கம் பேசுகையில் 'எமது கட்சியில் தப்பபிராயமிருந்தால் சுயேச்சைக்குழுவினர் தம்மோடு முன்னரே பேசியிருக்கலாமே. நாங்கள் வந்து அவர்களை சந்திக்கமுடியாது ஆனால் அவர்கள் எங்களை வந்து சந்தித்திருக்கலாமே.இப்பவும் காலம் போகவில்லை.வந்து சந்தியுங்கள் 'என்று தெரிவித்திருந்தார்.

அதற்கு பதிலளிக்கும் வகையில் சுயேச்சைஅணித்தலைவர் நந்தகுமார் தொலைபேசிமூலம் தொடர்புகொண்டு அவரிடம் நாகரீகமாக நடந்தவைகளை விளக்கியுள்ளார்.
ஜயா.எமது ஊரின் இன்றைய களநிலவரத்தைக் கருத்திற்கொண்டு ஒரு அணியில் தேர்தலில் களமிறங்கவேண்டும் என அறங்காவலர்சபையின் ஏற்பாட்டில் ஊர்ப்பொதுமக்களால் தெரிவுசெய்யப்பட்ட மகாசபையின் தீர்மானத்திற்கமைவாக சுயேச்சைக்குழு களமிறக்கப்பட்டது.

அதற்கு முன்பதாக தங்கள் த.தே.கூட்டமைப்பு எம்.பி. கோடீஸ்வரனை அழைத்து மணிமண்டபத்தில் எமது நிலைப்பாட்டை பணிவாகத்தெரிவித்தோம்.
இம்முறை விட்டுத்தாருங்கள். நாங்களெல்லாம் தொடர்ந்து த.தே.கூட்டமைப்பை ஆதரித்துவந்தவர்கள்தான். நாம் தமிழ்த்தேசியத்திற்கு எதிரானவர்களல்ல. ஆனால் இம்முறை களநிலைவரம் அசாதாரணமாக உள்ளதால் விட்டு;தாருங்கள். நாங்கள் எதிர்வரும் மாகாணசபை மற்றும் பாராளுமன்றத்தேர்தலில் த.தே.கூட்டமைப்பிற்கு 100வீதம் வாக்களிப்போம் என்று கெஞ்சிக்கேட்டோம். ஆனால் அவர் மாறவில்லை.எமது கட்சி வடக்கு கிழக்கு எங்கும் தேர்தலில் இறங்கும். காரைதீவிலும் இறங்கும் என்றார்.

ஆனால் சம்மாந்துறையிலும் ஆலையடிவேம்பிலும் அவரால் தங்கள் வேட்புமனு நிராகரிக்கப்பட்டமை ஒன்றும் தெரியாதவிடயமல்ல. அங்குள்ள தமிழ்மக்களுக்கு என்னசொல்லப்போகிறீர்கள்? தனிஒரு மனிதனால் ஆயிரமாயிரம் தமிழ்மக்களது அரசியல்உரிமைகள் மறுக்கப்பட்டிருக்கின்றன.அது வேறுவிடயம்.

அதன்பிறகே ஊர்மக்களின் ஏகோபித்த தீர்மானத்திற்கமைவாக பகிரங்கமாக போட்டியின்மத்தியில் உரிய பொறிமுறைமூலம் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுத்து நாம் களத்திலிறங்கினோம்.

ஜயா தங்களிடம் சொல்லவில்லை என்று நீங்கள் கூறக்கூடாது. மற்றது நாங்கள்வரமாட்டோம்நீங்கள்தான் வரவேண்டும் என்று சொன்னதை நாம் ஏற்கவில்லை. ஏனெனில் மக்களின்வாக்குகளால் மக்களுக்காக தெரிவுசெய்யப்பட்டவர்கள் நீங்கள். மக்களுக்காகவே கட்சி. எனின் மக்களைச்சந்திக்க நீங்கள் ஏன் வரமுடியாது. தேர்தல் என்றால் ஓடி வருகிறீர்கள். மக்கள்பிரச்சினை என்றால் ஏன் வந்து சந்திக்கமுடியாது என்று கேள்வியெழுப்பினார்.

மேலும் காரைதீவின் இன்றைய நிலைக்குக் காரணம் உங்கள் எம்.பியே தவிர நாங்களல்ல. இங்கிருந்த நல்லநிலைiமையைக் குழப்பி ஏனைய பேரிவாதக்கட்சிகள் களமிறங்க வழிசமைத்தவர் அவர். காரைதீவு மக்கள் நல்ல தமிழ்ப்பற்றுறுதி மிக்கவர்கள்.நல்ல தெளிவுடனிருக்கிறார்கள். தங்கள் கட்சியின் வேட்பாளர்கள் தெரிவு எவ்விதம் நடந்தது என்பதை நாமறிவோம். அதிலுள்ளவர்களைப்பற்றி நான் விமர்சிக்கவில்லை.ஆனால் இங்கு பிறந்த ஒவ்வொருவருக்கும் அவர்களைத் தெரியும்.

பதிலுக்கு செயலாளர் 'சரிபிழை நடந்திருக்கலாம். இப்போதாவது கதைப்போம் வாருங்கள்.' என்றார்.

ஜயா இனி காலம் கடந்துவிட்டது. இனி நாம் உங்களுடன் இணைந்தால் ஊர்ப்பொதுமக்கள் எங்களை உங்கள் எம்.பி. அதே பிரச்சாரமேடையில் சொன்னதுபோன்று தும்புக்கட்டால் விரசுவார்கள். மக்கள் ஆணையை நாம் மதிக்கவேண்டும்.எனவே காலம் பதில் சொல்லும் என்று பதிலளித்தார்.







எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -