தமிழ் மக்களுக்கு அங்கீகாரம் தரும் ஒரே ஒரு தீர்வு தமிழ் தேசம் மட்டுமே. அது மாகாண சபை அதிகாரத்தால் முடியாது என்று வெளிப்படையாகக் கூறி வருபவர் முதலமைச்சர் விக்னேஸ்வரன் மட்டுமே. அதனால் அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்”
இவ்வாறு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்திலுள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைமையகத்தில் இன்று(16) நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:
மாகாண சபை பிழையாகப் பாவிக்கப்படுவதே எமது குற்றச்சாட்டு.
“மாகாண சபையில் ஒன்றுமே இல்லை. மாகாண சபை அதிகாரம் ஆரம்பப் புள்ளிகூட இல்லை” என்று கூறும் ஒரே ஒரு நபர் முதலமைச்சர் விக்னேஸ்வரன் மட்டும்தான்.
தமிழ் தேசியக் கூட்டமைப்போடு முரண்பட்டு இருக்கக் கூடிய ஒரு சிலர் மாகாண அமைச்சரவையில் உள்ளபோதும் மாகாண சபை அதிகாரம் ஆரம்பப் புள்ளிகூட இல்லை என்றோ அல்லது அதைப் பற்றி ஒன்றுமே கதைப்பதில்லை.
மாகாண சபை அதிகாரம் பற்றி முதலமைச்சர் மட்டுமே கதைக்கிறார். அதனால் அவர் தனிமைப்பட்டுப் போயுள்ளார். அப்படி இருக்கக் கூடாது.
ஒற்றையாட்சியின் கீழ் கொண்டுவரப்பட்ட 13ஆம் திருத்தத்தின் அடிப்படையிலான மாகாண சபை அதிகாரத்தை நாம் தாண்டிச் செல்லவேண்டும். அதற்கு நாம் மாகாண சபை என்ற விடயத்தைப் பொறுப்பிலேயே எடுக்கக் கூடாது. எவருமே மாகாண சபையை பேசு பொருளாக எடுக்காத நிலைப்பாட்டை நாம் கொண்டிருக்கவேண்டும்.
2005ஆம் ஆண்டு கிழக்கு மாகாண சபை அமைக்கப்பட்ட பின்னரே நாம் ஒற்றையாட்சி பற்றிக் கதைக்கின்றோம். அதற்கு முன்னர் எவருமே மாகாண சபைத் தீர்வு பற்றியோ ஒற்றையாட்சி பற்றியோ பேசவே இல்லை.
எனவே இந்த மட்டத்திலிருந்து நாம் விடுபடவேண்டும். தமிழ் தேசம் அழிக்கப்படுகிறது. தமிழ் தேசம் என்பது மட்டுமே எமக்கு அங்கீகாரத்தைக் கொடுக்கும்.இந்த விடயத்தை முதலமைச்சர் விக்னேஸ்வரன் மட்டுமே சொல்கிறார்.
முதலமைச்சரது கருத்துக்களைக் கொச்சப்படுத்துவதற்காக சிலர், அவருக்கு நிர்வாகம் தெரியாது என்கிறார்கள். வடக்கு மாகாண சபைக்கு வரும் நிதி திரும்பிச் செல்கிறது என்று சிலர் குற்றஞ்சாட்டுகிறார்கள்.
அது அப்பட்டமான பொய்.
மாகாண சபைக்கு வரும் நிதியில் மத்திய அரசு விரும்புகின்றவற்றை மட்டுமே செய்ய முடியும். மத்திய அரசு விரும்பாதவற்றைச் செய்வதற்கு நிதி வழங்கப்படாது.
வடக்கு மாகாண முதலமைச்சர் நிதியம் ஒன்றை நிறுவுவதற்கு சட்டவரைவு ஒன்றைத் தயாரித்து முதலமைச்சர் விக்னேஸ்வரன் சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு வழங்கியுள்ளார்.
அந்த சட்டவரைவுக்கு 2 ஆண்டுகளாகியும் அனுமதி வழங்கப்படவில்லை.
ஒற்றையாட்சிக்கு உள்பட்ட மாகாண சபை அதிகாரத்தைத் தாண்டி தமிழ் மக்களுக்கான தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் கலந்துரையாடலை கொண்டுவரக்கூடிய ஒரே ஒரு கட்சி தமிழ் தேசிய மக்கள் முன்னணிதான் – என்றார்.
