ஏ.எச்.சித்தீக் காரியப்பர்-
கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் ஏறாவூர் மக்காமடி குறுக்கு வீதியில் இன்றிரவு ( 05) நடைபெற்ற தேர்தல் பிரசராக் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டிருந்த போது சுமார் 9.40 மணியளவில் பட்டாசு வெடிப்பது போன்ற ஒரு சத்தம் கேட்டதாகவும் இதன் காரணமாக வீடு ஒன்றின் கூரை சேதமைடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் ஏறாவூர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பொலிஸ் இன்ஸ்பெக்டர் சிந்தகவுடன் சற்று நேரத்துக்கு முன்னர் அவரது கைத்தொலைபேசிக்கு அழைப்பை மேற்கொண்டு நான் கேட்டபோது, குறித்த சம்பவம் இடம்பெற்றமையை உறுதிப்படுத்தினார். இருப்பினும், இது பட்டாசு வெடித்ததால் ஏற்பட்டதாக தான் சந்தேகிக்கப்பதாகவும் இந்தச் சம்பவத்தினால் வீடு ஒன்றின் கூரை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதுடன் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டதாகவும் அவர் என்னிடம் தெரிவித்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட்டை சற்று நேரத்துக்கு முன்னர் நான் தொடர்பு கொண்டு கேட்ட போது, குறித்த வெடிப்புச் சம்பவத்தால் ஒரு வீட்டின் கூரை சேதமடைந்துள்ளது. சாதாரண பட்டாசு ஒன்றினால் இவ்வாறான வெடிப்புச் சம்பவம் ஏற்பட்டிருக்காது என்றும் தனது கூட்டத்தை குழப்பி தனக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையிலேயே இது மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் தான் பொலிஸ்மா அதிபர் , கிழக்கு மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் மற்றும் உயர்மட்ட பொலிஸ் அதிகாரிகளிடம் முறையிடவுள்ளதாகவும். குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணை ஒன்றுக்கு வலியுறுத்தப் போவதாகவும் கூறினார். தனது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதேவேளை, இந்தச் சம்பவம் தொடர்பில் முன்னாள் முதல்வரின் பாதுகாப்பு கருதி அவ்வட்டார வேட்பாளர் எம். எச் கபூர் பொலிஸ் முறைப்பாடு செய்துள்ளார்.