சாய்ந்தமருது தைபா மகளிர் அரபுக் கல்லூரியில் இருந்து இரண்டாவது தொகுதி மாணவிகள் மூன்று பேர், மௌலவியா பட்டம் பெற்று வெளியேறியுள்ளனர் என்று கல்லூரி அதிபர் அஷ்ஷெய்க் எஸ்.எச்.ஆதம்பாவா மதனி தெரிவித்தார்.
இக்கல்லூரியின் ஐந்து வருட அல்-ஆலிம் கற்கை நெறியை சிறப்பாக பூர்த்தி செய்து, இறுதிப் பரீட்சையில் சித்தியடைந்த எச்.சல்பினா பேகம், நதா நபார், ஸீனத் இப்ராஹிம் ஆகியோருக்கே ‘அத்தைபிய்யா மௌலவியா’ எனும் பட்டம் வழங்கப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
தென்கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் பீடாதிபதி அஷ்ஷெய்க் ஏ.எம்.அலியார் தலைமையிலான நிபுணத்துவ குழுவினரால் நடத்தப்பட்ட பரீட்சையில் இம்மாணவிகளுள் இரண்டு பேர் முதல் தரத்திலும் ஒருவர் இரண்டாம் மேல் தரத்திலும் சித்தியடைந்துள்ளனர்.
கடந்த 2012ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட சாய்ந்தமருது தைபா மகளிர் அரபுக் கல்லூரியில் ஜீ.சி.ஈ.உயர்தர வகுப்புகளுடன் இணைந்ததாக மௌலவியா பட்டத்திற்கான சன்மார்க்கக் கல்வி போதிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு வருடமும் இங்கிருந்து உயர்தர பரீட்சைக்கு தோற்றுகின்ற மாணவிகள் அனைவரும் சித்தியடைவதுடன் அவர்களுள் பெரும்பாலானோர் பல்கலைக்கழக அனுமதியையும் பெற்று உயர் கல்வியை தொடர்கின்றனர் என அவர் மேலும் குறிப்பிட்டார்.
தற்போது தனியார் கட்டிடம் ஒன்றில் இயங்கி வருகின்ற இக்கல்லூரிக்கென பொலிவேரியன் புதிய நகரில் அனைத்து வசதிகளும் கொண்ட கட்டிடக் தொகுதி நிர்மாணிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.