நீதி அமைச்சர் தலதா அத்துகோரளவிடம் ஹிஸ்புல்லாஹ் வேண்டுகோள்
1804ஆம் ஆண்டு பிரித்தானியரால் தேசத்துரோகிகளாக பிரகடனம் செய்யப்பட்ட கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த 7 முஸ்லிம்கள் உள்ளிட்ட 190 பேரையும் தேசிய வீரர்களாக பிரகடனம் செய்யுமாறு நீதி அமைச்சர் தலதா அத்துகோரளவிடம் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் வேண்டுகோள் விடுத்துள்ளார். இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் இந்த விடயம் சம்பந்தமாக ஏற்கனவே முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோரிடம் கோரிக்கை விடுத்திருந்தார். அவர்கள் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்திருந்த போதிலும், நீதி அமைச்சர் பதவி மாற்றப்பட்டதால் இந்த முயற்சி கைவிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், நீதி அமைச்சர் தலதா அத்துகோரளவின் கவனத்துக்கு மீண்டும் இந்த விடயத்தை இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் கொண்டு சென்றுள்ளார். நேற்று புதன்கிழமை இந்த விடயம் சம்பந்தமாக அமைச்சர் தலதா அத்துகோரளவுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் குறித்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை, ஜனாதிபதி மற்றும் நீதி அமைச்சர் ஆகியோருக்கு ஏற்கனவே ஹிஸ்புல்லாஹ்வினால் அனுப்பி வைக்கப்பட்ட கடிதங்கள், அதற்கவர்கள் அனுப்பி வைத்த பதில் கடிதங்கள் மற்றும் 1804ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் என்பனவும் குறித்த கடிதத்தில் இணைத்து அனுப்பப்பட்டள்ளது.
பிரிதித்தானிய ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சி செய்தமைக்காக 1804ஆம் ஆண்டு ஜுன் 4ஆம் திகதி கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த 7 முஸ்லிம்கள் உள்ளிட்ட 190 பேர் தேசத்துரோகிகளாக பிரித்தானிய அரசு பிரகடனப்படுத்தியது. இது தொடர்பாக சம்மாந்துறையைச் சேர்ந்த அப்துல் ராஸிக் என்பர் ஊடகங்களில் எழுதி வந்ததுடன் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் கவனத்துக்கும் கொண்டு வந்தார்.
பின்னர், இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் குறித்த விடயம் சம்பந்தமாக 2017.01.23ஆம் திகதி ஜனாதிபதிக்கும், 2017.02.09ஆம் திகதி அப்போதைய நீதி அமைச்சராக இருந்த விஜயதாச ராஜபக்ஷவுக்கும் இருவேறு கடிதங்களை அனுப்பி வைத்தார்.
“இந்த விடயம் தொடர்பில் தான் கவனம் செலுத்தியுள்ளதாகவும் விரைவில் நீதி அமைச்சுடன் தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுப்பதாகவும்” கூறி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 2017.02.17ஆம் திகதி இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வுக்கு பதில் கடிதம் அனுப்பி வைத்திருந்தார். அத்துடன், தேசத்துரோக பிரகடனத்தை நீக்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு அதனுடன் தொடர்புடைய தகவல்கள், 1804 ஜுன் 04ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி என்பவற்றை தனக்கு அனுப்பி வைக்குமாறு 2017.03.09ஆம் திகதி நீதி அமைச்சின் ஊடகச் செயலாளர் ஹர்ஷ அபேகோன் இராஜாங்க அமைச்சரிடம் தகவல் கோரியிருந்தார்.
பின்னர், அது தொடர்பான முழுமையான தகவல்கள் திரட்டப்பட்டு நீதி அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்த நிலையில் நீதி அமைச்சுப் பதவியில் மாற்றம் ஏற்பட்டது. இதனடிப்படையில் மீண்டும் இந்த விடயம் தற்போதைய நீதி அமைச்சராக உள்ள தலதா அத்துகோரளவின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.