கடந்துவந்த தடங்களும் நம்பிக்கையில்லாப் பிரேரணையும் முஸ்லிம் பார்வை - பாகம் 1


கடந்துவந்த தடங்களும் நம்பிக்கையில்லாப் பிரேரணையும்
முஸ்லிம் பார்வை - பாகம் 1
=================================
வை எல் எஸ் ஹமீட்-
ஹிந்தவின் ஆட்சியில் அனுபவித்த இனவன்கொடுமை வரலாற்றில் முஸ்லிம்களை 95% மேல் ஒன்றுபடவைத்து நல்லாட்சி மலரக்காரணமாயிற்று. நாம் ஆட்சியைக் கொண்டுவந்ததற்கு மேலதிகமாக வல்ல இறைவனின் கருணை, இந்த ஆட்சியை நமது முட்டில் தங்கியிருக்கவும் செய்தான்.
நமக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. ஒரு புறம் நாம் கொண்டுவந்த ஆட்சி. மறுபுறம் நமது முட்டில் தங்கியிருக்கும் ஆட்சி. முஸ்லிம்களின் தீர்க்கப்படாத பிரச்சினைகள் அனைத்தையும் தீர்ப்பதற்கு இப்படியொரு ஆட்சிக்கான சந்தர்ப்பம் இன்னுமொரு முறை வருமா? என்று தெரியாது.

நமது பிரதிநிதித்துவங்கள் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தியிருக்க வேண்டும். நாம் இந்த நாட்டில் இன்று ஓர் மகிழ்ச்சியான சமூகமாக இருந்திருக்க வேண்டும். ஆனால் நடந்தது என்ன?
இனவாதத்தை கக்கிய ஞானசாரரும் கூட்டமும் கைதுசெய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் எடுக்கப்படவில்லை. தொடர்ந்தும் இனவாதத்தைக்கக்க அனுமதிக்கப்பட்டார்கள். நாம் என்ன செய்தோம். பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு செய்துவிட்டு முகநூல்களில் விளம்பரம் தேடினோம். பங்காளியாக இருந்துகொண்டும் அரசை நடவடிக்கை எடுக்கவைக்க முடியாமல் பொலிசில் முறைப்பாடு பதிவதற்கு அமைச்சர்களையும் பாராளுமன்ற உறுப்பினர்களையும் தெரிவுசெய்கின்ற சமூகம் நாம்தான்.
அரசை நடவடிக்கை எடுக்க வைக்கச்செய்யமுடியாமல் பொலிஸ்நிலையத்தில் முறைப்பாடு செய்யும் அமைச்சர்களை யார்தான் கணக்கெடுப்பார்? சிங்கள இளைஞர்களுக்கு மத்தியில் முஸ்லிம் இனவெறுப்பு தொடர்ந்து வளர்க்கப்பட்டது.
எமது கையாலாகத்தனத்தைக் கண்டுகொண்ட அரசு ஞானசாரருக்கெதிராக வழக்குத்தொடுக்கப்பட்ட சட்டத்தையே மாற்றி பிணைவழங்கியது. என்ன செய்துவிட்டோம். இத்தனைக்கும் ‘ நாம் கொண்டுவந்த ஆட்சி, நம்மில் தங்கியிருக்கும் ஆட்சி.

இழப்பிற்கு மேல் இழப்பு
——————————-

கடந்தகாலங்களில் இழந்த எதையும் பெறவில்லை. 10 வீதம் இருந்தும் ஓர் அரசாங்க அதிபரைப்பெற முடியவில்லை. மாறாக, கல்முனைப் பிரதேசத்தில் இருந்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்போன்ற பிராந்தியக் காரியாலயங்களை இழந்தோம். முசலியில் மஹிந்தவிடம் 12000 ஏக்கர் காணிகளைத்தான் இழந்தோம். மைத்திரியிடம் ஒரு இலட்சம் ஏக்கரையே இழந்தோம். பெற்றவை எதுவுமில்லை. பதவிகளை பலதடவை ஊடகங்களில் தூக்கியெறிந்தோம். ஆனால் அதே பதவிகளைக் காப்பாற்றுவதற்காக பின்கதவால் போய்க் கெஞ்சினோம். முன்கதவால்போய் கொடுத்த முட்டின் தைரியத்தில் சண்டை பிடித்தோம்.

கிந்தோட்டையிலும் இழப்பு
————————————

முஸ்லிம் சமூகம் கிள்ளுக்கீரையாகப் பார்க்கப்பட்டது. தைரியமாக, கிந்தோட்டை எரிக்கப்பட்டது. அதிரடிப்படை துணைபோனது, வெளிப்படுத்தப்பட்டது. அவர்களுக்கெதிராக நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாது; என்பது உறுதிப்படுத்தப்பட்டது. நமது பிரதிநிதித்துவங்களின் கையாலாகத்தனம் மீண்டும் நீரூபிக்கப்பட்டது. இருப்பினும் நமது தலைமைகளின் வீரவசனங்கள் கடந்த தேர்தலிலும் ஓங்கி ஒலிக்கப்பட்டது.

பாதிப்பான தேர்தல் சட்டத்திற்கு கைஉயர்த்தியமை
—————————————————————-

‘ அச்சமும் மடைமையும் உச்சத்தில் கொண்ட ஊமைச் சமூகமாய் வாழாமல், அச்சமில்லை! அச்சமில்லை!! அச்சமென்பதில்லையே!!! உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை! அச்சமில்லை!! அச்சமென்பதில்லையே!!!’, என்று அரசியல் செய்வதற்காகவே இந்தக் தனித்துவ கட்சி, என்று மேடைமேடையாக பேசித்தான் இந்தக் கட்சியை மறைந்த தலைவர் வளர்த்தார்.

இப்பொழுது தனித்துவக்கட்சியென்றால், அடிமைகளின் கட்சிகள், என்றநிலை வந்துவிட்டது. அதனால்தான் முஸ்லிம்களுக்கு பாதகம்தான், ஆனால் ராஜித அடிக்க வந்தார், அவர் இடிக்க வந்தார்; எனவே கையுயர்த்தினோம்; என்கின்ற கேவலமான நிலைக்கு வந்தோம். பட்டியல் 50% நமக்கில்லை. தொகுதியாவது 50% வீதம் கிடைக்காதா என ஏங்குகிறோம். ஆனால் அதுவும் கிடைக்கப் போவதில்லை. மாகாணங்களில் நிரந்தர அடிமை முத்திரை, நமது தனித்துவக் கட்சிகளின் உதவியால் நம்மீது குத்துவதற்கு ஆவணங்கள் தயாராகிக் கொண்டிருக்கின்றன.

அம்பாறை- கண்டி கலவரங்கள்
—————————————-

கடந்த உள்ளூராட்சிசபைத் தேர்தலில் கூட்டு எதிர்க்கட்சி சுமார் 40% தாண்டியது. அடுத்த இலக்கு சிறுபான்மை வாக்கு. தமிழ் சமூகம் ஒருபோதும் மஹிந்த தரப்பிற்கு ஆதரவளிக்காது. முஸ்லிம்கள் வெறும் உணர்ச்சிகளுக்கு அடிமைப்பட்ட சமூகம் என்பது அவர்களுக்குத் தெரியும். இனவாத நடவடிக்கைகளை முடுக்கிவிட்டால் உணர்ச்சிவசப்பட்டு அரசுக்கெதிராக தம்பக்கம் முஸ்லிம்கள் திரும்பலாம்; என்று அவர்கள் கணக்குப்போட்டிருக்கலாம். எனவே, கூட்டு எதிர்க்கட்சிதான் கலவரத்தைத் தூண்டியது; என்பது உண்மையென உறுதிப்படுத்த முடியாவிட்டாலும் அது உண்மையாக இருக்கமாட்டாது; என நிராகரிக்கவும் முடியாது.

மறுபுறம், ஐ தே கட்சி கடந்த தேர்தலில் 30% வீதத்திற்குள் சிரமப்பட்டது. இலங்கையில் அண்ணளவாக முஸ்லிம்கள் 10%. இவர்களுள் 8% ஆவது ஐ தே கட்சிக்கு வாக்களித்திருப்பார்கள். வட கிழக்கிற்கு வெளியேயுள்ள முஸ்லிம் வாக்குகள் அடித்தாலும் உதைத்தாலும் ஐ தே கட்சிக்கென்று எழுதிவைத்த வாக்குகள். வடகிழக்கு வாக்குகளைத் தரகர் கட்சிகள் கடந்த தேர்தலிலும் பெற்றுக்கொடுத்தார்கள். எதிர்காலத்திலும் பெற்றுக்கொடுப்பார்கள். எனவே, ஐ தே கட்சி அதிகரிக்கவேண்டியது பெரும்பான்மையின வாக்கு.

இனவாதிகள் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள். எனவே, பெரும்பான்மையைப் பகைக்கக் கூடாது; என்பதனால் சட்டம் ஒழுங்கிற்கு பொறுப்பாக இருந்த பிரதமர் மெத்தனப்போக்கைக் கடைப்பிடித்திருக்கலாம்.

சுருங்கக்கூறின் கலவரத்தைத் தூண்டியது யார்? என்பது வாதப்பிரதிவாதத்திற்கு உட்படுத்தக்கூடியதாக இருக்கலாம். பிரதமர் தன்மெத்தனப்போக்கால் இனவாதிகளுக்கு ஒத்தடம் கொடுத்தார்; என்பது மாத்திரம் மறுக்கப்பட முடியாத உண்மையாகும். எனவே, இக்கலவரத்தில் பிரதமருக்கு பங்கு இருக்கின்றது; என்பது நிறுவப்பட்ட ஒன்று.

கலவரத்தைத் தூண்டினால் மாத்திரம் பங்கு இருக்கின்றது; என்பதல்ல. சட்ட ஒழுங்கு அதிகாரத்தை தன்கையில் வைத்துக்கொண்டு கலவரத்தை அனுமதிப்பதும் பங்களிப்புத்தான்.

என்னைப்பொறுத்தவரை அடிப்படையில் பிரதமர் ஒரு இனவாதியல்ல; என்றே இன்னும் நினைக்கின்றேன். அதற்காக பிரதமர் தரப்பு கலவரத்தை தூண்டவில்லை; என்று நிராகரித்துவிடவும் முடியாது. இந்நாட்டில் அரசியல் ஆதாயத்திற்காக யாரும் எதையும் செய்வார்கள். கலவரத்தூண்டலில் பிரதமர் தரப்பிற்கு பங்கிருக்கின்றதா இல்லையா என்பது தெரியாது. ஆனால் அனுமதித்தார் என்பது மாத்திரம் சந்தேகத்திற்கப்பாற்பட்டது.

பிரதமரின்கீழ் செயற்பட்ட பொலிசாரும் அதிரடிப்படையினரும் வெளிப்படையாகவே பங்களிப்புச் செய்தார்கள்; என்பது நாடறிந்த உண்மையாகும். ஆனால் அவர்களுக்கெதிராக இதுவரை எதுவித நடவடிக்கையும் இல்லை. கலவரம் தொடங்கிய மறுநாள் பாராளுமன்றத்தில் பொலிசார் சரியாகத்தான் நடந்தார்கள்; என்று பொலிசாரைப் பாதுகாத்துப் பேசுகின்றார்.
இதன்பொருள் என்ன? பொலிஸ்மாஅதிபரிடம் அறிக்கை கோரியதால்தான் பொலிஸ் ஆணைக்குழு செயலாளர் நிறுத்தப்பட்டிருக்கின்றார்; என்று கபே குற்றஞ்சாட்டியிருக்கின்றது. இந்நிலையில் நம்மவர்கள் பாராளுமன்றில் சுத்தத்தமிழில் வீரப்பேச்சுக்களைப் பேசி ஊடகங்களில் எல்லாவிளம்பரங்களையும் செய்துவிட்டு ஒய்வெடுக்கிறார்கள்.

ஜனாதிபதி ஆணைக்குழு நியமிப்பதாகக் கூறினார். ஆனால் இன்னும் ஆணை வழங்கவில்லை குழுவை நியமிப்பதற்கு. ஏன் தாமதம்?

விக்டர் ஐவன் கூறியிருக்கின்றார், அம்பாறை- கண்டி கலவரங்கள் பெரகராவுக்கு முன்வரும் விளையாட்டுக்காரர்கள் மட்டும்தான். பெரகரா இன்னும் வரவில்லை. ஆனால் வரும் என்று. இனவாதமில்லாத ஒரு மனிதர் அவர். முஸ்லிம்களை எச்சரித்திருக்கின்றார், தங்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொள்ளட்டும் என்று.

இந்நிலையில்தான் நம்பிக்கையில்லாப் பிரேரணை வந்திருக்கின்றது.

( தொடரும்)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -