பாடசாலை மாணவ, மாணவிகளை தொற்றா நோய்களிலிருந்து பாதுகாக்கும் கூட்டு வேலைத்திட்டத்தை கல்வியமைச்சும், சுகாதார அமைச்சும் இணைந்து முன்னெடுத்து வருவதாக சுகாதார பிரதி அமைச்சர் பைசால் காசிமின் சிரேஷ்ட ஆலோசகரும், நிந்வூர் அரசாங்க ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி கே.எல்.எம்.நக்பர் தெரிவித்தார்.
இந்த திட்டம் தொடர்பான விசேட கலந்துரையாடல் கல்வியமைச்சில் இடம்பெற்றதாகவும், இதில் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம், சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன உள்ளிட்ட பல உயரதிகாரிகள் கலந்து கொண்டு பாடசாலை மாணவர்கள் புகைத்தலுக்கும், மதுபானத்திற்கும் அடிமையாவதிலிருந்து தடுப்பது பற்றி மிக விரிவாக ஆராயப்பட்டதாகவும் அவர் கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மதுப்பாவனை என்பது இன்றைய காலகட்டத்தில் ஓர் சர்வ சாதாரணமான ஒரு செயற்பாடாகவே மாறிக்காணப்படுகின்றது. அதிலும் இளம் வயதினர்களில் பாடசாலை மாணவர்களே அதிகமாக இப்பழக்கத்துக்கு அடிமையாகிக் காணப்படுகின்றனர். இதனை கவனத்திற் கொண்ட எமது அரசு மது ஒழிப்பு சம்மந்தமான பல்வேறுபட்ட விழிப்பூட்டல் நிகழ்வுகளை அரச, அரச சார்பற்ற நிறுவனங்கள், சமூக அமைப்புக்கள் என்பவை முன்னெடுத்துவருவதைக் காணலாம்.
அதற்கமைவாக ஒரு கூட்டு வேலைத்திட்டத்தை கல்வியமைச்சும், சுகாதார அமைச்சும் இணைந்து முன்னெடுக்கும் இந்த வேலைத்திட்டத்தினூடாக, பாடசாலை மாணவர்கள் புகைத்தலுக்கும், மதுபானத்திற்கும் அடிமையாவதிலிருந்து தடுக்க முடியும். அதனூடாக மாணவர்களின் கல்வியில் பாதிப்பு, இளைய சமுதாயத்தின் சீரழிவு, அடிமைத்தனமான சமூக உருவாக்கம் போன்ற பல பிரச்சனைகளில் இருந்து தடுக்க முடியும்.
எமது நாட்டைப் பொறுத்தவரையில் நாட்டின் எதிர்கால சந்ததியினரை மதுப் பயன்பாட்டிலிருந்து விடுவிப்பதற்கு அரசாங்கம் ஆரம்பித்த “போதையிலிருந்து விடுபட்ட ஒரு நாடு” எனும் வேலைத்திட்டம் வெற்றிகரமான பிரதிபலனைத் தந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
சுகாதார மற்றும் உடற்கல்வி விடயங்களை உயர்தர வகுப்புக்கான பாடத்திட்டங்களிலும் இணைப்பது தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.