மஸ்கெலியா பிரதேச சபை தலைவர் தெரிவில் பதற்ற நிலை - தொண்டா - திகா சகாக்கள் மோதல்

க.கிஷாந்தன்-
ஸ்கெலியா பிரதேச சபைக்கான தலைவர் தெரிவின் போது ஏற்பட்ட குழப்பத்தால் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் தொழிலாளர் தேசிய சங்க ஆதரவாளர்களுக்கிடையில் கடும் மோதல் இடம்பெற்றது.

கலகதடுப்பு பொலிஸார் பதற்றநிலை கட்டுப்படுத்துவதற்காக வருகை தந்ததையடுத்து அடிதடியில் ஈடுப்பட்டவர்க்ள கலைந்து சென்றனர்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

மஸ்கெலியா பிரதேச சபைக்கான தலைவர் தெரிவு 28.03.2018 அன்று காலை 10.30 மணியளவில் மத்திய மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் எச்.எம்.யூ.பி.ஹேரத் தலைமையில் மஸ்கெலியா அம்பாள் மண்டபத்தில் அரம்பமானது.

இதன்போது இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உறுப்பினர்கள் ஏழு பேரும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பாக ஒரு உறுப்பினரும் சபையில் அமர்ந்தனர்.

இதன்பின் ஐக்கிய தேசிய கட்சியில் தெரிவான ஏழு பேரில், ஆறு பேரும் ஸ்ரீலங்கா ஐக்கிய சுதந்திர முன்னணி சார்பாக ஒருவரும் கைகளில் கறுப்பு பட்டி அணிந்தவாறு சபைக்கு வருகை தந்தனர்.

இதன்போது ஐக்கிய தேசிய கட்சியில் தெரிவான உறுப்பினர் ஒருவர் சமூகமளிக்காததனால் பதற்ற நிலை உருவானது.

எனினும் இதனை தொடர்ந்து சபை தலைவர் தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு நடத்துவதற்கு முற்பட்டபொழுது ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்களுக்கும், உள்ளுராட்சி ஆணையாளருக்குமிடையில் அமைதியற்ற சூழ்நிலை உருவானது. இதனை கட்டுப்படுத்தவதற்காக பொலிஸார் வரவழைக்கப்பட்டனர். அதன்பின் தலைவரை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு ஆரம்பமானது.

ஐக்கிய தேசிய கட்சி சார்பில் ஒருவர் வராததனால் சபையின் தலைவர் தெரிவை ஒத்திவைக்குமாறு ஐ.தே.கவினர் வேண்டுக்கோள் விடுத்தனர். எனினும் அதற்கு இ.தொ.காவின் உறுப்பினர்கள் ஆட்சேபம் தெரிவித்ததனால், குறித்த சபையில் போதியளவிலான உறுப்பினர்கள் கலந்து கொண்டிருப்பதனால் சபை நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் என்பதை சுட்டிக்காட்டி சபை நடவடிக்கைகளை ஆணையாளர் முன்னெடுத்தார்.

அதனை தொடர்ந்து, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றிப்பெற்ற ஜீ. செண்பகவள்ளி பெயர் முன்மொழியப்பட்டு வழிமொழியப்பட்டது. எதிர் தரப்பினர் சார்பாக எவரும் பெயர் அறிவிக்கவில்லை என்பதால் ஜீ. செண்பகவள்ளி ஏகமனதாக தலைவர் பதவிக்கு தெரிவு செய்யப்பட்டார்.

உப தலைவர் தெரிவின் போது இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பட்டியல் வேட்பாளரான பெரியசாமி பிரதீபன் பெயர் முன்மொழியப்பட்டு வழிமொழியப்பட்டது. இதற்கும் எதிர் தரப்பினர் சார்பாக எவரும் பெயர் அறிவிக்கவில்லை என்பதால் பெரியசாமி பிரதீபன் ஏகமனதாக உப தலைவர் பதவிக்கு தெரிவு செய்யப்பட்டார்.

புதிதாக உருவான மஸ்கெலியா பிரதேச சபைக்கு முதல் முறையாக பெண் ஒருவர் தலைவராக நியமிக்கப்பட்டமை குறிப்பிடதக்கது.

அதனை தொடர்ந்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஆதரவாளர்கள் வெற்றியை கொண்டாடுவதற்கு மஸ்கெலியாவில் ஊர்வலம் செல்ல முற்பட்டதனையடுத்து இருசாராருக்குமிடையில் வாய் தர்க்கம் ஏற்பட்டு பின் அது கல்வீச்சாக மாறியது.

இக்கல்வீச்சில் சிலர் சிறிய காயங்களுக்கு உள்ளானதுடன் ஒருவர் மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த கல்வீச்சி காரணமாக பொது போக்குவரத்து பல மணி நேரம் தடைபட்டதுடன் வாகன நெரிசல் நிலையும் ஏற்பட்டன. இதனை தொடர்ந்து ஏனைய பொலிஸ் நிலையங்களிலிருந்து பொலிஸார் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டன. அத்தோடு விசேட அதிரடி படையினரும் பாதுகாப்பில் ஈடுப்பட்டனர்.

இந்த கல்வீச்சு சம்பவங்களுடன் இரு கட்சிகளினதும் அரசியல் பிரதிநிதிகளும் ஈடுபட்டதாக பொது மக்கள் குற்றம் சுமத்துகின்றனர். பொலிஸாரின் தலையீட்டின் பின் இருசாராரும் கலைந்து சென்றனர்.

இதேவேளை ஐக்கிய தேசிய கட்சியில் சமூகமளிக்காத குறித்த உறுப்பினர் சுகயீனம் காரணமாக நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுதிக்கப்பட்டு சிகிச்சைகளின் பின் வீடு திரும்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.




















இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -