சமுகங்களுக்கு மத்தியில் வீராப்பு பேசி அப் பேச்சுக்களுக்கு அடிமைப்பட்டு போவாமாக இருந்ததால் நாம் வாழ்வில் முன்னேற்றம் அடையாமல் மரணிக்கும் வரை வறுமையிலயே இருக்க வேண்டி வரும் என கிராமிய பொருளாதார பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.
திருகோணமலை மாவட்டத்தின் எல்லைக்கிராமமான ஈச்சிலம்பற்று பிரதேச செயலக பிரிவில் பால் சேகரிக்கும் நிலைய திறப்பு விழா நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையில் மேற்சொன்னவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்-
இலங்கையில் எதிரும் புதிருமாக இருந்த இரண்டு கட்சிகளை சிறுபான்மை சமூகமாகிய தமிழ்,முஸ்லிம் மக்கள் ஒன்றிணைந்து இந்த நல்லாட்சி அரசாங்கத்தை கொண்டு வந்திருக்கின்றோம். இதன் மூலம் என்ன கிடைக்கும், என்ன கிடைக்காமல் போகும் என்பது பற்றி பேசுவதில் அர்த்தம் கிடையாது. அறுபது வருடம் பலவற்றை இழந்திருக்கின்றோம் இனி இழப்பதற்கு எதுவும் இல்லாத சூழலில் இந்த நல்லாட்சி அரசின் மீது நம்பிக்கை வைத்து ஆட்சியமைக்க உதவியவர்கள் சிறுபான்மையினராகிய நாங்கள்;.
தமிழன், முஸ்லிம், சிங்களவன் என்று நம்மை பிரித்தாளுகின்ற அரசியல் வேலைத் திட்டத்திற்குள் அகப்பட்டு கடந்த காலத்தில் எமது சொத்து, பெறுமதி மிக்க உயிர்கள் என்று அனைத்தையும் இழந்து விட்டோம் மீண்டும் இழப்பதற்கு நம்மிடம் எதுவுமில்லை என்றார்.
மில்கோ நிறுவனத்தின் பால் குளிரூட்டும் நிலைய பிராந்திய முகாமையாளர் க.கனகராஜா தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்றூப், மில்கோ நிறுவனத்தின் பொது முகாமையாளர் எஸ்.பெர்ணான்டோ, பிரதேச சபை செயலாளர் எஸ்.சாந்தரூபன் மற்றும் பயனாளிகளும் கலந்து கொண்டனர்.
இதன்போது கிராமிய பொருளாதார அமைச்சினால் பால் பண்ணையாளர்களுக்கான ஊக்குவிப்பு தொகையும் வழங்கப்பட்டது.