ஐ. ஏ. காதிர் கான்-
கொழும்பு மா நகர எல்லை மற்றும் அதனைச் சூழவுள்ள வீதியோரங்களில் இதுவரை அகற்றப்படாமல் குவிந்து கிடக்கும் குப்பைக் கூளங்களை, உடனடியாக அவ்விடங்களிலிருந்து அகற்றுமாறு, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைஸர் முஸ்தபா கொழும்பு மா நகர சபை ஊழியர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
அத்துடன், பொது இடங்களில் குப்பை மற்றும் கழிவுப் பொருட்களைக் கொட்டும் பொதுமக்களைக் கைது செய்து, அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறும், அமைச்சர் பொலிஸாருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சில், (03) சனிக்கிழமை இது தொடர்பில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின்போதே, அமைச்சர் இவ்வாறு பணிப்புரை விடுத்தார்.
இவ்விசேட கலந்துரையாடலில், மா நகர சபை அதிகாரிகள், ஊழியர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் எனப்பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
கொழும்பு வீதி ஓரங்களில் இன்னும் அகற்றப்படாத நிலையில் நிறையவே குப்பைக் கூளங்கள் உள்ளன. இவைகள் உடனடியாக அகற்றப்பட வேண்டும். குப்பைக் கூளங்களால் மக்களுக்கு நிறைய பிரச்சினைகள் ஏற்படுகின்றன. நுளம்புகள் பெருகி, இதனால் டெங்குத் தொற்று உள்ளிட்ட பல்வேறுபட்ட நோய்கள் ஏற்படும் வாய்ப்புக்களும் அதிகம் உள்ளன.
இதற்காக மா நகர அதிகாரிகள், மா நகர ஊழியர்கள் மற்றும் பொலிஸாரின் ஒத்துழைப்போடு ஒவ்வொரு வினாடியும் கவனமெடுத்து விரைந்து செயற்பட முன்வர வேண்டும். அத்துடன், இத்துப்போகும் மற்றும் இத்துப்போகாத கழிவுகளை, உரிய முறையில் தரம் பிரித்து, அவைகளை சரியான முறையில் வகைப்படுத்துவதற்கான ஒழுங்குகளையும் அதிகாரிகள் முன்னெடுக்க வேண்டும். இது தொடர்பில் உரிய நடவடிக்கைகளை எடுக்கத் தவறும் அரச மற்றும் தனியார் நிறுவனப் பணிப்பாளர்கள், அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அமைச்சர் உரிய அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். இக்கலந்துரையாடலின் பின் அமைச்சர் உடனடியாக செயலில் இறங்கி, கொழும்பு மாளிகாவத்தை உள்ளிட்ட பல பகுதிகளுக்கும் குறித்த அதிகாரிகள், ஊழியர்கள், பொலிஸார் சகிதம் நேரில் சென்று, குப்பைக் கூளங்கள் அகற்றப்படாமல் உள்ள இடங்களையும் பார்வையிட்டார். அவற்றை உடனடியாக அவ்விடங்களிலிருந்து அகற்றுவதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறும், அத்தோடு உக்கக்கூடிய மற்றும் உக்கிப்போகாத கழிவுகளைத் தரம் பிரித்து, அவற்றை வகைப்படுத்துவதற்கான ஒழுங்குகளை, உரிய முறையில் முன்னெடுக்குமாறும், அமைச்சர் அதிகாரிகளிடம் வேண்டிக் கொண்டார்.
இந்நடவடிக்கை தொடர்பில், அமைச்சரினால் (03) சனிக்கிழமை முதல் (04) ஞாயிற்றுக்கிழமை வரையிலான 24 மணி நேர கால அவகாசம் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டிருந்த நிலையில், குறித்த நடைமுறைகள் யாவும் (05) திங்கட்கிழமை முதல் கட்டாயம் அமுலுக்குக் கொண்டுவரப்படல் வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.