- கந்தப்பொலை வீடமைப்புத்திட்ட ஆரம்ப விழாவில் திலகர் எம்.பி
மலையகப் பகுதிகளில் கடந்த மூன்று ஆண்டுகளாக தனி வீட்டுத்திட்டங்கள் பரவலாக மேற்கொள்ளப்பட்டுவருவதுடன் மக்கள் அதனை தமக்கான அடிப்படைத் தேவையாகவும் அரசியல் கோரிக்கையாகவும் அமைந்து வருகிறது. இந்த தனிவீட்டுத்திட்டங்களை அமைப்பதற்கு அரசாங்கத்திடம் இருந்து நன்கொடையுடன் வீட்டுப்பயனாளிகளுக்கு கடன் வசதியும் பெற்றுக்கொடுக்கப்படுகின்றது. அரசுக்கு சொந்தமான காணிகளைப் பெற்றுக்கொள்ள இப்போதைக்கு அதனை குத்தகைக்குப் பெற்றுக்கொண்டுள்ள தோட்டக் கம்பனிகளிடமும் தோட்ட நிர்வாகத்திடமும் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. இந்த ஒத்துழைப்பை வழங்கும் தோட்ட நிர்வாகங்கள் தாமே வீடுகளை வழங்குவதான ஒரு தோரணையை காட்ட முயற்சிக்கின்றன. தனிவீடுகளை தோட்ட நிர்வாகங்கள் வழங்குவதாக இருந்தால் மலையகத்தில் வீட்டுப்பிரச்சினை எப்போதோ தீர்க்கப்பட்டிருக்கும். எனவே மலைநாட்டு புதிய கிராமங்கள் அமைச்சே குறித்த தனிவீட்டுத் திட்டங்களை முன்னெடுக்கின்றது என்பதை மக்கள் தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் தெரிவித்துள்ளார்.நுவரெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட கந்தபொலை தோட்டத்தின் பார்க் பிரிவில் மண்சரிவு அபாயத்தை எதிர்நோக்கியுள்ள 20 குடும்பங்களுக்கான வீடமைப்புத்திட்டத்திற்கு அடிக்கல் நாட்டி ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது. மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு அமைச்சர் பழனி திகாம்பரத்தின் நிதி ஒதுக்கீட்டில் நிர்மானிக்கப்படவுள்ள வீடமைப்புத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில் பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிறுவனத்தின் தலைவர் வீ.புத்திரசிகாமணி, தமிழ் முற்போக்கு கூட்டணியின் நுவரெலியா மாநகர சபை உறுப்பினர் விஸ்னுவர்தன், நுவரெலியா பிரதேச சபை உறுப்பினர்களான தமிழ்ச்செல்வன், யோகநாதன் ஆகியோருடன் சிறப்பு அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றிய போதே நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் மேற்படி கருத்தினைத் தெரிவித்துள்ளார்.
அவர் தொடரந்தும் உரையாற்றுகையில்,
கடந்த ஆண்டு மண்சரிவு ஆபத்தினை எதிர்கொண்ட இருபது குடும்பங்கள் என்னை அழைத்து தமது பிரிதாப நிலையை என்னிடம் சுட்டிக்காட்டினர். அப்போது நேரம் இரவு பத்துமணியிருக்கும். அப்போது அவர்கள் ஒரு வருடகாலத்திற்கு மேலாக தாம் வாழ்ந்த லயன் அறைகள் மண்சரிவு அபாயத்தை எதிர்கொண்டிருந்த நிலையில் தமக்கு தனிவீடுகளை அமைத்து தருமாறு என்னிடம் கோரிக்கை வைத்தனர்.
மக்களின் வேண்டுகோளை அமைச்சர் திகாம்பரத்தின் கவனத்துக்கு கொண்டு சென்ற நான் அதற்கான ஆரம்ப கட்ட பணிகளைச் செய்து காணிகளை விடுவித்து கடந்த ஆண்டு இறுதியிலேயே இந்த வீடமைப்புத்திட்டத்தை ஆரம்பிப்பதற்கு முயற்சி மேற்கொண்டபோதும் கடந்த ஆண்டின் இறுதியில் இவ்வாண்டின் ஆரம்பத்திலும் உள்ளூராட்சிமன்றத் தேர்தல் பணிகளில் ஈடுபட்டிருந்தமையால் அரசியல் பிரதிநிதிகளான நாம் நேரடியாக பங்கேற்று இதனை மேற்கொள்வதில் சட்ட சிக்கல்கள் ஏற்பட்டது. எனினும், மக்களுக்கான பணிகள் தாமதமின்றி இடம்பெறவேண்டும் என்ற எண்ணத்தில் தேர்தல் காலத்தில் அதிகாரிகளையும் தோட்ட நிர்வாகத்தையும் வீட்டுத்திட்ட பணிகளை ஆரம்பிக்குமாறு கோரியிருந்தோம்.
எனினும் அப்போது அதனை ஆரம்பிக்காத நிர்வாகம் தேர்தலுக்கு பின்னர் எமது பங்களிப்பின்றி இந்த வேலைத்திட்டத்தை ஆரம்பித்து தாமே இந்த வீடமைப்புத்திட்டத்தை முன்னெடுப்பதான ஒரு தோற்றத்தை காட்ட முனைவது அபத்தமாகும். தோட்ட நிர்வாகங்கள் வீடமைப்புத்திட்டத்தை முன்னெடுப்பார்களாயின் மலையகத்தில் வீடமைப்புத்திட்டங்கள் எப்போதோ நடைபெற்று முடிவடைந்திருக்க வேண்டும். இப்போது இடம்பெறுவது மக்கள் தமது வாக்குபலத்தினால் பெற்றுக்கொடுத்த அரசியல் அதிகாரத்தின் பயனாகவே என்பதை மக்கள் உணர வேண்டும். கந்தபொல சுற்றுவட்டாரத்தில் கொண்கோடியா, கோர்ட்லோஜ், லவர்ஸ்லீப், ஆகிய இடங்களில் வீடமைப்புத்திட்டங்கள் ஏற்கனவே நடைமுறையில் உள்ளது. இவை அனைத்தையும் நாமே முன்னெடுத்து வருகிறோம்.
மக்கள் மாற்றத்தை உணரத் தலைப்பட வேண்டும். கடந்த ஆண்டு என்னை நீங்கள் அழைத்துவந்து மண்சரிவு ஆபத்துள்ள இடத்தில் வாழ்வதை காட்டியிருந்தீர்கள். இன்று உங்களுக்கு வீடுகளைக் கட்டுவதற்கான நிலம் தயார் செய்யப்பட்டு அதன் மீது நிற்கின்றோம். அடுத்த சில மாதங்களில் இங்கே வீடுகள் கட்டப்பட்டிருக்கும். அதற்கு நாங்கள் முழுயான காணி உறுதிகளைப் பெற்றுக்கொடுப்போம். இதுவே இரண்டு ஆண்டுகால அரசியல் மாற்றம் என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
கடந்த மாதம் நான் வந்தபோது சாதாரண பொதுமகனாக இருந்த மூவரை இன்று மக்கள் எனது இரண்டுபக்கத்திலும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களாக அமர வைத்து இருக்கின்றீர்கள். இதுவே அரசியல் மாற்றம் என்பதை மக்கள் உணரவேண்டும். தொடர்ந்தும் தோட்ட நிர்வாகத்தின் பிடியில் இல்லாமல் மக்களை சுயாதீனமானவர்களாக மாற்றுவதே எமது அரசியல் இலக்காகவுள்ளது. அதில் தனிவீட்டுத்திட்டமும் அவற்றிற்கு காணி உறுதிகளைப் பெற்றுக்கொடுப்பதும் ஆரம்ப கட்டப்பணிகளாகும். ஏனைய எழுச்சிகளை உருவாக்க மக்கள் தயாராக வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பாகும் என்றும் தெரிவித்தார்.