அரசியல் கைதி ஆனந்தசுதாகரனுக்கு கருணை அடிப்படையில் பொது மன்னிப்பு வழங்குமாறு கோரி ஏறாவூர் பி.எஸ்.பி. (PSP) நண்பர்கள் வட்டத்தின் ஏற்பாட்டில் கையெழுத்து வேட்டை இன்று (25) ஞாயிற்றுக்கிழமை இடம் பெற்றது.
பத்து ஆண்டுகளாக சிறையில் வாடும்
அரசியல் கைதியான ஆனந்தசுதாரனுக்கு அவரின் மனைவியின் மரணத்தை அடுத்து அநாதரவான நிலையில் உள்ள இரண்டு குழந்தைகளின் நிலையினை கருத்திற் கொண்டு கருணை அடிப்படையில் பொது மன்னிப்பு வழங்குமாறு கோரி ஏறாவூர் பொது மக்களின் கையொப்பங்கள் அடங்கிய கருணை மணுவொன்றினை ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கவுள்ளதாகவும்,
இன மத வேறுபாடுகளுக்கு அப்பால் மனித நேயத்துடன் இந்த விவகாரம் பார்க்கப்படல் வேண்டும் அதற்காகவே ஆனந்தசுதாகரனிற்காய் பொது மன்னிப்புக் கோரி இந்த கருணை மனுவை ஜனாதிபதிக்கு அனுப்பவுள்ளோம் என குறித்த கையெழுத்து சேகரிப்பை ஏறாவூரில் முன்னெடுத்து வரும் PSP நண்பர்கள் வட்டம் தலைமயிலான எற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
இதன் போது முன்னாள் அமைச்சர் பசீர் சேகுதாவூத் , முன்னாள் மாகாண அமைச்சர் சுபைர் , முன்னாள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேந்திரன் , உள்ளூராட்சி மன்றங்களுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள உறுப்பினர்கள் உட்பட அரசியல் பிரமுகர்கள் பொது மக்கள் சிவில் முக்கியஸ்தர்கள் என பலரும் கையொப்பமிட்டனர்.
ஏறாவூர் பிரதான வீதி, பொதுச் சந்தை, சிறுவர் பூங்கா போன்ற சன நடமாட்டம் அதிகமான பகுதிகளில் இருந்து கையொப்பங்கள் சேகரிக்கப்பட்டதுடன், பொதுமக்கள் இன , மத , பால் வேறுபாடின்றி ஆர்வத்தோடு கையொப்பங்களை இட்டதை அவதானிக்க முடிந்தது.
இன்றைய நாள் மாத்திரம் சுமார் இரண்டாயிரத்திற்கும் அதிகமானோர் கையொப்பங்களை இட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.