கடந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலின் போது இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வினால் முன்வைக்கப்பட்ட “விசன் 2022” என்ற தொலைநோக்கு திட்டத்துக்கு அமைவாக அனைத்து பாடசாலைகளும் சகல வசதிகளுடன் கூடியதாக அமைப்பதற்கான நடவடிக்கைகளை தற்போது ஆரம்பித்துள்ளார்.
அதற்கமைய, தற்போது காத்தான்குடியில் உள்ள பாடசாலைகளுக்கு விஜயம் செய்து வருகின்ற இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ், நேற்று வெள்ளிக்கிழமை காத்தான்குடி நூராணியா வித்தியாலயம் மற்றும் மத்திய மகா வித்தியாலயம் (தேசிய பாடசாலை) என்பற்றுக்கு விஜயம் செய்து அங்குள்ள ஆசிரியர் பற்றாக்குறை, பௌதீக வள குறைப்பாடுகள் தொடர்பில் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள் மற்றும் பழைய மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
ஆசிரியர் பற்றாக்குறையினை நிவர்த்தி செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாக இதன்போது தெரிவித்த இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ், மேற்படி பாடசாலைகளில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற கட்டிடங்களின் நிர்மாணப் பணிகளை துரிதப்படுத்துமாறும் பணிப்புரை வழங்கினார்.
இராஜாங்க அமைச்சருடன் காத்தான்குடி நகர சபையில் குறித்த பாடசாலைகள் அமைந்துள்ள தொகுதிகளுக்கு பொறுப்பான உறுப்பினர்கள், இராஜாங்க அமைச்சரின் இணைப்புச் செயலாளர் மொஹமட் றுஸ்வின் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தமைக் குறிப்பிடத்தக்கது.