வன்செயலின் ஊடான தாக்குதலையடுத்து சிறுபான்மை சமூகத்தை நோக்கிய அறிவு ரீதியான தாக்குதலாக மாகாண சபைத் தேர்தல் முறைமை – பிரதி அமைச்சர் ஹரீஸ்.


அகமட் எஸ். முகைடீன்-

சிறுபான்மைச் சமூகங்களின் நலன்களுக்காக அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் எல்லோரும் அவசரமாக ஓரணியில் ஒன்று திரண்டு சிறுபான்மைச் சமூகத்திற்கு எதிராக வர இருக்கின்ற மாகாண சபை தேர்தல் முறைமையை மாற்றி அமைத்து மீண்டும் பழைய விகிதாசார தேர்தல் முறைமைக்கு கொண்டு வருவதற்கான முயற்சியினை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென பிரதி அமைச்சர் ஹரீஸ் தெரிவித்தார்.

விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் ஹரீஸின் முயற்சியினால் சம்மாந்துறை முஸ்லிம் மத்திய கல்லூரி கிரிக்கெட் பாடசாலையாக விளையாட்டுத்துறை அமைச்சினால் தெரிவு செய்யப்பட்டு அதற்கான கடின பந்து விளையாட்டு உபகரணங்களும் சம்மாந்துறை பிரதேச செயலகத்திற்குட்பட்ட விளையாட்டு கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்களும் வழங்கி வைக்கும் நிகழ்வு கல்லூரி அதிபர் ஏ.சி.ஏ.எம். இஸ்மாயில் தலைமையில் நேற்று (16) வெள்ளிக்கிழமை சம்மாந்துறை முஸ்லிம் மத்திய கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பிரதி அமைச்சர் ஹரீஸ் தொடர்ந்தும் உரையாற்றுகையில், சிறுபான்மை சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களாகிய நாங்கள் இந்த நாட்டில் சமூக ரீதியான சவால்களுக்கு முகம்கொடுத்துக் கொண்டிருக்கின்றோம். அம்பாறை மற்றும் கண்டி பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட வன்செயலின் ஊடான இன வன்முறைத் தாக்குதல் சம்பவங்களுக்கு முகம் கொடுத்து இளைப்பாறுவதற்கிடையில் மீண்டும் முஸ்லிம் சமூகத்தையும் சிறுபான்மை சமூகத்தையும் நோக்கி அறிவு ரீதியாக தாக்குவதற்கு இந்த நாட்டின் ஆட்சியாளர்கள் தயாராகி வருகின்றனர்.

மாகாணசபை தேர்தல் முறையிலான சட்டம் அடுத்த 21ஆம் திகதி பாராளுமன்றத்திற்கு கொண்டுவரப்படவுள்ளதாக உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சரினால் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த சட்டத்தை நிறைவேற்றுவதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பாராளுமன்ற உறுப்பினர்கள் அளிக்கவேண்டும் என்று அறைகூவல் விடுக்கப்பட்டிருக்கிறது.

குறித்த சட்டத்தை கொண்டுவந்தபோதே முஸ்லிம், தமிழ், மலையக தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் எல்லோரும் எதிர்த்தோம். ஆனால் எல்லை நிர்ணய ஆணைக் குழு மிக நியாயமாக நடந்துகொண்டு சிறுபாண்மை சமூகங்களுக்கு பாதிப்பு ஏற்படாதவகையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்று ஆட்சியாளர்கள் வாக்குறுதி அளித்திருந்தார்கள். இதன்போது பாதுகாப்பிற்காக குறித்த சட்டத்தை நிறைவேற்றுவதற்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெறப்பட வேண்டுமென்ற நிபந்தனையினை நாம் விதித்திருந்தோம்.

இந்நிலையில் சுதந்திர எல்லை நிர்ணய ஆணைக்குழு அதன் இறுதி அறிக்கையை தயார்படுத்தி இருக்கின்றது. அந்த அறிக்கை சிறுபான்மை சமூகங்களுக்கு பாதகமானதாக காணப்படுகின்றது. தமிழ், முஸ்லிம் மலையக மக்களுக்கு திருப்தியற்ற வகையில் தொகுதிகள் உருவாக்கப்பட்டிருக்கின்றது. உதாரணமாக முஸ்லிம் சமூகத்தை எடுத்துக் கொண்டால் இந்த நாட்டில் 10 வீதமான மக்கள் வாழ்ந்துகொண்டிருக்கின்ற நிலையில் 5 தொகுதிகள் உருவாக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. இதனால் அறைவாசிதான் பிரதிநிதித்துவத்திற்கு உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. எமது சமூகத்திற்குரிய அரைவாசி பிரதிநிதித்துவம் மறுக்கப்பட்டிருக்கின்றது.

இந்நாட்டில் 25 மாவட்டங்கள் உள்ளன. அவற்றுல் 18 மாவட்டங்களில் முஸ்லிம்களுக்கு மாகாணசபை பிரதிநிதித்துவத்தை பெற முடியாமல் தொகுதிகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. இது சமூகத்திற்கு எதிரான மிகப் பெரிய பாதகமான இறுதி அறிக்கையாக காணப்படுகிறது.

இவ்வாறான ஒரு சூழ்நிலையில் இறுதியாக நடைபெற்ற ஆளுங்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான குழுக் கூட்டத்தில் இவ்விடயம் தொடர்பாக பிரதமரை எதிர்த்து பேசியபோது எங்களுக்குச் சொல்லப்பட்டது, புதிய உள்ளுராட்சி மன்ற தேர்தல் சட்டத்திற்கமைவாக நடைபெற்ற அண்மைய தேர்தலானது உள்ளுராட்சி மன்றங்களில் ஸ்திரமற்ற ஆட்சியை உருவாக்கியுள்ளது. இதனால் தொகுதிவாரி தேர்தல் முறை இந்நாட்டிற்கு உண்மையில் பொருத்தமற்றது என்பதை உணர்தியுள்ளது. எனவே இந்த நாட்டில் ஸ்திரமான ஆட்சி முறை தேவை என்றால் பழைய விகிதாசார தேர்தல் முறைக்கு செல்லுவதே சிறந்தது என்ற அடிப்படையில் மாகாண சபை தேர்தல் முறைமையும் மீண்டும் பழைய முறைமைக்கு கொண்டு செல்வதற்கு நாங்கள் நடவடிக்கை எடுக்க இருக்கின்றோம் என்ற பொருத்தம் தரப்பட்டது.
ஆனால் இப்பொழுது திடீரென்று மாகாண சபை தேர்தல் முறைமையை மாற்றுவதற்கான விவாதம் மற்றும் வாக்கெடுப்பு அடுத்த வாரம் பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ளது. இது சிறுபான்மை சமூகத்தின் மீது அரசு குண்டைத் தூக்கி போட்டதுபோல் உள்ளது. இவ்வாறான சந்தர்ப்பத்தில் சிறுபான்மை சமூகங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் எதற்கும் அஞ்சாமல் சமூகத்திற்காக செயற்படவேண்டும்.

நாங்கள் எதற்கும் அஞ்சாதவர்கள் சமூக விடயங்களை எவ்விடத்திலும் விட்டுக்கொடுத்தது கிடையாது. அன்று பாராளுமன்ற சபா மண்டபத்தில் சமூகத்திற்காக பிரதமருக்கு விரலை நீட்டி சமூகத்தின் பாதுகாப்பை கேட்டவர்கள். எனவே இந்த விடயத்திலும் நாங்கள் தெளிவாக செயற்பட வேண்டியிருக்கிறது.
சிறுபான்மை சமூகத்திற்கு நியாயமான நீதியான தேர்தல் முறையினை ஏற்படுத்த வேண்டும். அதற்காக தமிழ், மலையக மற்றும் முஸ்லிம் சமூகத்தின் பாராளுமன்ற உறுப்பினர்கள் எல்லோரும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும். பிரதமர் அவர்களுக்கு நம்பிக்கை இல்லாப் பிரேரனை என்ற ஒரு விடயம் இந்த நாட்டில் அரங்கேர இருக்கின்றமை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மிகப் பெரும் பேரம் பேசும் சக்தியாக அமையவுள்ளது. இது ஏ.கே 47 அல்லது ரி 56 ஆயுதங்களை விட சக்திவாய்ந்த பெரும் ஆயுதமாக இவ்விடயத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களின் வகிபாகம் மாறியிருக்கின்றது.
அவ்வாறான ஒரு பெரும் பேரம் பேசும் சக்தியை வைத்துக் கொண்டிருக்கின்ற முஸ்லிம், தமிழ் மற்றும் மலையக தமிழ் சமூகங்களின் பாராளுமன்ற உறுப்பினர்கள் எல்லோரும் சிறுபான்மைச் சமூகங்களின் நலன்களுக்காக அவசரமாக ஓரணியில் ஒன்று திரண்டு சிறுபான்மை சமூகத்திற்கு எதிராக வர இருக்கின்ற மாகாண சபை தேர்தல் முறைமையை மாற்றி அமைத்து மீண்டும் பழைய விகிதாசார தேர்தல் முறைமைக்கு கொண்டு வருவதற்கான முயற்சியினை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த தேர்தல் முறை மாற்றம் என்பது சமூகத்தின் நீண்ட வரலாற்றைக் கொண்ட ஒரு நடவடிக்கை. எனவே சமூகத்திற்கான இப்பெரும் ஆபத்தினை நாங்கள் மௌனமாக பார்த்துக் கொண்டிருக்க முடியாது என்ற விடயத்தை இந்த கல்வி சமூகம் இருக்கின்ற சபையில் கூறிக்கொள்ள விரும்புவதாக பிரதி அமைச்சர் ஹரீஸ் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -