யுத்தத்தின் பின்னர் பேரினவாதிகள் முஸ்லிம்களை இலக்கு வைத்துள்ளனர்: ஐ.நா. தூதுக்குழுவிடம் அமைச்சர் ரவூப் ஹக்கீம்

ஊடகப்பிரிவு
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்-

யுத்தம் முடிவடைந்த பின்னர் பேரினவாத சக்திகள் தங்களுக்கான புதிய எதிரிகளாக முஸ்லிம்களை இனம்கண்டு, அவர்களின் இருப்புக்கும் பொருளாதாரத்துக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் விதத்தில் திட்டமிட்ட அடிப்படையில் வன்செயல்களை மேற்கொண்டு வருவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் இலங்கை வந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் விவகார திணைக்களத்தின் உதவி செயலாளர் நாயகம் ஜெப்ரி பெல்ட்மன் மற்றும் அவர்களது குழுவினரிடம் சுட்டிக்காட்டினார்.

ஐ.நா. பிரதிநிதி பெல்ட்மன் தலைமையிலான குழுவினர் இலங்கை முஸ்லிம் அரசியல் பிரமுகர்களை இன்று (11) கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலில் சந்தித்து முஸ்லிம்களுக்கு எதிரான கண்டி, அம்பாறை இனவாத வன்செயல்களை மையப்படுத்தி நீண்டநேரம் கலந்துரையாடியபோதே அமைச்சர் ரவூப் ஹக்கீம் இதனை அவர்களது கவனத்துக்கு கொண்டுவந்தார்.

இச்சந்திப்பில் அமைச்சர்களான ஏ.எச்.எம். பௌசி, கபீர் ஹாசிம், றிஷாத் பதியுதீன், பைசர் முஸ்தபா, பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான் ஆகியோரும் கருத்துகளை முன்வைத்தனர். முஸ்லிம் காங்கிரஸ் சர்வதேச விவகாரங்களுக்கான பணிப்பாளர் சட்டத்தரணி ஏ.எம்.பாயிஸும் இதில் கலந்து கொண்டார்.

ஐ.நா. உதவி செயலாளர் நாயகம் பெல்ட்மன் முன்னிலையில் கருத்து தெரிவித்த அமைச்சர் ரவூப் ஹக்கீம் மேலும் கூறியதாவது;

இலங்கையில் இனவாதம் ஆழமாக வேரூன்றிவிட்டது. வெறுப்பூட்டத்தக்க பேச்சுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட முடியாத நிலை காணப்படுகிறது. அம்பாறை மற்றும் கண்டி இனவாத வன்செயல்களின்போது சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டுவதற்கும், சட்டத்தை உரிய முறையில் செயற்படுத்துவதற்கும் போதிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை.

அண்மையில் நடந்த கண்டி, அம்பாறை முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத வன்செயல்களின்போது உள்ளூர் மற்றும் அயலூர் பெரும்பான்மை சமூகத்தினருடன் தூர இடங்களிலிருந்து அழைத்து வரப்பட்டவர்களும் ஈடுபடுத்தப்பட்டனர். அண்மைக்காலமாக தேசிய அரசாங்கத்திலுள்ள இரண்டு பிரதான கட்சியினரும் மாறிமாறி எதிர்த்து பேசுவது இதில் இலாபம் தேட முற்படும் வேறு அரசியல் கட்சிகளுக்கு இது பெரியதொரு வாய்ப்பாக அமைந்துவிட்டது.

2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்த பின்னர் 2012ஆம் ஆண்டளவில் இருந்து இந்நாட்டு முஸ்லிம்களுக்கு எதிரான வன்செயல்கள் உக்கிரமடைந்து வருகின்றன. 2014ஆம் ஆண்டில் மட்டும் நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிரான 350 சம்பவங்கள் நடந்துள்ளன. அவற்றில் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக போதிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.
இதனால் இங்கு ஜனநாயகத்திலும், அரசாங்கத்திலும் முஸ்லிம்கள் நம்பிக்கையிழந்து வருகின்றனர்.

அம்பாறை மாவட்டத்தில் திட்டமிட்ட குடியேற்றங்களின் காரணமாக அங்கு பெரும்பான்மையினராக வாழ்ந்துவந்த முஸ்லிம்களின் பரம்பலும் விகிதாசாரமும் குறைவடைய நேர்ந்துள்ளது என்றார்.

இவ்வாறாக பிந்திய இனவாத தாக்குதல்கள் புத்தளம் மாவட்டத்தில் ஆனமடுவிலும் நடைபெற்றுள்ளது. இவற்றை இன்னமும் கட்டுபடுத்த முடியாமல் இருப்பது கவலையளிப்பதாகவும் ஐ.நா. பிரதிநிதியிடம் கூட்டாக சுட்டிக்காட்டிய முஸ்லிம் அமைச்சர்கள், இஸ்லாம் போர்பியா என்கின்ற இஸ்லாத்துக்கு எதிரான அச்ச உணர்வு மேலோங்கியிருப்பது முஸ்லிம்களுக்கு எதிராக இனவாத சக்திகள் வன்முறையில் ஈடுபடுவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று என கூட்டாக தெரிவித்தனர்.

இவற்றை கவனமாக செவிமடுத்த ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் விவகார திணைக்களத்தின் உதவி செயலாளர் நாயகம் ஜெப்ரி பெல்ட்மன், நாட்டில் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு இவ்வாறான வன்செயல்கள் பாதிப்பதாக அமையும் என்றும், கூறப்பட்ட விடயங்கள் தொடர்பில் உரிய கவனம் செலுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

ஐ.நா. அரசியல் விவகார திணைக்களத்தின் ஆசிய, பசுபிக் பிராந்திய தலைமை அதிகாரி மேரி யமசிட்டா, இலங்கைக்கான ஐ.நா. நல்லிணக்க, அபிவிருத்தி ஆலோசகர் கீதா சப்ஹர்வால் ஆகியோரும் இந்தக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.









இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -