திருகோணமலை கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கந்தளாய் நகரில் இனவாதத்தை ஏற்படுத்த முயன்றதோடு,கடையொன்றின் கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்திய சந்தேக நபர்கள் இருவரை இம்மாதம் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கந்தளாய் நீதிமன்ற நீதிவான் துசித்த தம்மிக்க நேற்று(13) உத்தரவிட்டார்.
கந்தளாய் லீவாரத்தின மாவத்தையைச் சேர்ந்த 29 வயதுடைய ஒருவரும்,லே வீதி,மட்டக்களப்பு பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய இருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள் இருவரும் ஞாயிற்றுக்கிழமை (11)இரவு முச்சக்கர வண்டியில் சென்று கந்தளாய் நகரில் இனவாதத்தை தூண்டும் வகையில் முஸ்லிம் நபர் ஒருவரின் புடவைக்கடைக்கு கற்களை எறிந்து கண்ணாடிகளை உடைத்து சேதமாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளார்கள்.
இச்சம்பவம் தொடர்பாக கந்தளாய் பொலிஸ் நிலையத்தில் கடை உரிமையாளர் மேற்கொண்ட முறைப்பாட்டையடுத்து பொலிஸார் சி.சி.டிவி காணொலிகள் மூலம் சந்தேக நபர்கள் இருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். மட்டக்களப்பைச் சேர்ந்த சந்தேக நபர் தமிழர் என்பதோடு கந்தளாய் பகுதியில் உள்ள நிதி நிறுவனமொன்றில் ஊழியராக கடமையாற்றி வருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். சந்தேக நபர்கள் இருவரையும் பொலிஸார் கந்தளாய் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.