சியம்பலாண்டுவ, தும்பகஹவெல பகுதியில் முஸ்லிம்வியாபார நிலையங்களைப் பூட்டுமாறு அச்சுறுத்தல்!


பிரதமரின் கவனத்துக்கு கொண்டு சென்று கடைகளை 
மீளத்திறக்க நடவடிக்கை எடுத்த ஹிஸ்புல்லாஹ்
சி
யம்பலாண்டுவ, தும்பகஹவெல பகுதியில் முஸ்லிம்களின் வியாபார நிலையங்கள் இனவாதிகளின் அச்சுறுத்திலினால் கடந்த வாரம் பூட்டப்பட்டமை தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் நேரடி கவனத்துக்கு கொண்டு சென்ற புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், அப்பகுதியில் உள்ள வியாபார நிலையங்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்துள்ளதாகவும், பூட்டப்பட்ட கடைகள் மீண்டும் திறப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
நாட்டின் முஸ்லிம்களின் பாதுகாப்பு நிலை தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று நேற்று திங்கட்கிழமை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அலரி மாளிகையில் இடம்பெற்றது. இதில், அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், ரிஷாட் பதியூதீன், டி.எம்.சுவாமிநாதன், தயா கமகே, இராஜாங்க அமைச்சர்களான ஏ.எச்.எம்.பௌசி, எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் உள்ளிட்ட முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள், பொலிஸ்மா அதிபர், சட்டமா அதிபர், புலனாய்வுப் பிரிவு, மதிப்பீட்டு திணைக்களம் மற்றும் புனர்வாழ்வு அதிகார சபை அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது, நாட்டின் சமகால நிலைவரங்கள் தொடர்பில் கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் சியம்பலாண்டுவ, தும்பகஹவெல பகுதியில் இடம்பெற்றுள்ள சம்பவம் தொடர்பில் அரசின் கவனத்துக்கு கொண்டு சென்றதோடு அங்குள்ள முஸ்லிம்களுக்கு சொந்தமான வியாபார நிலையங்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு வலியுறுத்தினார்.
மேற்படி கலந்துரையாடல் தொடர்பில் கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்,
“பிரதமர் தலைமையில் கூடிய பாதுகாப்பு கூட்டத்தில் திகன, அம்பாறை கிந்தோட்டை பகுதிகளில் தொடர்ச்சியாக இடம்பெற்ற முஸ்லிம்களுக்கு எதிரான சம்பவங்கள் தொடர்பில் நீண்ட நேரம் ஆராயப்பட்டது.
இதன்போது, கடந்த சில நாட்களுக்கு முன்னர் சியம்பலாண்டுவ, தும்பகஹவெல பகுதியில் உள்ள முஸ்லிம்களுக்குச் சொந்தமான வியாபார நிலையங்களுக்கு இனவாத அமைப்புக்களினால் விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் தொடர்பில் பிரதமரின் கவனத்துக்கு கொண்டுசென்றேன்.
குறித்த சம்பவத்தினால் இதுவரை நான்கு கடைகள் பூட்டப்பட்டுள்ளதுடன் ஏனைய கடைகளையும் பூட்டுமாறு தொடர்ச்சியாக அழுத்தம் பிரயோகிக்கப்பட்டு வருகின்றது. எனவே, அங்குள்ள வியாபார நிலையங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்குமாறு வலியுறுத்தினேன்.
பின்னர், பிரதமர் உடனடியாக குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தியபோது இவ்வாறு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாகவும், அறிக்கைகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் சட்டம் ஒழுங்கு அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.
எனவே, மூடப்பட்ட வியாபார நிலையங்கள் உடனடியாக திறக்கப்பட வேண்டும் என்றும் அவர்களுக்குத் தேவையான பாதுகாப்பை வழங்குமாறும் பிரதமர் பொலிஸ்மா அதிபருக்கு பணிப்புரை வழங்கினார்.
இதேவேளை, கண்டி – திகன சம்பவத்தின் போது பாதிக்கப்பட்ட மக்களுக்கான கொடுப்பணவுகள், அவர்களது வீடுகள் - வியாபார நிலையங்களை மீளக்கட்டியெழுப்புதல் தொடர்பாகவும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது. அத்துடன், இவ்வாறான சம்பவங்கள் நாட்டில் மீண்டும் ஏற்படாமல் தடுப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய இன நல்லணிக்க செயற்பாடுகள் குறித்தும் இதன்போது ஆராயப்பட்டது.
அதேபோன்று, நாட்டின் நிலைமை சீராகும் வரை ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை நண்பகல் 12 மணிக்கு இவ்வாறு பாதுகாப்பு கலந்துரையாடலொன்றை நடத்துவது என்றும் அதில் முஸ்லிம் அமைச்சர்கள் கலந்து கொள்ள வேண்டும் எனவும் பிரதமர் தெரிவித்தார்” -என்றார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -