இலங்கை முஸ்லிம்கள் மீது காலத்துக்கு காலம் தொடர்ச்சியாக நடாத்தப்பட்டு வரும் அட்டூழியங்களுக்கும், அட்டகாசங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்க நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்துக்கு சர்வதேசம் பாரிய அழுத்தங்களை வழங்க வேண்டுமென முஸ்லிம் அரசியல் தலைவர்கள் இன்று காலை (11) ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் அலுவல்களுக்கான உதவிப் பொதுச்செயலாளர் ஜெப்ரி பெல்ட்மன் அவர்களிடம் வேண்டுகோள் விடுத்தனர்,
இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு கொழும்பு வந்திருக்கும் அவரை, சினமன் கிரான்ட் ஹோட்டலில் சந்தித்த முஸ்லிம் அரசியல் தலைவர்கள், அம்பாறையிலும், கண்டியிலும் முஸ்லிம்கள் மீதும், பள்ளிவாசல்கள் மீதும், சொத்துக்கள் மீதும் நடாத்தப்பட்ட கொடூரமான வன்முறைகளை விபரித்ததுடன், இன்னும் இவ்வாறான அடாவடித்தனங்கள் முடிவுக்கு கொண்டுவராமல் இருப்பதாகத் தெரிவித்தனர்.
இந்த சந்திப்பில் அமைச்சர்களான ரிஷாட் பதியுதீன், ரவூப் ஹக்கீம், கபீர் ஹாஷிம், பைசர் முஸ்தபா மற்றும் இராஜாங்க அமைச்சர் பௌசி, முஜிபுர் ரஹ்மான் எம்.பி ஆகியோருடன், முஸ்லிம் காங்கிரஸின் வெளிவிவகாரப் பணிப்பாளர் சட்டத்தரணி ஏ.எம்.பாயிஸ், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர்.ஏ.ஆர்.ஹபீஸ் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.
ஐ.நா சபையின் இராஜதந்திரியுடனான இந்தச் சந்திப்பின் போது, முஸ்லிம் தலைவர்கள் கூறியதாவது,
முஸ்லிம்களின் பள்ளிவாசலையும், சொத்துக்களையும் அழிக்கும் நோக்கில் திட்டமிட்டு. குறிவைத்தே இந்த வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன. கண்டி மாவட்டத்தில் முஸ்லிம்களின் பெருமளவிலான சொத்துக்கள் அழிக்கப்பட்டிருக்கின்றன. பள்ளிவாசல்கள் உடைக்கப்பட்டிருக்கின்றன. பொலிஸாரும்,
பாதுகாப்புப் படையினரும் நினைத்திருந்தால் இந்த சம்பவத்தை தடுத்திருக்காலாம். முறையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தால், ஓரிரு நாட்களில் வன்முறைகள் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டிருக்கலாம்.
எனினும், ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்தும் பாதுகாப்புத் தரப்பினர் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த போதும், வன்முறையாளர்கள் தமது கைங்கரியத்தை வெற்றிகரமாக மேற்கொண்டனர் என்று அவர்கள் கவலை வெளியிட்டனர்.
அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் இரண்டு பிரதான கட்சிகளும், பெரும்பான்மை இன மக்களின் வாக்குகளை மையமாக வைத்தே செயற்படுகின்றன. முஸ்லிம்கள் மீது வன்முறையில் ஈடுபடுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுத்தால், தமது கட்சிக்கு பெரும்பான்மை மக்களின் வாக்கு வங்கி இல்லாமல் போய்விடும் என்ற அச்சம், அரசின் அதிகாரத்தில் உள்ள கட்சிகளுக்கு இருக்கின்றது என்றே நாம் எண்ணுகின்றோம்.
எனவே, இந்த மனோபாவத்தை அவர்கள் இல்லாமலாக்க வேண்டுமென்று குறிப்பிட்ட முஸ்லிம் அரசியல்வாதிகள், இலங்கையில் உள்ள பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஒரு சிறு குழுவும் இனவாத ஊடகங்களும் முஸ்லிம்களைப் பற்றி பிழையான கருத்துக்களையும், தவறான எண்ணங்களையும் பரப்பி வருவதே இவ்வாறான சம்பவங்கள் விஷ்வரூபம் எடுக்க காரணமாய் அமைகின்றது என்றும் குறிப்பிட்டனர்.
இந்த வன்முறை சம்பவத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டவர்களுக்கு இலங்கையில் உள்ள ஐ.சீ.சீ.பி.ஆர் சட்டத்தின் கீழ், அதிகபட்ச தண்டனை வழங்க ஐ.நா வலியுறுத்த வேண்டும் எனவும், கைது செய்யப்படாமல் தப்பியிருக்கும் வன்முறையாளர்களையும் சட்டத்தின் முன் நிறுத்த ஐ.நா உதவ வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்தனர்.
அத்துடன், பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடு வழங்கப்பட வேண்டும் என்றும், சட்டத்தைப் பாதுகாக்கும் பொலிஸார் தமது கடமைகளை பாரபட்சமின்றி செய்யும் வழிமுறைகள் உருவாக்கப்பட்டு, சிறுபான்மை மக்களுக்கும் பொலிஸார் நீதியாக கடமைகளை மேற்கொள்ளும் பொறிமுறைகள் ஏற்படுத்தப்படுவது காலத்தின் தேவையாகும் என்றும் முஸ்லிம் அரசியல் தலைவர்கள் வலியுறுத்தினர்.
இந்த சந்திப்பின் போது, அமைச்சர்களான ரிஷாட் பதியுதீன், ரவூப் ஹக்கீம், பைசர் முஸ்தபா ஆகியோர் வன்முறைகள் மிகவும் மோசமாக இடம்பெற்ற போது, தாங்கள் அந்தப் பிரதேசத்தில் நின்று கண்ட காட்சிகளையும், நடைபெற்ற சம்பவங்களையும் விபரித்தனர்.