அரசாங்கத்தை கவிழ்க்கும் மஹிந்தவின் அடுத்த அரசியல் பொறிக்குள் நல்லாட்சி அரசு விழுந்து மூச்சுத் திணறுமா? அல்லது தப்பிப் பிழைக்குமா? என்பது காலம் (ஏப்ரில் 04) சொல்லவுள்ள பதில். இந்தக் காலத்தின் மீது இதுவரை நம்பிக்கை ஏற்படாத மஹிந்த, வெற்றியோ - தோல்வியோ அதனை தனது சாதனையாக்கப் பார்ப்பார். அதனால்தான் பிரதமருக்கு எதிரான ஆவணத்தில் மஹிந்த ஒப்பமிடவில்லை. தனது சகாக்களுக்கு பின்னால் நின்று, காயை நகர்த்தும் முன்னாள் ஜனாதிபதியும், இந்நாள் எம்.பியுமான மஹிந்த ராஜபக்ஷ இறுதிக் கட்டத்தில்தான் பொறியை விரிப்பார். தனக்கும் இதில் பங்குண்டு என்பதை ஏனையோருக்கு எடுத்துக்காட்டும் தூண்டிலாகவே அவரின் செயற்பாடு உள்ளது.
பிரேரணையில் தானும் கையொப்பமிட்டு ஒருவேளை அது தோற்றுப்போனால் தனது மவுசும், மதிப்பும் பெட்டிப்பாம்பாக அடங்கிவிடும். என்பதை உணர்ந்தோ! என்னவோ! பிரேரணை வெற்றியளிக்கும் தறுவாயில் ஒப்பமிடவும், தோற்கும் பட்சத்தில் ஒதுங்கிக்கொள்ளவும் தருணம் பார்த்துக் கொண்டிருக்கின்றார். பிரேரணை தோற்றால் இதில் தனக்கு ஈடுபாடு இல்லை என்பதாகவும், பிரேரணை வென்றால் தனது இராஜதந்திரத்தால் இதனைச் சாதித்ததாகவும் அவர் புருவம் விரிக்கக்கூடும்.
இத்தனைக்கும் இன்னும் எத்தனையோ எம்.பிக்களின் ஆதரவு இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையின் வெற்றிக்கு தேவைப்படும். இதற்காக சுதந்திரக் கட்சியினதும், ஐக்கிய தேசியக் கட்சியினதும் அடிவேர்களை எல்லாம் அசைத்துப் பார்க்கும் முயற்சிகளும் இன்னும் சொற்ப நாட்களில் கட்டவிழ்த்துவிடப்படும். இந்தக் கட்டின் பொறிக்குள் அகப்படுவோரின் அரசியல் ஆயுளை மஹிந்தவால் ஒருபோதுமே தீர்மானிக்க முடியாது.
பிரேரணையில் ரணில் வென்றால், கட்சி தாவி மஹிந்தவுடன் சேர்ந்தோரின் அரசியல் இருப்பு கேள்விக்குறியாகலாம், இந்தக் காய் நகர்த்தலில் மஹிந்த வெல்வது கட்சி தாவியோரின் அரசியல் கனவுகளுக்கு அர்த்தம் கொடுக்கவும் கூடும்.
உள்ளூராட்சித் தேர்தலில் தனது இமேஜையும், மக்கள் செல்வாக்கையும் மீள நிரூபித்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த, பிரதமர் ரணிலுக்கு எதிரான இந்தப் பிரேரணையில் கனகச்சிதமாகவே காய் நகர்த்துவார். நாடு பூராகவும் தாம் பெற்ற வெற்றியை வெறுமனே கடதாசியில் மாத்திரம் கையொப்பமிட்டு, கையிழக்க அவர் ஒருபோதும் விரும்பப்போவதில்லை. இவ்விடத்திலேதான் இந்தப் பொறியின் எதிர்காலம் உள்ளது.
“காட்டுச் சிங்கமேதான் ராஜா, யானை இல்லை” என்ற யதார்த்தத்தை எடுத்துக் காட்டிய மஹிந்த, பாராளுமன்றுக்கு வந்திருப்பதும் விடயத்தோடுதான்.