இலங்கையில் இருக்கின்ற நாங்கள் அடையாளம் கண்ட இனவாதிகள் அனைவரையும் விட மிகமோசமான இனவாதியாக நான் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவினை நான் காண்கின்றேன். என திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர் தெரிவித்தார்.
சம்மாந்துறை பிரதேச செயலக கலாசாரப் பேரவையின் கலாசாரவிழா சம்மாந்துறை அப்துல் மஜீத் மண்டபத்தில் பிரதேச செயலாளர் எஸ்.எம்.முகம்மட் ஹனீபா தலைமையில் நேற்றுமுன்தினம்(29) இடம்பெற்றது. அதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தொடர்ந்தும் உரையாற்றுகையிலே – முஸ்லிம்களுக்கு எதிரான செயற்படும் இனவாத கடும்போக்குவாத சக்திகளுக்கு அடிபணிந்த ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேனாவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் காணப்படுகின்றனர்.
இந்த நாட்டு முஸ்லிம்களக்கு எதிராக அதிகரித்துவரும் வன்முறைகளிலிருந்து அவர்களை காப்பாற்ற முடியாதவர்களாகவும், அவர்களின் சொத்துக்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்காதவர்களாகவும் இவ்விருவர்களும் காணப்படுகின்றனர்.
முஸ்லிம்களுக்கு எதிராக மஹிந்தவின் ஆட்சியில் இடம்பெற்ற அளுத்கம, வேருவளை சம்பவங்களால் விரக்தி அடைந்த முஸ்லிம்களில் சுமார் 95 வீதத்திற்கும் அதிகமானவர்கள் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு தமது வாக்குகளை அளித்தனர். சமூக அமைதியை குலைத்தவர்கள் உட்பட சகல குற்றவாளிகளையும் சட்டத்தின் முன் நிறுத்துவேன் என அளித்த வாக்குறுதினை நம்பியே மக்கள் அவருக்கு வாக்களித்தனர். இன்று ஜனாதிபதி முஸ்லிம்களின் உணர்வுகளை துச்சமென மதித்து செயற்பட்டு வருகின்றார். முஸ்லிம்கள் கழுதைக்கு பயந்து புலிக்கூட்டிற்குள் புகுந்த கதையாக மாறியுள்ளது.
கடந்த 30வருடகால யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழ்மக்களின் வலிகளுக்கு இன்னமும் முறையான நிவாரணங்கள் வழங்கப்படாத நிலையில் அவ்வலிகளின் குரல்கள் தேசியத்திலும், சர்வதேசத்திலும் ஒலித்துக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் முஸ்லிம்களை நோக்கி இனவாதம் அதன் சுடரை விரியவிட்டிருப்பதனை அண்மைய வன்முறைகள் பறை சாட்டுகின்றன.
அளுத்கம முதல் காலி கிந்தோட்டை அம்பாறை கண்டி திகன கட்டுகஸ்தோட்டை வரையும் இனவாதத்தின் தீப்பொறி அப்பாவி முஸ்லிம்களின் பொருளாதாரத்தை அழித்தொழித்திருப்பது மாத்திரமன்றி இந்நாடு முஸ்லிம்கள் வாழ்வதற்கு பாதுகாப்பற்றது என்பதையும் சர்வதேசத்திடம் அடையாளப்படுத்தியிருக்கின்றது.
சர்வதேச சமூகத்துக்கு முன்னால் இலங்கை தலைகுனிந்து நின்கின்ற நிலவரத்தை முஸ்லிம்களுக்கு எதிரான கலவரங்கள் ஏற்படுத்தியுள்ளன. நல்லாட்சியை கொண்டுவந்த சக்திகள் மீது அரசு கடைப்பிடிக்கும் அணுகுமுறை முஸ்லிம்கள் மத்தியில் இன்று ஆவேசத்தையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இவ்வாறான சூழலில்தான் முஸ்லிம் சமூகத்தின் உரிமைத்துவக் கட்சியான ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய ரீதியாகவும், சர்வதேச ரீதியாகவும் முஸ்லிம்கள் சார்ந்த விடயங்களில் மிகவும் நேர்த்தியாகவும், புத்திசாதுரியத்துடனும் தனது காய்நகர்த்தலை மேற்கொண்டு வருகின்ற இத்தருணத்தில் இவ்வியக்கத்தினை பலவீனப்படுத்துவதன் மூலம் முஸ்லிம் சமூகத்தினையும் பலவீனப்படுத்தலாம் என்ற சதித்திட்டத்தில் முஸ்லிம் காங்கிரசுக்கு எதிரான சக்திகளோடு இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கைகோர்த்துள்ளார்.
இலங்கையில் முஸ்லிம்கள் மீது காலத்துக்குகாலம் தொடர்ச்சியாக நடாத்தப்பட்டு வரும் தாக்குதலுக்கு முற்றுப்புள்ளி வைக்க நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்திற்கு சர்வதேசம் பாரிய அழுத்தங்களை வழங்க வேண்டுமென எமது கட்சியும் அதன் தலைமையும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதனால்தான் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எமது கட்சியின் பலத்தை உடைப்பதற்கு கட்சியின் இதயமான அம்பாறை மாவட்டத்தில் உள்ளுராட்சி மன்றங்களின் ஆட்சி அதிகாரத்தை எமது கட்சிக்கு கிடைக்கவிடாமல் எமக்கு எதிரான கட்சியோடு ஆட்சி அமைக்க ஆதவு வழங்கியுள்ளார்.
இனவாதத்துக்கெதிரான இன ஒற்றுமையில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் ஒற்றுமையானது காலத்தின் தேவையாகவுள்ளது. சிறுபான்மை இனங்களின் இன உறவு சீர்குலையுமாயின் இனவாத சிந்தனை கொண்டோரின் செயற்பாடுகளை மிக இலகுவாக முன்நகர்த்துவதற்கும் அவர்களின் இலக்ககளை அடைந்து கொள்வதற்குமான கதவுகள் இலவுவாக திறந்து கொள்ளப்படும் என்பதனை தமிழ், முஸ்லிம் சமூகங்கள் புரிந்து செயற்படுவது அவசியமாகும்.
இச்சூழ்நிலையில்தான் சிறுபான்மை மக்களிடையே ஒற்றுமையின் அவசியம் உணரப்பட வேண்டியதொன்றாக நோக்கப்படுகின்றது. எதிர்கால சிறுபான்மை சமூகத்தின் இருப்பு ஆரோக்கியமாக அமைய வேண்டுமாயின் நாம் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும்.
இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே.விமலநாதன், நீதி அமைச்சின் மேலதிக செயலாளர் ஏ.மன்சூர், போராசிரியர் றமீஸ் அப்துல்லா, சம்மாந்துறை பிரதேச சபையின் உதவித் தவிசாளர் வி. ஜெயச்சந்திரன், களைஞர்கள், மாணவர்கள் சம்மாந்துறை பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்கள்.
சம்மாந்துறை பிரதேச செயலக கலாசாரப் பேரவையின் கலாசாரவிழா சம்மாந்துறை அப்துல் மஜீத் மண்டபத்தில் பிரதேச செயலாளர் எஸ்.எம்.முகம்மட் ஹனீபா தலைமையில் நேற்றுமுன்தினம்(29) இடம்பெற்றது. இதன்போது கலாபூசணம் மாறன் யூ.செயின் எழுதிய “இரத்த நரம்புகள்” நூல் அறிமுகமும், பட்டறை மலர் வெளியீடும், “சுவதம்” கலைஞர் கௌவிப்பும் மற்றும் சான்றிதழ் வழங்கலும் இடம்பெற்றது. இதில் திகாமடுல்ல பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர், அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே.விமலநாதன், நீதி அமைச்சின் மேலதிக செயலாளர் ஏ.மன்சூர், போராசிரியர் றமீஸ் அப்துல்லா, சம்மாந்துறை பிரதேச சபையின் உதவித் தவிசாளர் வி. ஜெயச்சந்திரன் மற்றும் களைஞர்கள், கல்விமான்கள், புத்திஜீவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.