அலைகள் புரண்டு அழுது.....
-கவிதாயினி அமுதா பொற்கொடி-
அலைகள் புரண்டு அழுது
கரையிடம் சொல்லிடும் சோகமென்ன...?
இலைகள் இணங்கி இன்புற்று
காற்றிடம் கிசுகிசுக்கும் இரகசியமென்ன
மலைகள் தழுவி வீழ்த்திடும்
அருவியிடம் கொஞ்சும் கவிதையென்ன
மாலை மறையும் கதிரிடம்
மன்றாடி கெஞ்சிடும் கேள்விகளென்ன
மணல்துகள் இறுக்க அணைத்து
வேர்பற்றிடம் உரைக்கும் சத்தியமென்ன
பனித்துளிகள் களைத்து உறங்கிட
புல்வெளியிடம் கதைக்கும் கதைகளென்ன
வண்டுகள் வாஞ்சையில் தேனுண்ண
பூவிதழுடன் செய்திடும் சமரசமென்ன
செண்டுகள் மலர்ந்து மணம்வீச
தென்றலுடன் கொண்ட உடன்பாடென்ன
வெளிர்மதி தன்முகம் திரையிட்டு
முகிலிடம் ஆடிடும் ஊடலென்ன
குளிர்நதி துள்ளியோடி கலந்து
கடலுடன் எழுப்பும் ஓங்காரமென்ன
இயற்கை இகக்கும் இவ்வின்ப ஒலிகள்
இதயத்தை நனைக்கும் இசைபொழிகள்
இயைந்து இகம் அதை இரசித்திட
இறைமை அருளிய பொதுமொழிகள்!