முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது
முஸ்லிம் காங்கிரஸ் பிரதித்தலைவர் எச்.எம்.எம். ஹரீசுக்கு எதிராக முஸ்லிம் காங்கிரசினால் ஒழுக்காற்று நடவடிக்கை மேட்கோள்ளப்பட போவதாகவும், இதுபற்றி அதியுயர்பீட கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகவும் செய்திகள் திட்டமிட்டு பரப்பப்பட்டு வருகின்றது.
சிங்கள பேரினவாதிகளின் முஸ்லிம்களுக்கெதிரான தாக்குதலிலிருந்து இன்னும் முழுமையாக விடுபடாத நிலையில் இவ்வாறான செய்திகள் மூலம் மக்களை ஏன் குழப்புகின்றார்கள் என்று சிந்திப்பது அவ்வளவு கடினமல்ல.
சமூகத்துக்காக குரல் கொடுத்தார் என்பதற்காக கட்சியின் முக்கியஸ்தர் எவருக்காவது ரவுப் ஹக்கீம் அவர்களின் தலைமைத்துவ வரலாற்றில் ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்ததாக இல்லை. மாறாக அவ்வாறானவர்கள் முன்னிலைப்படுத்தப்பட்டே உள்ளார்கள். கடந்த அதியுயர்பீட கூட்டத்திலும் ஹரீசின் செயல்பாட்டுக்காக தலைவர் ரவுப் ஹக்கீம் ஹரீசை பாராட்டி பேசினார்.
அவ்வாறு ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதென்றால் பல வருடங்களாக தலைவரினதும், கட்சியினதும் கொள்கைக்கு முரணான கருத்துக்களை பகிரங்கமாக கூறித்திரிந்த பசீர் சேகுதாவூத் போன்றவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.
இதில் வேடிக்கை என்னவென்றால், தலைவர் ரவுப் ஹக்கீமையும், பிரதியமைச்சர் ஹரீஸயும் விமர்சிப்பதனை தொழிலாக செய்கின்றவர்களே இந்த விடயத்தினையும் தூக்கிப் பிடித்துக்கொண்டு விமர்சனம் செய்கின்றார்கள்.
இந்தவிடயத்தில் ஹரீஸ் மீது அனுதாபம் தெரிவிப்பதாக காட்டிக்கொள்வதன் மூலம், தலைவர் ரவுப் ஹக்கீமுக்கு எதிராக ஹரீஸ் அவர்களை தூண்டுகின்ற நடவடிக்கைகளில் அமைச்சர் ரிசாத்தின் ஆதரவாளர்கள் மிகவும் வேகமாக செயல்படுவதனை காணக்கூடியதாக உள்ளது.
கண்டி மாவட்டத்தில் சிங்கள இனவாதிகள் தாக்குதல் நடாத்தியபோது தலைவர் ரவுப் ஹக்கீம் அவர்கள் களத்தில் நின்று ஆற்றிய பணியானது ஒரு சாதாரணமானதல்ல. அவரது செயல்பாட்டினால் அம்மாவட்டத்தில் உள்ள முஸ்லிம் மக்கள் மத்தியில் கடந்த காலங்களையும் விட கூடுதலாக செல்வாக்கு அதிகரித்து காணப்படுகின்றது.
இது ரவுப் ஹக்கீமை மக்கள் மனதிலிருந்து அகற்றுவதற்கு நாளாந்தம் சிந்தித்துக் கொண்டு பொய் பிரச்சாரங்களை மேற்கொள்பவர்களுக்கு பாரிய தோல்வி மட்டுமல்லாது அவர்களை நின்மதியிழக்கவும் செய்துள்ளது.
ஒவ்வொரு ஊரிலும் போட்டி அரசியல் உண்டு. அதாவது ஒரு ஊரில் அரசியல் அதிகார பதவியில் அதி உச்சத்தில் ஒருவர் இருந்தால், அந்த இடத்தினை பிடிப்பதற்கு அதே ஊரை சேர்ந்த இன்னுமொருவர் அதிகாரத்தில் இருப்பவருக்கு எதிராக காய் நகர்த்துவது இலங்கை அரசியலில் ஒரு புதுமையல்ல.
இந்த போட்டி அரசியலானது மக்கள் செல்வாக்குகள் உள்ள காட்சிகளில் மட்டுமே அதிகமாக காணப்படுகின்றது.
முஸ்லிம் காங்கிரஸ் ஒரு ஜனநாயக கட்சி. அதன் அதியுயர்பீட கூட்டத்தில் பலரும் பலவிதமான கருத்துக்களை முன்வைப்பார்கள். ஒருவர் ஹரீசுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கூறினால், அது ஒரு முட்டாள்தனமான கருத்து என்பதனை தலைவர் அறியாமலுமல்ல.
எனவே ஒருவரது தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப கூறப்படுகின்ற எந்தவொரு கருத்துக்களும் தலைவரின் கூற்றாகவும், அது கட்சியின் தீர்மானமாகவும் ஏற்றுக்கொள்ள முடியாது.