முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைமை ரவூப் ஹக்கீம் அவர்களின் அகவை 58ல் அரசியல் பயணம் தொடர்பில் ஒரு கண்ணோட்டம்.


எம்.என்.எம்.யஸீர் அறபாத் ஓட்டமாவடி-
லங்கையின் மத்திய மலை நாட்டில் நாவலப்பிட்டியில் பிரபல்யமான குடும்பத்தில் அப்துல் ரவூப்,ஹாஜரா தம்பதிகளுக்கு 1960 ஏப்ரல் 13ல் மகனாக ஹிபதுல் ஹக்கீம் பிறந்தார்.
இலங்கையின் தலைசிறந்த பாடசாலையான ரோயல் கல்லூரியில் பாடசாலைக்கல்வியைத் தொடர்ந்த ரவூப் ஹக்கீம், பின்னர் சட்டக்கல்லூரியில் தனது சட்டக்கல்வியைத் தொடர்ந்து சட்டத்தரணியானார்.

இவர் கல்வி கற்கும் காலத்தில் தன்னிடமுள்ள வாதத்திறமையால் பேச்சு போட்டியில் தேசிய ரீதியில் முதலிடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இவர் பின்னர் சட்டத்துறையில் சட்ட முதுமானியையும் பூர்த்தி செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
சட்டத்தரணியாக வெளியேறிய ரவூப் ஹக்கீம் அவர்கள் ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா அவர்களின் அலுவலகத்தில் வேலை செய்தார்.
அந்தச்சந்தர்ப்பத்தில் பாயிஸ் முஸ்தபா அவர்களால் அறிமுகஞ்செய்து வைக்கப்பட்டவர் தான் மர்ஹும் அஷ்ரப் அவர்கள்.
இதன் பின்னர் ரவூப் ஹக்கீம் அவர்களின் சமூகம் சார்ந்த உணர்வுகளாலும் அவரின் சுறுசுறுப்பான செயற்பாடுகளாலும் தலைவர் அஷ்ரப் அவர்கள் கவரப்பட்டார்கள்.
அதே போல் தலைவர் அஷ்ரப் அவர்களின் சமூகம் சார்ந்த கருத்துக்களால் கவரப்பட்ட ரவூப் ஹக்கீம், அஷ்ரப் அவர்கள் முஸ்லிம் சமூகத்திற்காக உருவாக்கிய சமூக விடிவெள்ளியான முஸ்லிம் காங்கிரஸில் 1988ல் இணைந்து கொண்டார்.
இவ்வாறு தனது அரசியல் பயணத்தை ஆரம்பித்த ரவூப் ஹக்கீம் அவர்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச்செயலாளராக தலைவர் அஷ்ரப் அவர்களால் நியமிக்கப்பட்டு, 1992 தொடர்கம் 2000ம் ஆண்டு வரை செயற்பட்டார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 1994ம் ஆண்டு சுதந்திரக்கட்சியுடன் (PA) இணைந்து பொதுத்தேர்தலில் போட்டியிட்ட போது பெறப்பட்ட தேசியப்பட்டியலூடாக ரவூப் ஹக்கீம் அவர்கள் பராளுமன்றத்திற்குள் பிரவேசித்தார். பின்னர் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித்தலைவராகவும் நியமிக்கப்பட்டார்.
முஸ்லிம் காங்கிரஸின் இஸ்தாபகத்தலைவர் மர்ஹும் அஷ்ரப் அவர்கள் தனது தூரநோக்கின் அடிப்படையில் 1999ல் தேசிய ஐக்கிய முன்னனி (NUA) என்ற கட்சியை இஸ்தாபித்தார். 2000 மாம் ஆண்டு பொதுத்தேர்தலில் கண்டி மாவட்டத்தில் நுஆ கட்சியில் ரவூப் ஹக்கீம் அவர்கள் போட்டியிட்டார்கள்.

இவ்வாறாக தேர்தல் பிரசாரங்கள் சூடுபிடித்திருக்கும் சந்தர்ப்பத்தில் தலைவர் அஷ்ரப் அவர்கள் சதிகாரர்களின் சூழ்ச்சிக்கு இரையானார். இந்தத்தேர்தலில் ரவூப் ஹக்கீம் அவர்கள் வெற்றி பெற்றார்கள்.
இதன் பின்னர் முஸ்லிம் காங்கிரஸின் தேசியத்தலைவராக ரவூப் ஹக்கீம் அவர்கள் தெரிவு செய்யப்பட்டார்கள்.
தெரிவில் ஏற்பட்ட பிரச்சனைகள் காரணமாக பேரியல் அஷ்ரப் அவர்களுடன் இணைந்து இணைத்தலைவராகச் செயற்பட்டார்.
இந்த காலப்பகுதியில் சந்திரிக்கா அம்மையாரின் அரசாங்கத்தில் ரவூப் ஹக்கீம் அவர்கள் உள்நாட்டு மற்றும் சர்வதேச வர்தக வணிகத்தொடர்பு, முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள், கப்பல்துறை அபிவிருத்தி அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
2001ம் ஆண்டு முஸ்லிம்களுக்கெதிராக நடந்த கலவரம் தொடர்பாக குரல் கொடுத்ததன் விளைவாக அமைச்சரவையிலிருந்து ரவூப் ஹக்கீம் அவர்கள் வெளியேற்றப்பட்டார்கள்.
இதனைத்தொடர்ந்து கட்சிக்குள் இணைத்தலைமை தொடர்பாக முரண்பாடுகள் ஏற்படவே பேரியல் அஷ்ரப் அவர்கள் நுஆ கட்சியுடன் சந்திரிக்கா அம்மையாருடன் இணைந்து கொண்டார்.
ரவூப் ஹக்கீம் அவர்கள் முஸ்லிம் காங்கிரஸுடன் வெளியேற அவருடன் முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்களும் வெளியேறினார்கள். அதே காலப்பகுதியில் பாராளுமன்றமும் கலைக்கப்பட்டது.
இதன் பின்னர் 2001ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய தேசியக்கட்சியுடன் இணைந்து, 2001ம் ஆண்டு பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னனி (UNF) ல் கண்டி மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
அதன் பின்னர் ஆளுங்கட்சியாக ரணில் விக்கிரமசிங்க தலமையிலான ஐக்கிய தேசிய முன்னனி அரசாங்கம் அமைந்தது.
இதில் ரவூப் ஹக்கீம் அவர்கள் துறைமுக அபிவிருத்தி மற்றும் கப்பல்துறை, கிழக்கு அபிவிருத்தி மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
2004ம் ஆண்டு பொதுத்தேர்தலின் போது அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதன் பின்னர் அமைந்த பாராளுமன்றத்தில் ஆட்சியை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு பிடித்தது. முஸ்லிம் காங்கிரஸ் எதிர்க்கட்சியாக இருந்து 2007ல் முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புடன் இணைந்து கொண்டது.

இக்காலப்பகுதியில் அதன் தலைவராக மஹிந்த ராஜபக்ச இருந்தார். இதன் போது ரவூப் ஹக்கீம் அவர்கள் தபால் மற்றும் தொலைத்தொடர்பு அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
பின்னர் அதே வருடம் டிசம்பரில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறி ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணைந்து கொண்டார்.
அதன் பின்னர் ஏப்ரல் 2008ல் பாராளுமன்றப் பதவியை இராஜனாமாச்செய்து கிழக்கு மாகாண சபைத்தேர்தலில் திருகோணமலையில் ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணைந்து போட்டியிட்டு அதிலும் வெற்றி பெற்றார்.

ஆனால், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆட்சியமைத்தது. இதனால், அதனை ஜூலை 2008ல் இராஜனாமாச் செய்து விட்டு ஐக்கிய தேசிய முன்னணியின் தேசியப்பட்டியலூடாக பாராளுமன்றம் சென்றார்.

பொதுத்தேர்தல் 2010ல் ஐக்கிய தேசிய முன்னணியூடாக கண்டி மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் 2010 நவம்பரில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்து கொண்டார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தில் நீதி அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

அதன் பின்னர் 2014 டிசம்பரில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிலிருந்து வெளியேறி ஜனாதிபதித்தேர்தலில் போட்டியிட்ட பொது வேட்பாளர் மைதிரிபால சிரிசேனவுக்கு ஆதரவை வழங்கி நல்லாட்சி ஏற்படுவதற்கு உதவி செய்தார்.
அதன் பின்னரான அரசாங்கத்தில் நகர அபிவிருத்தி மற்றும் நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
அதன் பின்னர் நடைபெற்ற பொதுத்தேர்தலின் பின்னர் உருவாக்கப்பட்ட நல்லாட்சி தேசிய அரசாங்கத்தில் நகரத்திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத் தக்கது.

இவ்வாறு பல்வேறு அரசியல் பதவிகளைத் தாண்டி சமூகத்தை தோளில் சுமந்த தலைவனாகவும் இலங்கை முஸ்லிம்களின் ஏகோபித்த தலைவனாகவும் சிங்கள அரசியலில் ஆட்சியை தீர்மானிக்கின்ற சக்தியாக முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை வழி நாடத்தும் ரவூப் ஹக்கீம் அவர்கள் சிங்கள அரசுகளும் சர்வதேசமும் ஒட்டு மொத்த முஸ்லிம்களின் குரலாக ரவூப் ஹக்கீம் அவர்களையே நோக்குகின்றது.
தனது பன்மொழித்திறமையாலும் வாதத்திறமையாலும் அரசியல் முதிர்ச்சியாலும் முஸ்லிம் காங்கிரசை வழிநடாத்தும் தலைமை இன்னும் பல்லாண்டு வாழ்ந்து முஸ்லிம் சமூகத்திற்கும் இலங்கை நாட்டுக்கும் சேவையாற்ற வேண்டுமென பிராத்திப்போம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -