பிரதி மேயராக தெரிவு செய்யப்பட்டுள்ள தமிழர் விடுதலைக் கூட்டணியின் காத்தமுத்து கணேஷ் அணியுடன் எமக்கு எவ்வித இரகசிய ஒப்பந்தமும் கிடையாது எனவும் அவர் குறிப்பிட்டார்.
இன்று திங்கட்கிழமை இரவு தனது சாய்ந்தமருது இல்லத்தில் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பின்போதே பிரதி அமைச்சர் இவ்விடயங்களை தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்;"தேர்தல் முடிவுகள் வெளியான கையுடன் கல்முனை மாநகர சபையில் ஆட்சியமைப்பதற்காக சாய்ந்தமருது சுயேச்சைக் குழுவுக்கு எமது தலைவர் ரவூப் ஹக்கீமினால் அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் அதனை அவர்கள் நிராகரித்து விட்டனர்.
அதன் பின்னர் அடுத்த கூடிய ஆசனங்களை கொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் அவர்களினால் முன்வைக்கப்பட்ட நிபந்தனைகள் முஸ்லிம் சமூகத்திற்கு பாதகமானவை என்பதனால் அவர்களுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதை தவிர்த்துக் கொண்டோம்.
அதேவேளை அகில இலங்கை மக்கள் காங்கிரசுக்கு நாம் அழைப்பு விடுத்தபோது அவர்கள் அதற்கு சாதகமான பதிலை அளிக்காமல் காலத்தை இழுத்தடிப்பு செய்து வந்தனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைமையுடன் நான் பேசியபோது முஸ்லிம் காங்கிரசுக்கு ஆதரவளிக்க தயாரில்லை எனவும் வேறு தரப்புகளுடன் இணைந்து தமது கட்சி ஆட்சியமைக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்து வந்தது. இன்று திங்கட்கிழமை (நேற்று) காலை கூட அவர் எமக்கு கைகொடுக்க முன்வரவில்லை. தான் ஆட்சியமைப்பதிலேயே குறியாக இருந்தார்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸை இணைத்துக் கொண்டு ஆட்சி அமைப்பது தொடர்பில் கல்முனை ஜும்ஆ பள்ளிவாசலின் அனுசரணையுடன் பல்வேறு முயற்சிகளை நாம் முன்னெடுத்து வந்தோம். ஆனால் சாய்ந்தமருது தோடம்பழ சுயேட்சைக்குழு மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு என்பவற்றுடன் இணைந்து ஆட்சியை கைப்பற்றுவதற்காக அமைச்சர் ரிஷாத் அம்பாறையில் முகாமிட்டு தீவிர முயற்சிகளில் ஈடுபட்டிருந்தார். எம்மால் நிராகரிக்கப்பட்ட தமிழ் கூட்டமைப்பின் ஹென்றி மகேந்திரனுடனும் அவர் பேசிக்கொண்டிருந்தார்.
இந்நிலையில்தான் நாம் இதர தரப்புய்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி ஆட்சியமைப்பதற்கான ஆசனங்களை உறுதிப்படுத்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருந்தது. எவ்வாறாயினும் கடுமையான நிபந்தனைகளை முன்வைத்திருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பை தவிர்த்து எமக்கு நிபந்தனையற்ற ஆதரவு தர முன்வந்த காத்தமுத்து கணேஷ் அணியினருடன் பேசி, அவர்களுக்கு பிரதி மேயர் பதவியை மாத்திரம் வழங்க இணக்கம் கண்டோம். இது தவிர எவ்வித இரகசிய உடன்பாட்டையும் நாம் அவர்களுடன்
செய்து கொள்ளவில்லை.
ஆனால் இதனை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பான சிலர் முகநூலில் இன ரீதியாக சித்தரித்து, விமர்சித்து வருவதுடன் அக்கட்சியை சேர்ந்த முஸ்லிம் ஒருவர் பிரதி மேயராக வருவதற்கு ஆதரவளித்திருக்கலாம் என்றும் விசனம் தெரிவிக்கின்றனர். சபை அமர்வுக்கு ஒரு மணிநேரம் இருக்கும் வரை அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உடன்பாட்டுக்காகக் காத்திருந்தோம், ஆனால் இவர்கள் எம்முடன் எவ்வித உடன்பாட்டுக்கும் வராத நிலையில், சாய்ந்தமருது சுயேட்சைக்குழுவை இறுதி நேரம் வரை நம்பி ஏமாந்த பின்னர், சபைக்கு வந்து அவர்களாகவே எமது முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவு வழங்கியுள்ளனர். அதற்காக நாம் ஏற்கனவே தமிழ் தரப்பினருக்கு வழங்கிய வாக்குறுதிக்கு மாறு செய்ய முடியாது என்பதை எல்லோரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.
சபை அமர்வுக்கு முன்னதாக முஸ்லிம் தரப்பினர் எவரும் எமக்கு உத்தரவாதமளிக்க முன்வராத நிலையில் இந்த ஆறு தமிழ் உறுப்பினர்கள்தான் எமது வெற்றியை உறுதி செய்திருந்தனர் என்பதை நாம் மறந்து விடலாகாது. தமிழ் கூட்டமைப்பின் ஹென்றி மகேந்திரன் மேயர் போட்டியில் இறங்கியிருந்த நிலையில் எம்மை ஆதரித்த இவர்களுக்கு மேயர் பதவி வழங்கப்பட்டதில் எவ்வித பிழையுமில்லை என்பதே எமது நிலைப்பாடாகும். நடுநிலையாக சிந்திப்போர் இதனை ஏற்றுக்கொள்வார்கள். இதனை இன ஐக்கியத்தை வளர்ப்பதற்கான ஒரு சந்தர்ப்பமாகவும் நாம் பார்க்க வேண்டும்.
கல்முனையின் பாதுகாப்பு, முஸ்லிம்களின் இருப்பு, பொருளாதார பலம் போன்றவற்றில் அக்கறையுள்ளவர்கள் என்று கூறும் மக்கள் காங்கிரசினர் முஸ்லிம்களின் ஸ்திரமான ஆட்சிக்காக எம்முடன் இணக்கப்பாட்டுக்கு வராதிருந்து விட்டு, இப்போது முஸ்லிம் காங்கிரஸின் மீது பழிபோட முனைவது எந்த வகையிலும் நியாயம் இல்லை. இதனை நான் வன்மையாக கண்டிக்கிறேன்" என்றார்.
அதேவேளை சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்றம் தொடர்பில் பிரதியமைச்சரிடம் கேள்வி எழுப்பப்பட்டபோது அவர் கூறியதாவது;
"சாய்ந்தமருது மக்களின் நீண்ட கால அபிலாஷையை இனியும் தாமதப்படுத்த முடியாது. சாய்ந்தமருத்துக்கு தனியான உள்ளூராட்சி சபையை ஏற்படுத்துவதற்காக கல்முனை மாநகர சபையை நான்காக பிரிப்பதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. விரைவில் இப்பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என நம்புகிறேன்" என்றார்.