கல்முனை மாநகரசபை ஆட்சி அமைப்பது தொடர்பில் சாய்ந்தமருது மக்களின் அபிலாஷைகளுக்கு புறம்பாக ஒருசதவீதமேனும் சாய்ந்தமருது மக்களால் தெரிவு செய்யப்பட்ட சுயேட்சைக்குழு நடந்து கொள்ள மாட்டாது.
இவ்வாறு சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலில் கடந்த சனிக்கிழமை இரவு இடம்பெற்ற பொதுமக்களுக்கு மாநகரசபை ஆட்சி தொடர்பாக தற்போது எழுந்துள்ள சந்தேகங்களுக்கு தெளிவு படுத்தும் நிகழ்வில் நம்பிக்கையாளர் சபைத் தலைவர் அல் – ஹாஜ் வை.எம்.ஹனீபா தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில் அம்பாறை மாவட்டத்தின் முஸ்லிம் பிரதேசங்களில் உள்ள சகல உள்ளுராட்சி மன்றங்களுக்குமான தவிசாளர்கள் தெரிவு செய்யப்பட்ட நிலையில் கல்முனை மாநகர சபைக்கான முதலாவது அமர்வு எதிர்வரும் 2 ஆம் திகதி திங்கட் கிழமை இடம்பெறவுள்ளது. இந்த நிலையில் சாய்ந்தமருது பிரதேசத்திலுள்ள 6 வட்டாரங்களிலும் பெரும்பான்மை வாக்குப் பலத்துடன் வெற்றியீட்டிய சுயேட்சைக்குழுவின் 9 உறுப்பினர்களும் வேறு கட்சிகளுடன் இணைந்து ஆட்சியமைக்கவுள்ளதாக இணையத்தளங்களில் கடந்தவாரமுதல் பெரும் புரளியொன்று ஏற்படுத்தப்பட்டு வருகினறது. இதனால் சாய்ந்தமருது பிரதேசத்தில் சுயேட்சைக்குழவிற்கு வாக்களித்த மக்கள் பெரும் குழப்பத்திலும் சந்தேகத்துடனும் காணப்படுகின்றனர்.
தேர்தல் காலங்களில் நாம் மக்களுக்கு வழங்கிய ஆணையிலிருந்து ஒரு சதவீதமேனும் மாற்று கட்சிகளுக்கு ஆட்சியமைப்பதற்கு தமது செல்வாக்கை பயன்படுத்தப் போவதில்லை. எமது பிரதான குறிக்கோளும் நோக்கமும் சாய்ந்தமருதிற்கான தனியான நகரசபையைப் பெற்றுக் கொள்ளுவதே.
சாய்ந்தமருதிற்கான தனியான உள்ளுராட்சி சபை அமைப்பதில் எந்தவிதமான சிக்கல்களும் இல்லாத நிலையில் அரசாங்கத்தினால் அமச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில் சில அரசியல் வாதிகளினால் தொடர்ந்தும் அதற்கு முட்டுக்கட்டை போடப்பட்டே வருகின்றமை மிகவும் மன வேதனையைத் தருகின்றது.
திங்கட் கிழமை இடம்பெறவுள்ள கல்முனை மாநகரசபையின் முதலாவது அமர்வின் போது எவ்வாறு நடந்து கொள்ளவேண்டும் எனபது பற்றி சாய்ந்தமருதிலிருந்து தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கு தெளிவான விளக்கங்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில் வாக்களித்த மக்கள் இவ்விடயத்தில் போலியான தவறான விஷமத்தனமான பிரச்சாரங்களுக்கு துணைபோகாமல் தெளிவாகவும் எந்தவிதமான பயமும் இன்றி இருக்குமாறு பொதுமக்களை மிகவும் தாழ்மையுடன் வேண்டிக் கொள்கின்றேன். மக்கள் ஆணைக்கு மதிப்பளித்து மக்களின் முடிவுகளுக்கு என்றும் நாம் பாதுகாப்பளிப்போம். என்று தெரிவித்தார்.