இந்த கட்சியினால் அடையாளம் பெற்றவர்கள், மூலையிலே முடங்கி கிடந்தவர்கள், இவர்களுக்கு அரசியல் அடையாளம் கொடுத்த இந்த கட்சியை எப்படியெல்லாம் கறுப்புப் பணத்தினாலே கருவருக்கலாமோ என்று இவர்கள் கற்பனை செய்து கொண்டிருக்கிறார்கள் நாங்கள் ஆளுங்கட்சியில் இருந்தாலும் எமக்கும் அநியாயம் நடந்துள்ளது என நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். புத்தளம் நகர சபையில் வெற்றிபெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களை கௌரவிக்கும் நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை (30) புத்தளம் நகர பிதா கே.ஏ.பாயிஸ் தலைமையில் பிரமாண்டமாக புத்தளத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுப்போதே அமைச்சர் ஹக்கீம் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் அங்கு உரையாற்றுகையில்
அம்பாறையில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும்,புத்தளத்தில் ஐக்கிய தேசிய கட்சியும் எம்மை ஏமாற்றியது. இதன் போது அம்பாறை மாவட்டத்தில் அட்டாளைச்சேனை பிரதேச சபையிலும், புத்தள மாவட்டத்தில் புத்தள நகர சபையில் ஆட்சியமைப்பதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எமக்கு உதவியது. அவ்வாறே அனுராதபுரத்தில் கஹடகஸ்திகிலிய பிரதேச சபையில் எமக்கு கிடைத்த ஒரு ஆசனத்தின் ஆதரவை அவர்கள் எம்மிடம் கேட்டார்கள். அவர்கள் எமக்கு வழங்கிய ஆதரவினை கருத்தில் கொண்டு அவர்களுக்கு எமது ஆதரவினை அங்கு வழங்கினோம் ஆனால் துரதிஷ்ட வசமாக அவர்களால் தவிசாளரை பெற்றுக்கொள்ள முடியவில்லை ஆனால் அவர்களின் ஒத்துழைப்போடு எமக்கு உபதவிசாளர் அங்கு கிடைத்துள்ளது.
நாங்கள் ஆளுங்கட்சியில் இருந்தாலும் எமக்கும் அநியாயம் நடந்துள்ளது குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் நான்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இருந்தும் எம்மை புறக்கணித்துவிட்டு அம்பாறை மாவட்டத்தில் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் கூட இல்லாத ஒரு அமைச்சருக்கு ஆட்சியமைக்க ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆதரவு வழங்கியுள்ளது. பணத்தை வைத்து அரசியல் செய்யும் ஒருவரோடு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆட்சியமைக்க சோரம் போயுள்ளது.
நிந்தவூர் பிரதேச சபையில் ஆறு வட்டாரங்களை நாம் வென்றெடுத்த போதும் ஒரே ஒரு வட்டாரத்தை வென்ற ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு நான்கு வருடங்களுக்கும் தவிசாளர் பதவியை விட்டுக்கொடுக்க முன்வந்த போதும் எம்மை புறக்கணித்துவிட்டு தமக்கு கிடைத்த தவிசாளர் பதவியை இன்னொருவருக்கு தாரைவார்த்து கொடுத்தது அக்கட்சி. இதனை எவ்வாறு நாங்கள் அர்த்தப்படுத்திக்கொள்வது, இதன் நோக்கம் என்ன? ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினை அழிப்பதற்கான ஏற்பாடா? எனும் சந்தேகம் இந்த செயற்பாடுகள் மூலம் எழுந்துள்ளது.
இந்த செயற்பாடுகள் ஆளும் கட்சியில் இருக்கின்ற எம்மை சிந்திக்க வைத்துள்ளது? கட்சியின் ஆதரவாளர்கள் மத்தியில் அதிருப்தியை உண்டுபண்ணியுள்ள பேசுபொருளாக இது மாறியுள்ளது? எங்களுக்குள்ள மக்கள் செல்வாக்கினை அவசரப்பட்டு நாங்கள் வீணாக்கிவிட மாட்டோம், தொலைநோக்கு சிந்தனையோடு நிதானமாக அடுத்த கட்ட அரசியல் நகர்வுகள் பற்றி நாங்கள் சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம். ஆளும் கட்சியிலுள்ள எம்மை புறக்கணிக்கின்ற இந்த போக்கு தொடர்பில் நாங்கள் அதிருப்தியுடனேயே இருக்கிறோம்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செய்நன்றி மறந்த கட்சியல்ல. அவ்வாறே செய்நன்றியை மறக்கின்ற கட்சியுமல்ல. அதேநேரம் அரசியல் நேர்மை தவறிய ஒருகட்சியாகவும் எமது கட்சி இருக்கமாட்டாது.இந்தக்கட்சியானது எந்தசந்தர்ப்பத்திலும் தனித்து தீர்மானிக்கின்ற அல்லது முடிவெடுக்கின்ற கட்சியாக இல்லை அதற்காக எமது கட்சியின் யாப்பு இடம்தர மாட்டாது என்கின்ற சூழலிலே அடுத்து வருகின்ற நாட்களிலேயே தேசிய அரசியலிலே பாரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய முடிவுகள் எடுக்கப்படவேண்டிய சூழ்நிலையில் நாங்கள் எமது அரசியல் உயர்பீடத்தை எதிர்வரும் மூன்றாம் திகதி கூட்டவுள்ளோம்.
இதற்கப்பாலும் இன்னும் ஏராளமான உள்ளூராட்சி சபைகளின் ஆட்சி சம்பந்தமான தீர்மானங்கள் குறித்து நாங்கள் கட்சியின் நலன் சார்ந்து, இந்த நாட்டில் வாழ்கின்ற முஸ்லிம்களின் நலன்சார்ந்து, தேசிய அரசியலின் போக்கு தொடர்பில் நிலையான தீர்மானத்திற்கு வரவேண்டிய நிலையில் இருக்கின்றோம். நாங்கள் எடுக்கின்ற தீர்மானங்கள் எமது அரசியல் உச்சபீட உறுப்பினர்களின் ஆலோசனையோடு எமது கட்சிக்கும்,சமூகத்திற்கும் நலன்பயக்கின்ற விதத்தில் அமையும் என்கின்ற நம்பிக்கை எமக்கு இருக்கிறது.
ஐக்கிய தேசியக்கட்சி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் ஆதரவை இழக்கப்போகிறதா? அரசியலிலே நிரந்தர நண்பனும் இல்லை நிரந்தர பகைவனும் இல்லை எனும் கோட்பாட்டின் அடிப்படையிலேயே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எதிர்காலத்தில் செயற்படப்போகின்றதா? என்ற கேள்விகள் தேசிய மட்டத்தில் பரவலாக பேசப்பட்டுக்கொண்டிருக்கின்ற இந்த சூழ்நிலையில் தான் நான் இங்கு பேசிக்கொண்டிருக்கிறேன். இப்போது நாங்கள் இருதலைக்கொள்ளி மரமாக அதாவது இரண்டுபுறமும் மரத்தை அழிப்பதற்கு கொள்ளிவைத்துள்ள நிலையில்தான் இருக்கிறோம்.ஒருபுறம் ஐக்கிய தேசியக்கட்சி மறுபுறம் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் கொள்ளிவைத்துள்ளார்கள்,இதற்கிடையில் மரம் எரிந்து போய்விடுமோ? அதனை காப்பாற்ற வேண்டும் என்ற ஆதங்கத்தில் தலைமையும், கட்சியின் முக்கியஸ்தர்களும் ஆதரவாளர்களும் இருக்கிறார்கள்.
ஐக்கிய தேசியக்கட்சி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் கைகளிலே இருக்கின்ற இந்த வாக்கு வங்கியை இழந்தால் புத்தளமாவட்டத்தையே தோற்பார்கள் என்பது கண்கூடாக தெரிகின்ற விடயம்.புத்தள நகர சபைக்கு வேட்புமனு தாக்கல் செய்கின்ற விடயத்தில், அவர்களோடு இணைந்து செயற்பட நாங்கள் முனைந்தோம், ஐக்கிய தேசிய கட்சியின் இங்குள்ள அமைப்பாளர்கள் எங்களது வாக்குவங்கி தொடர்பில் சரியான அனுமானம் அற்றவர்களாவே காணப்பட்டார்கள். 11 தொகுதிகளில் வெறும் இரண்டு தொகுதிகளை மட்டுமே தரமுடியும் என்றார்கள். நாங்கள் 5 தொகுதிகளை கேட்டோம். அவர்கள் தரமறுத்தார்கள் ஏற்கனவே திட்டமிட்டு அவர்கள் எடுத்துக்கொண்ட தீர்மானங்களின் படி அவர்கள் செயற்பட்டார்கள். இதே நிலைதான் திருகோணமலையிலும் ஏற்பட்டது. அங்கும் இங்கும் எங்களுக்கு அதிக வட்டாரங்களை நாம் வெற்றிபெற்றுள்ளோம்.இதன் மூலம் அவர்களது அனுமானம் பிழைத்துள்ளது.
இதன் விபரீதம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய தேசிய கட்சியுடன் வைத்துள்ள உறவில் விரிசல் ஏற்படுகின்ற வகையில் உருவாகியுள்ளது.களநிலவரங்களின் யதார்த்தத்தை கருத்திலே கொண்டு ஆசனங்களை பங்கிட்டிருந்தால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எதிர்பாசறையில் உள்ள கட்சிகளோடு இணைந்து உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைக்கும் நிலை வந்திருக்காது. இதனை திருகோணமலை மாவட்ட ஐ.தே க வின் அமைப்பாளர் புத்திசாலித்தனமாக கையாண்டுள்ளார். ஆனால் இங்குள்ளவர்களுக்கு அந்த சமயோசிதம் இல்லாமல் போய்விட்டது.
பொத்துவிலில் உளூராட்சி சபையினை அமைக்கின்ற விடயத்தில் மிகக்கேவலமான அரசியல் கலாச்சாரத்தை அவதானிக்க முடிந்தது. தமிழரசு கட்சியின் அங்கத்தவர்களை முற்றுகையிட்டு அவர்களை விலைகொடுத்து வாங்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றதாக கூறினார்கள். ஆனால் அவர்கள் நேர்மையானவர்கள் தலைமைக்கு கட்டுப்பட்டு எமக்கே தமது ஆதரவினை தெரிவித்தார்கள். எந்தக்கரணம் கொண்டும் இப்படியான ஒரு கலாச்சாரத்திற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் போன்ற ஒரு பொறுப்பு வாய்ந்த கட்சி என்ற வகையில் சோரம் போகமுடியாது. கொள்கை அடிப்படையிலே இந்தக்கட்சி செயற்பட்டாக வேண்டும் என்பதற்காக வளர்க்கப்பட்ட இந்த மக்கள் இயக்கம், இப்படி சில கோடாரிக்காம்புகள் அழிக்க முனைவதை அனுமதிக்க முடியாது.
இந்த கட்சியினால் அடையாளம் பெற்றவர்கள், மூலையிலே முடங்கி கிடந்தவர்கள், இவர்களுக்கு அரசியல் அடையாளம் கொடுத்த இந்த கட்சியை எப்படியெல்லாம் கறுப்புப் பணத்தினாலே கருவருக்கலாமோ என்று இவர்கள் கற்பனை செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதனை பார்க்கும் போது இவர்களுக்கு அரசியலிலே அழிவுகாலம் நீண்ட தூரத்தில் இல்லை என்றே எண்ணத்தோன்றுகின்றது. இதனை எமது வெற்றிபெற்ற உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுடன் அண்மையில் கட்சிக்காரியாலத்தில் நடைபெற்ற சத்தியப்பிரமாண நிகழ்வில் தெளிவாக கூறியுள்ளேன். ஆட்சியை கைப்பற்றுவது தொடர்பிலான அதீத கற்பனையில் நாங்கள் செயற்படுவது அவசியமில்லை, எதிர்க்கட்சியில் இருக்கவேண்டி வந்தாலும் அதற்க்கு நாங்கள் தயங்க வேண்டிய அவசியமில்லை.இந்தக்கட்சி வளர்ந்ததெல்லாம் எதிர்க்கட்சியில் இருந்தபோதே. எதிர்க்கட்சி அரசியல் செய்து வளர முடியும் என்பதிலேயே நம்பிக்கை வைத்த ஒரு கட்சி இந்த நாட்டிலேயே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மாத்திரம் தான்.
எனவே எதற்கும் தயாரான நிலையில் இந்த உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சியமைக்கின்ற விடயங்களில் எமது எதிர்பார்ப்பு கைகூடாமல் போகின்ற பொதுக்களிலெல்லாம் நாங்கள் கைசேதப்படாமல் நாங்கள் மானத்தோடும்,மரியாதையோடும் ,கௌரவத்தோடும் அந்தந்த சபைகளில் அரசியல் செய்கின்ற கட்சியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இருக்கும். எனக்கூறினார்
இந்நிகழ்வில் வடமேல் மாகாண சபை உறுப்பினர் நியாஸ் மற்றும் புத்தளமாவட்டத்தில் வெற்றிபெற்ற உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் கட்சி முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.