சாய்ந்தமருது-
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதில் இருந்து ஒரே கட்சிக்குள்ளேயே ஒருமித்த கருத்துக்கள் இருக்கவில்லை. வாதப்பிரதிவாதங்களே அதிகமாக இருந்தது.
இதில் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்களே தங்கள் தலைவருக்கு எதிராக கிளம்பியிருந்த வேளையில் இந்த வாக்கெடுப்பில் ரணில் தோல்வியடைந்துவிடுவார் என்ற ஊகம்தான் பரவலாக காணப்பட்டது.
ஆனாலும் சில கட்சிகள் மதில்மேல் பூனையாக செயற்பட்டார்கள். அதாவது தோல்வியடையப்போகின்ற ரணிலுக்கு ஏன் நாங்கள் ஆதரவு வழங்க வேண்டும் என்ற நிலைப்பாடு அவர்களிடம் காணப்பட்டது.
அதற்காக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவந்த தரப்பினருடன் இரகசிய பேச்சுக்கள் நடாத்தி சந்தர்ப்பம் பார்த்து காலைவாரிவிட்டு, அடுத்தகட்ட அதிகாரத்தை நோக்கி செல்ல தயாராகியிருந்தார்கள்.
இந்த நிலைமையிலேதான் மு.கா தனது சமூகத்துக்கான பேரம்பேசும் சக்தியை பாவித்தது. அதாவது மு.காங்கிரசுக்கு தேர்தல் காலத்தில் வழங்கப்பட்ட வாக்குறுதிகளும், ஒப்பந்தங்களும் நிறைவேற்றுப்படாமல் இருந்தவைகள் மீண்டும் தூசுதட்டப்பட்டு நிபந்தனையாக விதிக்கப்பட்டது.
மு.காங்கிரசின் கோரிக்கைகள் அனைத்தையும் தனது பதவிக்காலத்துக்குள் நிறைவேற்றி தருவதாக மு.கா குழு முன்னிலையில் பிரதமர் ரணில் ஏற்றுக்கொண்டார்.
அதன்பின்பு 03.04.2018 இரவு மு.காங்கிரசின் அதியுரபீட கூட்டத்தில் பிரதமரிடம் சமர்ப்பிக்கப்பட்ட விடயங்கள் விரிவாக ஆராயப்பட்டு இறுதியில் பிரதமர் ரணிலுக்கு ஆதரவளிப்பது என்று தீர்மானிக்கப்பட்டது.
எந்தவொரு கட்சியும் தங்களது உறுதியான நிலைப்பாட்டினை அறிவிக்காத நிலையில், மு.காங்கிரசின் இந்த தீர்மானமானது ஓர் துணிச்சலானது மட்டுமல்லாது, மதில்மேல் பூனையாக இருந்துகொண்டு சந்தர்ப்பம் பார்த்து மறுபக்கம் பாய்வதற்கு தயாராக இருந்த சந்தர்ப்பவாத அரசியல் செய்பவர்களை தடுத்துள்ளது.
மு.கா தனது தீர்மானத்தினை அறிவித்ததன் பின்புதான், ஏனைய கட்சிககள் அதே நிலைப்பாட்டினை அறிவித்தார்கள். சிலநேரம் மு.கா ரணிலுக்கு எதிராக தனது நிலைப்பாட்டினை அறிவித்திருந்தால், அதே நிலைப்பாட்டினையே இந்த கட்சிகளும் அறிவித்திருக்கும்.
எனவே ரணிலுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்கொள்கின்ற விடயத்தில் பாராளுமன்றத்தில் அங்கம் வகின்ற காட்சிகளுக்கு ஓர் திருப்புமுனையாக இருந்தது மு.காங்கிரசின் துணிச்சல்மிக்க தீர்மானமாகும்.