காரைதீவு பிரதேசசபை அமர்வில் கன்னியுரையாற்றிய தவிசாளர் ஜெயசிறில் வேண்டுகோள்!
காரைதீவு நிருபர் சகா-தேர்தல்கால கசப்புணர்வுகளை மறந்து இனமதகட்சி பேதம் பாராமல் மக்களுக்காக சமத்துவமாக அர்ப்பணிப்புடன் சேவைசெய்ய ஒன்றுபடுவோம். அனைத்து உறுப்பினர்களையும் மக்கள்சேவைக்காக அன்பாக அழைக்கின்றேன். வாரீர்!
இவ்வாறு காரைதீவு பிரதேசசபையின் புதிய தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் தமது கன்னியுரையில் வேண்டுகோள்விடுத்தார்.
அம்பாறை மாவட்டத்திலுள்ள காரைதீவு பிரதேசசபையின் கன்னிஅமர்வு கடந்த வெள்ளிக்கிழமை சபா மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
காரைதீவுப் பிரதேசசபையின் தவிசாளர் கே. ஜெயசிறில் உபதவிசாளர் எம்.எம்.ஜாகீர் உறுப்பினர்களான எம்.இஸ்மாயில் எம்.பஸ்மீர் ச.நேசராசா த.மோகனதாஸ் எம்.ஜலீல் சி.ஜெயராணி ஆ.பூபாலரெத்தினம் இ.மோகன் மு.காண்டீபன் எம்.ரணீஸ் ஆகியோர் கலந்துகொண்டு கன்னியுரையாற்றினார்கள்.
அங்கு தவிசாளர் ஜெயசிறில் மேலும் உரையாற்றுகையில்;:
கட்சிபேதங்களை மறந்து மக்களுக்கான சேவைகளை சமத்துவமாக அதேநேரம் துரிதமாகச்செய்யவேண்டும். அதற்காக எந்த விட்டுக்கொடுப்பையும் செய்யத்தயாராகவிருக்கின்றேன்.
12உறுப்பினர்களும் ஒருமித்தகுரலில் ஒற்றுமையாய் இயங்கவேண்டும். இருஇனங்களும் சமாதானமாக ஒற்றுமையாக வாழ நாம் முன்மாதிரியாக நடந்துகொள்ளவேண்டும். என்றார்.
சபையின் ஒரேயொரு பெண் உறுப்பினரான சின்னையா ஜெயராணி தமது கன்னியுரையில் தெரிவித்ததாவது:
காரைதீவு பிரதேசசபை வரலாற்றில் முதல்தடவையாக ஒரு பெண் உறுப்பினராகத் தெரிவானதையிட்டு முதற்கண் இறைவனுக்கும் வாக்களித்த மக்களுக்கும் கட்சிக்கும் நன்றிகளைத் தெரிவிக்கின்றேன்.
இங்கு 25வீத பெண் பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்தப்படவேண்டும். அன்னை பூபதியின் தியாகத்திற்கு மதிப்பளித்துத்தான் இன்றைய கன்னிஅமர்வில் அஞ்சலி செலுத்த வேண்டினேன். அதற்கு ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றிகள்.
காரைதீவு 11ஆம் 12ஆம் பிரிவுகளில் நிறைய பிரச்சினைகள் தேவைகளுள்ளன. வீதிகள் செப்பனிடப்படவேண்டும்.தெருமின்விளக்குகள் பொருத்தப்படவேண்டும். வீதிகளுக்கு பெயர் சூட்டப்படவேண்டும்.
காரைதீவுக்குள் வருகின்ற அத்தனை குக்கிராமங்களுக்கும் இறுதி ஊர்ப்பெயராக காரைதீவு என்றுதான் வரவேண்டும். தனித்தனியே அழைப்பது பொருத்தமல்ல.
காரைதீவு பிரதேசசபைக்குட்பட்ட சில காணிகள் சில கடைகளின் உரிமங்கள் கல்முனை மாநகரசபைக்குள் வருவதாக அறிந்து அதிர்ச்சியுற்றேன். இது என்ன நியாயம்? இதனை ஏன் அனுமதித்தார்கள்?
எமது பிரதேசத்திலுள்ள வியாபாரநிலையங்களுக்கு வரி அறிவிட குத்தகைக்கு எடுத்தவர் நிதிஅறவீடு செய்கிறார். அது சரி. ஆனால் அதே நபர் பிரதேசபை ஆளுகைக்குட்பட்ட மாளிகைக்காடு மாவடிபபள்ளி கிரம வியாபாரநிலையங்களில் அறவிடுவதில்லை. இது ஏன்? ஒரு சபைக்குள் இந்த வித்தியாசம் ஏன்? எமக்குத் தெளிவுபடுத்தவேண்டும்.
எமது பிரதேசத்தில் குடிநீர் வசதியின்றி மின்சார வசதியின்றி பல ஏழைக்குடும்பங்களுள்ளன. அவர்களுக்கு குடிநீர் வசதி மின்சார வசதி ஏற்படுத்திக்கொடுக்கவேண்டும்.
12ஆம் பிரிவில் குறிப்பாக தேரோடும் வீதிகளில் தெருமின்விளக்குகள் இல்லை. அவை பொருத்தப்படவேண்டும். என்றார்.
உபதவிசாளர் ஏ.எம்.ஜாகீர் (சு.க)கன்னியுரையாற்றுகையில்:
எதிர்வரும் ரமழான் காலத்திற்கு முன்பதாக பள்ளிவாசலுக்கும் அருகிலுள்ள தெருக்களுக்கும் மின்விளக்குகள்பொருத்தப்படவேண்டும்.தமிழ் முஸ்லிம் ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக இப்பிரதேசம் அபிவிருத்திகாணவேண்டும். சபைவளாகத்தில் எமது வாகனங்களுக்கான நிறுத்துமிடம் அமைக்கப்படவேண்டும். என்றார்.
உறுப்பினர் எம்.றனீஸ் (மு.கா)கன்னியுரை நிகழ்த்துகையில்:
நானறிந்தவரை மாவடிப்பள்ளி வரலாற்றில் காரைதீவு பிரதேசசபைத்தவிசாளரொருவர் மாவடிப்பள்ளிக்கு வந்து வீதிவீதியாக நடந்து சகலதேவைகளையும் அறிந்து பார்வையிட்டதென்றால் அது இன்றைய தவிசாளர் சிறில்ஜயாவையே சாரும். சந்திகளில் எல்ஈடி பல்புகள் பொருத்தப்படவேண்டும். மாவடிப்பள்ளிக்கென இதுவரை இல்லாத மைதானம் அமைத்துத்தரப்படல்வேண்டும். என்றார்.
உறுப்பினர் இரா.மோகன் (சுயேச்சை) கன்னியுரையில்:
எமது பிரதேசத்திற்குட்பட்ட விதவைகளுக்கு முடியுமான உதவிகளைச்செய்யவேண்டும். விஸ்ணு ஆலயவீதி குறுக்குவீதிகள் மழைபொழிந்தால் குளமாகிவிடும். அவற்றைப்புனரமைக்கவேண்டும். வீதிகளில் வேகத்தடை அமைப்பதையிட்டு மறுபரிசீலனைவேண்டும். என்றார்.
அனைத்து 12 உறுப்பினர்களும் கன்னியுiராயற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.