கல்முனையில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சபை
அமர்வுக்கு ஒரு மணிநேரம் இருக்கும் காலம்வரையும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின்
உடன்பாட்டுக்காகக் காத்திருந்தோம், அவர்களிடமிருந்து எவ்விதமான பதிலும்
கிடைக்காததன் காரணமாகவே தற்போதைய முடிவை எடுத்திருந்தோம் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம்
காங்கிரஸின் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான
எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.
பல்வேறுபட்ட எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த
2018-04-02 ஆம் திகதி இடம்பெற்ற கல்முனை மாநகரசபை ஆட்சியமைப்பு சம்மந்தமான
உண்மை நிலவரங்களை ஊடகங்களுக்கு தெளிவுபடுத்தும் ஊடக சந்திப்பு 2018-04-02 ஆம் திகதி மாலை பிரதி
அமைச்சரின் வாசஸ்தலத்தில் இடம்பெற்றது.
இங்கு கருத்துத் தெரிவித்தபோதே பிரதி அமைச்சர்
மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கல்முனை மாநகரின் ஆட்சியைக் தக்கவைப்பதற்காக பல்வேறு
பிராயத்தனங்களை மேற்கொண்டதாகவும் .முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் றவூப்
ஹக்கீம் மற்றும் உச்ச பீட உறுப்பினர்களின் கடின முயட்சிகளின் காரணமாகவே இந்த
வெற்றி ஈட்டப்பட்டதாகவும் தெரிவித்த பிரதி அமைச்சர் ஹரீஸ், கல்முனை மாநகரின்
ஆட்சியை அமைப்பது தொடர்பில் இங்கு தேர்தலில் வெற்றியீட்டிய அனைத்துக் கட்சிகளிடமும்
குழுக்களிடமும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் இணைந்து செயற்பட அழைப்பு விடுத்ததாகவும்
விசேடமாக சாய்ந்தமருது சுயட்சைக்
குழுவிடம் தேர்தல் முடிந்து அடுத்த நாளே அழைப்பு விடுத்ததாகவும் தெரிவித்தார்.
சாய்ந்தமருது சுயட்சைக் குழுவினர் உடனடியாகவே முஸ்லிம்
காங்கிரஸின் கோரிக்கையை நிராகரித்து இருந்ததாகவும் தெரிவித்தார். தமிழ் தேசிய
கூட்டமைப்புடன் தலைவர்கள் மட்டத்தில் வடகிழக்கு மாகாணங்களில் உள்ளுராட்சிசபைகளில்
இணைந்து செயற்படுவது தொடபில் இணக்கப்பாடு எட்டப்பட்டிருந்த போதிலும் கல்முனை
விடயத்தில் உள்ளூர் தலைவர்களால் முன்வைக்கப்பட்ட நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள
முடியாதாக இருந்ததன் காரணமாக அவர்களுடன் இணைந்து செயற்படுவதில் முஸ்லிம் காங்கிரஸ்
ஆர்வம் காட்டவில்லை என்றும் தெரிவித்த பிரதி அமைச்சர்,
அகில இலங்கை மக்கள் காங்கிரஸை இணைத்துக்கொண்டு
ஆட்சி அமைப்பது தொடர்பில் கல்முனை ஜும்ஆ பள்ளிவாசலின் தலைவர் வைத்திய கலாநிதி அஸீஸ்
தலைமையில் பல்வேறு முயச்சிகள் எடுக்கப்பட்டதாகவும் அவைகளை மக்கள் காங்கிரஸ் உதாசீனம்
செய்திருந்ததது என்றும் இவர்களுடன்
அந்தக்கட்சியின் தலைவரோ அல்லது அவரது பிரதிநிதிகளோ பேசக்கூட முனையவில்லை என்றும் இதன்காரணமாகவே தாங்கள் அடுத்த நிலையில் இருந்த
கட்சிகளுடனும் குழுக்களுடனும் பேசினோம் என்றும் தெரிவித்தார்.
இதில் தமிழ் தேசியக்கூடமைப்பின் உள்ளூர்த்
தலைவர்களால் முன்வைக்கப்பட்டது போன்ற எவ்வித நிபந்தனைகளையும் ஆனந்தசங்கரி
தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணி முன்வைக்காததன் காரணமாக அவர்களை
இணைத்துக்கொண்டு செயற்பட தீர்மானித்ததாகவும் தெரிவித்தார். அதேபோன்று ஏனைய
சுயட்சைக் குழுக்களில் வெற்றியடைந்தவர்களுடனும் பேச்சுக்களை மேற்கொண்டிருந்த்ததாகவும்
ஏற்கனவே தான் அகில இலங்கை மக்கள் காங்கிரஸுடன் பேசியபோது ஸ்ரீலங்கா முஸ்லிம்
காங்கிரஸுடன் இணைந்து ஆட்சி அமைப்பதில் விருப்பமின்மையை வெளிப்படுத்தியிருந்ததையும்
இங்கு குறிப்பிட்டார்.
சபை அமர்வில் ஆறு தமிழ் உறுப்பினர்கள் முஸ்லிம் காங்கிரஸின்
முதல்வர் வேட்பாளருக்கு ஆதரவளித்ததை சுட்டிக்காட்டிய பிரதி அமைச்சர், பல்வேறு
நிபந்தனைகளை எங்களிடம் வித்திதிருந்த ஹென்றி மகேந்திரன் முதல்வர் வேட்பாளராக
நிறுத்தப்பட்ட நிலையிலும் அவருக்கு வாக்களிக்காது முஸ்லிம் காங்கிரஸ் சார்பான
வேட்பாளருக்கு வாக்களித்ததன் காரணமாகவும் எங்களிடம் ஏற்பட்ட தார்மீக கடமையின்
காரணமாகவும் பிரதி முதல்வராக தமிழர் விடுதலைக் கூட்டணியைச் சேர்ந்த காத்தமுத்து
கணேஷை நியமிக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் தெரிவித்தார்.
பிரதி முதல்வர் உத்தரவாத்தத்தை முஸ்லிம்
காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரசுக்கு வழங்க உடன்பட்டிருந்த நிலையிலும் அகில
இலங்கை மக்கள் காங்கிரஸார் தனித்து ஆட்சியமைப்பதற்காக சாய்ந்தமருது சுயட்சை குழுவினரின்
தயவை அன்றையதினம் ளுகர் தொழுகை நேரம் வரையும் காத்திருந்ததாகவும் அதற்கு இடையே
தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஹென்றி மகேந்திரன் உள்ளிட்ட பலரிடமும் பேசியதையும்
தாங்கள் அறியாமல் இல்லை என்று தெரிவித்த பிரதி அமைச்சர், சாய்ந்தமருது சுயட்சை குழுவினர்
சபை அமர்வை பகிஸ்கரிக்க முடிவு எடுத்ததன் பின்னரே அதுவும் சபை அமர்வுக்கு
அரைமணிநேரம் இருக்கத்தக்கதாக தனித்து ஆட்சியமைக்க வாய்ப்பு இல்லாததன் காரணமாக பள்ளிவாசலின்
பிரதிநிதி ஒருவருடன் தொடர்புகொண்டதாகவும் அதுவும் இரண்டு வருடங்களுக்கு முதல்வர்
பதவியை தங்களுக்குத் தந்தால் பேசமுடியும் என்று தெரிவிக்கப்பட்டிருந்ததாகவும் அதன்பின்னர்
சபை அமர்வுக்கு பதினைந்து நிமிடம் இருக்கத்தக்கதாக தன்னையும் தலைவரையும்
பள்ளிவாசல் பிரதிநிதிகள் சந்தித்ததாகவும் அதற்கு முன்பாகவே தாங்கள் முடிவு ஒன்றை
எட்டியிருந்தன் காரணமாக அவர்களது இறுதிநேர கோரிக்கையை தங்களால் நடைமுறைப்படுத்த
முடியாமல் போனதாகவும் கால தாமதத்துக்கான பொறுப்பினை மக்கள் காங்கிரஸ்தான்
பொறுப்பெடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
முஸ்லிம் மக்கள் மீதும் அவர்களது இருப்பின்மீதும்
அக்கறையுள்ளவர்கள் என்று கூறும் இவர்கள் இறுதிநேரம்வரையும் சாய்ந்தமருது சுயட்சை குழுவினரை
நம்பிக்கொண்டு இருந்துவிட்டு, இப்போது முஸ்லிம் காங்கிரஸின் மீது பழிபோட முனைவது
எந்தவகையில் நியாயம் என்று பிரதி அமைச்சர் ஹரீஸ் கேள்வியெழுப்பினார்.
கல்முனை மாநகரசபையின் அகில இலங்கை மக்கள்
காங்கிரஸ் சார்பான உறுப்பினர்கள் எந்தவித பேச்சுவார்த்தைகளோ
உடன்பாடுகளோ இல்லாத நிலையிலேயே முஸ்லிம் காங்கிரஸின் முதல்வர் வேட்பாளருக்கு
வாக்களித்திருந்ததாகவும் அவர்களை நன்றியுடன் நோக்குவதாகவும் தெரிவித்தார்.
கட்சி இன வேறுபாடுகளை தவிர்த்து கல்முனை மாநகரை
அபிவிருத்திசெய்ய ஒன்றிணையுமாறு அழைப்புவிடுத்த பிரதி அமைச்சர், சாய்ந்தமருது
மக்களுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றும் பொருட்டு கல்முனையை
நான்காகப் பிரித்து சபைகளை அமைக்கும் விடயத்தை தீவிரப்படுத்தவுள்ளதாகவும் தலைவர்
வாக்குறுதியளித்த உள்ளுராட்சிமன்ற கட்டிட நிர்மான பணிகளும் விரைவில்
ஆரம்பிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.