ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்-
ஏறாவூர், புன்னக்குடா பிரதேசத்தில் பொதுமக்களுக்கு சொந்தமான காணியை ஆக்கிரமித்து இராணுவமுகாம் அமைப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சியை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தடுத்து நிறுத்தியுள்ளது. நேற்று (03) செவ்வாய்க்கிழமை பிரதமருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது இப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பில் பல கோரிக்கைகளை முன்வைத்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நேற்று செவ்வாய்க்கிழமை பிரதமருடன் நடத்திய பேச்சுவார்த்தையின்போது, அமைச்சர் ரவூப் ஹக்கீம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் அலிசாஹிர் மௌலானா ஆகியோர் இராணுவமுகாம் அமைப்பதற்கான காணி சுவீகரிப்பு தொடர்பில் கலந்துரையாடினர்.
பொதுமக்கள் செறிந்து வாழும் பிரதேசத்தில் இராணுவ முகாம் அமைக்கவேண்டிய எந்தவொரு தேவையும் இல்லையென்றும், உடனடியாக அதை தடுத்து நிறுத்துமாறும் பிரதமரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அதனை செவிமடுத்த பிரதமர், உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு விடுத்த உத்தரவின்பேரில், இராணுவ முகாம் அமைப்பதற்கான முயற்சிகள் கைவிடப்பட்டன.
ஏறாவூர் பிரதேசத்தில் எவ்வித காணி அபகரிப்பிலும் ஈடுபடக்கூடாது என்று மட்டக்களப்பு மாவட்ட செயலாளருக்கு உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர குணவர்தன அமைச்சர் கட்டளையிட்டுள்ளார். அத்துடன் காணி அதிகாரிகள் எவரும் இராணுவ முகாம் அமைப்பதற்கான காணியை சுவீகரிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என்று காணி விவகார அமைச்சர் கயந்த கருணாதிலக உத்தரவிட்டுள்ளார்.
இதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர் அலி ஸாஹிர் மௌலானாவின் வேண்டுகோளையேற்று கடந்த 31ஆம் திகதி புன்னக்குடா பிரதேசத்துக்கு விஜயம்செய்த அமைச்சர் ரவூப் ஹக்கீம், அதற்குப் பொறுப்பான இராணுவ கட்டளை தளபதி மற்றும் காணி அமைச்சின் உதவிச் செயலாளர் ஆகியோரை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு இராணுவ முகாம் அமைப்பதை தடுத்து நிறுத்துமாறு கோரியிருந்தார்.