கல்முனை முதல்வர் பதவி: அரசியலா? கணிதவியலா?


எம்.எம்.எம்.நூறுல்ஹக்
சாய்ந்தமருது - 05- 

டந்த 02.04.2018 இல் பரபரப்போடு எதிர்பார்க்கப்பட்ட கல்முனை மாநகர சபையின் முதல்வர் எந்த சமூகத்தை சார்ந்தவர் தெரிவாகுவார் என்கின்ற வினாவுக்கு மிகத்தெளிவாக முஸ்லிம் முதல்வர் என்று விடை கிடைத்திருக்கின்றது.இது சாய்ந்தமருது பிரிந்தால் கல்முனையின் அரசியல் அதிகாரம் தமிழ் சமூகத்திடம் சென்றுவிடும் என்கின்ற பயத்தை அப்பட்டமாக இல்லாமற் செய்திருக்கின்றது.
இந்நிலையானது முஸ்லிம் உறுப்பினர்களின் எண்ணிக்கையினால் ஏற்பட்டதா? அல்லது அரசியல் வியூகத்தினால் நடந்ததா? என்கின்ற கேள்விகளை உருவாக்கி அதுபற்றிய கருத்தாடல்களை பரப்புரை செய்வதன் ஊடாக சாய்ந்தமருது மக்களின் தனியான உள்ளூராட்சி சபை கோரிக்கையை மழுங்கடிப்பதற்கு எத்தனிக்கின்றார்களா? என்கின்ற ஒரு நியாயமான ஐயத்தையும் இன்று இது தந்திருக்கின்றது.
கல்முனை மாநகர சபையின் மொத்த 41 உறுப்பினர்களில் சாய்ந்தமருது சுயேட்சைக்குழு உறுப்பினர்கள் 09 பேரும், தேசிய காங்கிரஸின் சார்பிலான ஒரு உறுப்பினருமாக மொத்தம் 10 பிரதிநிதிகள் இந்த முதல் அமர்வை பகிஷ்கரித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. முதல்வர் தெரிவின் போது 31 உறுப்பினர்கள் சமூகமளித்திருந்தனர். இதில் இரண்டு உறுப்பினர்கள் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை. அவ்வாறெனில், முதல்வரை தெரிவு செய்கின்ற மொத்த வாக்குகள் 29 ஆகும். ஐ.தே.கட்சி சார்ந்த மு.கா.வின் முஸ்லிம் முதல்வர் வேட்பாளாராக நிறுத்தப்பட்டவர் 22 வாக்குகளைப்பெற்று முதல்வராக தெரிவாகி இருக்கின்றார். இதில் 17 முஸ்லிம் பிரதிநிதிகளின் வாக்குகளும் 05 தமிழர்களுடைய வாக்குகளும் அடங்கியிருக்கின்றன.

கல்முனை மாநகர சபையின் முதல்வர் பதவிக்கு போட்டியிட்ட மற்றொருவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் தமிழ்ச் சமூகத்தைச் சார்ந்தவர். இவர் பெற்றுக்கொண்ட மொத்த வாக்குகள் 07 ஆகும். இந்த 07 வாக்குகளும் தனி தமிழ்ச் சமூகத்தைச் சார்ந்ததும் அக்கட்சியின் மொத்த உறுப்பினர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஒரு வாதத்திற்கு பின்வரும் கூற்றை எடுத்து நோக்குவோம், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நிறுத்திய முஸ்லிம் முதல்வரை ஆதரித்து வாக்களித்த 05 தமிழ்ப் பிரதிநிதிகளும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் நிறுத்தப்பட்ட தமிழ் மாநகர முதல்வர் வேட்பாளருக்கு வாக்களிக்கிறார்கள் என வைத்துக்கொண்டால், மொத்தம் 12. இவற்றுடன் வாக்களிப்பிலிருந்து தவிர்ந்துகொண்ட சுயேட்சைக்குழு சார்பிலான தமிழ் உறுப்பினர் ஒருவர் வாக்களித்ததாக கொண்டாலும் 13 வாக்குகளையே அவர் பெற்றிருப்பார்.
இதனடிப்படையில் நாம் பார்க்கின்ற போது, கடந்த கல்முனை மாநகர சபைத் தேர்தலில் இம்மாநகர சபையில் மொத்தமாக தமிழ் பிரதிநிதிகளாக தெரிவு செய்யப்பட்ட அனைத்து உறுப்பினர்களின் எண்ணிக்கை 13 ஆகும். இதனைவிட அதிகரிப்பதற்கு எந்தவிதமான வாய்ப்புகளும் இல்லை என்பதை நடந்து முடிந்த உள்ளூராட்சி தேர்தல் பெறுபேறுகள் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன.
பதினேழு முஸ்லிம் உறுப்பினர்களுடைய வாக்குகள் மாத்திரமே முஸ்லிம் காங்கிரஸினால் நிறுத்தப்பட்ட வேட்பாளர்களுக்கு அளிக்கப்பட்டிருந்தாலும் , அவர்தான் மாநகரின் முதல்வராக தெரிவு செய்யப்பட்டவராக சட்டப்படி அறிவிக்கப்பட்டதாக அமையும். இங்கு அரசியலுக்கு அப்பால் கணிதம்தான் இதனை உறுதி செய்கின்றது. எப்படியென்றால், 21 உறுப்பினர்களுக்கு மேல் கலந்துகொண்ட முதலமர்வில் அதிக வாக்குகளைப்பெற்ற ஒருவர் மாநகர முதல்வராக தெரிவு செய்யப்படுவதென்பது உள்ளூராட்சி மன்றங்களுக்கான சட்ட ஏற்பாடுகளின் நியதியாகும்.
இவ்விடத்தில் பெரிதாக அரசியல் பிரச்சினை தோன்றியிருக்கவில்லை என்பது சற்று ஆழ்ந்து நோக்கத்தக்கதாகும். ஆரம்பத்திலிருந்தே சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றியடைந்த ஒரு முஸ்லிம் உறுப்பினர் மு.கா. வை ஆதரிப்பதில் உறுதியாக இருந்து வந்திருக்கின்றார். வாக்களிப்பு நேரத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்ந்த 05பேரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்ந்த ஒருவருமாக 06 முஸ்லிம் பிரதிநிதிகளும் கட்சி வேறுபாடுகளுக்கப்பாலும் நிபந்தனைகள் எதுவும் முன்வைக்காதும் மு.கா.வினால் நிறுத்தப்பட்ட முஸ்லிம் மாநகர முதல்வரை ஆதரித்திருப்பதைப் பார்க்கின்றோம்.
இந்நிலை வருமென்றும் முன்னரே எதிர்பார்க்கப்பட்ட ஒன்றேயாகும். இந்த உணர்வு என்பது சமூக ரீதியாக ஏற்படுகின்ற சிந்தனையின் வெளிப்பாடாகும். இது சாய்ந்தமருதிலிருந்து தெரிவாகக்கூடிய முஸ்லிம் பிரதிநிதிகளிடம் மாத்திரம் எதிர்பார்க்கப்பட வேண்டிய பண்பு அல்ல. மாறாக சாய்ந்தமருது தவிர்ந்த கல்முனை மாநகர சபை எல்லையினுள் வாழ்கின்ற அனைத்து முஸ்லிம்களிடமும், இருக்கக்கூடிய இயல்பென்பதில் மாற்றுக்கருத்திருக்க முடியாது. இதுவும் முன்னர் பேசப்பட்டும் சுட்டிக்காட்டப்பட்டும் வந்த ஒரு கருத்தாகும்.
இன்னொரு வகையில் கல்முனை மாநகர சபையின் முதல் அமர்வில் சமூகமளித்திருந்த 31 உறுப்பினர்களும் வாக்களிப்பில் கலந்திருந்தாலும் கூட 16 வாக்குகளைப்பெறுகின்ற ஒருவர் இங்கு முதல்வராக தெரிவாகின்ற நிலைதான் காணப்பட்டது. அது உறுதியான தெரிவாகவும், சட்டப்படியானதாகவும் அமையக்கூடியது.
சாய்ந்தமருது நீங்கலான ஏனைய பிரதேசங்களையெல்லம் உள்ளடக்கிய ஒரு மாநகர சபையாக கல்முனை அமைகின்றபோது அங்கு மொத்தமாக 30 பிரதிநிதிகள்தான் உரித்துடையவர்களாக அமைந்திருப்பர். அவ்வாறான ஒரு சூழல் இந்த தெரிவின்போது சமூகமளித்த உறுப்பினர்களின் அளவை ஒத்ததாகவே இருக்கும். அவ்வாறெனில், இந்த எண்ணிக்கை என்பது முதல்வர் தெரிவின்போது முக்கியப்படுகின்ற ஒன்றாகும். அது முஸ்லிம் முதல்வர் பிரதிநிதித்துவத்தை அவர்களிடமிருந்து மாற்று சமூகத்திடம் கைமாற்றம் செய்துவிடாது என்பதை இதிலிருந்தும் தெளிவாக புரிந்துகொள்ள முடியும்.
கடந்த பெப்ரவரி 10 இல் நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கல்முனை மாநகர சபையின் முடிவின் பிரகாரம் சாய்ந்தமருது நீங்கலான கல்முனை மாநகர சபை அமைந்திருந்தால் அதன் ஆசனங்கள் பின்வருமாறு பகிரப்பட்டிருக்கும். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 11, தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு – 07, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் -05, தமிழர் விடுதலைக் கூட்டணி -03,ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, தேசிய காங்கிரஸ், நல்லாட்சிக்காண தேசிய முன்னணி ஆகிய மூன்று கட்சிகளும் இரண்டாம், மூன்றாம் சுயேட்சைக்குழுக்களின் சார்பிலுமாக தலா ஒவ்வொரு உறுப்பினர்கள் தெரிவாகியிருப்பர்.
கல்முனை மாநகர சபையிலிருந்து சாய்ந்தமருது பிரதேச செயலகத்தை மையப்படுத்தி தனியான ஓர் உள்ளூராட்சி மன்றமாக பிரிந்து சென்றாலும் கல்முனையின் முஸ்லிம் அரசியல் செல்வாக்கை நிலைகுலையச் செய்துவிடாது என்பதை மிகவும் பட்டவர்த்தமாகவும், திட்டவட்டமாகவும் இவற்றினூடாக புரிந்துகொள்ள முடியும். இன்றைய நிலையில் கல்முனை மாநகர சபையின் பிரதி முதல்வராக ஒரு தமிழ்ச் சமூகம் சார்ந்த ஒருவரை பெரும்பாலான முஸ்லிம்களினால் அங்கீகரிக்கப்பட்டு வழங்கப்பட்டிருப்பதானது சமூக நல்லுறவுக்கு சாதகமான சமிஞ்சை உடையது என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.

பொதுவாக மாநகர முதல்வர் மற்றும் தவிசாளர்கள் தங்களது அதிகாரங்களை பிரதி முதல்வர், பிரதி தவிசாளர்களிடம் எழுத்து மூலமாக ஒப்படைக்காதவரை அவர் ஒரு சாதரணமான ஒரு உள்ளூராட்சி மன்ற உறுப்பினராகவே செயற்படுவார். ஆயின் இவர்களிடம் அதிகாரம் என்பது வழங்கப்படுகின்ற போது வருகின்ற ஒன்றேயன்று சுயமாக அதிகாரங்களைப் பிரயோகிப்பதற்கான வாய்ப்பில்லாத கட்டமைப்பையே உள்ளூராட்சி நிறுவனங்களுக்கான சட்டங்களும், நடைமுறைகளும் வெளிப்படுத்தியிருப்பதையும் நாம் உற்றுநோக்கலாம்.
பிரதி மாநகர முதல்வர் பதவியை ஒரு முஸ்லிமுக்கு வழங்குவதற்கான சாத்தியங்கள் கல்முனையில் காணப்படாமலும் இல்லை. இவற்றினை மீறி தமிழ் தரப்பினர்களுக்கு வழங்கப்பட்டிருப்பதானது ஓர் ஆரோக்கியமான நகர்வாகவும், மெச்சத்தக்க அரசியல் செயற்பாட்டிலுமான ஓர் முடிவாக இதனைப் பார்க்கலாம். பிரதி முதல்வராக தமிழர் ஒருவர் நியமிக்கப்பட்டதானது முஸ்லிம் அரசியல் அதிகாரத்தை கல்முனையில் எந்தவகையிலும் நசுக்கக்கூடியதாக அல்லது தாக்கத்தை செலுத்தக்கூடியதாக அமைய முடியாத ஒன்றுமாகும்.

பொதுவாக முஸ்லிம் அரசியல் கட்சிகள் ஒரு கூட்டுக்குள் வருவது என்பது ஒருபோதும் நடக்க முடியாத ஒன்றாகத்தான் இதுவரை நமது அரசியல் வரலாறு அமைந்திருக்கின்றது. அவ்வாறு ஒன்றுபடுத்துவதற்காக பல்வேறு முயற்சிகள் தேர்தல் காலங்களிலும் மற்றும் முஸ்லிம்களின் தீர்வு விடயத்திற்காகவும் ஒன்றுபடுத்துவதற்காக முனைப்புக்கள் மேற்கொண்ட போதிலும் அவை தோல்வியை அடைந்திருக்கின்றன. இது அந்தந்தக் கட்சிகளின் தலைமைத்துவங்களின் இருப்பை நிலைப்படுத்துவதற்கும் அவர்களின் நலன்களை திடப்படுத்திக்கொள்வதற்கும் கட்சிகளை உருவாக்கியிருக்கின்றனர் என்பதைத்தான் நமக்குச் சொல்லி வந்திருக்கின்றன.
ஆதலால், கட்சிகளின் ஒருமைப்பாடு என்பது ஒருபோதும் நடைபெறாது என்று அறுதியிட்டு உறுதியாக அறிவிப்புச் செய்ய முடியாது போனாலும் கடந்த கால நிகழ்வுகள் இதனை மெய்மைப்படுத்தி வந்திருப்பதைத்தான் நமக்கு உறுதிப்படுத்துகின்றது. முஸ்லிம் கட்சிகள் எல்லாம் ஒன்றுபடுவது என்பது இலங்கையில் காணப்படுகின்ற பிரதான சமூகங்களான சிங்கள, தமிழ், முஸ்லிம் ஆகிய மூன்று சமூகத்தினர்களிடமும் இருப்புக்கொண்டுள்ள அரசியல் கட்சிகளிடம் காணப்படாத ஒன்று என்பது நமது கண் முன் அத்தாட்சியாக இருக்கின்ற ஒரு விடயமாகும்.
என்றாலும், முஸ்லிம் சமூகம் தனது சமூக உணர்வுகளிலிருந்து தூரமாகி வாழாத ஒரு போக்கிற்கு பெரும்பாலான முஸ்லிம்கள் உரிய சந்தர்ப்பங்களில் தமது பங்களிப்பை நல்குவதில் பின்னிற்காத ஒரு கோணத்தை முஸ்லிம் சமூகத்திற்குள் பரவலாக நாம் பார்க்கலாம். குறிப்பாக கல்முனை மாநகர சபை எல்லையினுள் வாழ்கின்ற பிரதான சமூகங்களான முஸ்லிம்கள், தமிழர்கள் ஆகிய இரு சமூகத்தினரிடையே கடந்த காலத்தில் நடந்தேறிய பல கசப்பான வரலாற்றுச் சம்பவங்களின் அடிப்படையில் தமிழர்களா? முஸ்லிம்களா? என்று ஒரு விடயம் வருமேயானால் அங்கு முஸ்லிம்கள் ஒற்றுமைப்பட்டு வந்திருப்பதை நாங்கள் பார்க்கலாம். இதற்கு ஒரு உதாரணமாக முன்னிகழ்வொன்றை ஞாபகப்படுத்தி நாம் பார்க்கலாம்.
கல்முனையில் பிறைக்கொடியா, புலிக்கொடியா என்ற ஒரு கோஷத்தை எழுப்பிய போது இங்கு வாழ்ந்த முஸ்லிம் மக்கள் பிறைக் கொடியை பற்றிப்பிடித்து தமது உணர்வுகளை சாட்சிப்படுத்தியிருக்கிறார்கள். இத்தகைய பின்னணியில் வைத்துப்பார்த்தாலும் கல்முனையின் அரசியல் அதிகாரம் என்பதை ஒருபோதும் முஸ்லிம் தரப்பை விடுத்து தமிழ்த் தரப்பிற்கு கைமாற்றி விடுவதற்கு எதிரான பக்கத்தில்தான் தமது பங்களிப்பை இங்குள்ள முஸ்லிம் மக்கள் அளித்திருக்கின்றனர், அளிப்பார்கள் என்பதில் நம்பிக்கையீனத்தை எம்மில் எவரும் முன்வைக்க முடியாது.

அரசியல் தேவைக்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிறைக்கொடியா , புலிக்கொடியா என்ற கோஷங்களை எழுப்பி அதனூடாக அடையக்கூடிய நன்மைகளை அவர்கள் அடைந்து வந்திருக்கின்றார்கள். அதே முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகளே பின்னர் தமிழ் மக்களின் அரசியல் தலைவரை அழைத்து வந்து பொன்னாடை போர்த்தி , தலைப்பாகை சூடி, விருதுகள் வழங்கி கௌரவித்த வரலாறும் அவர்களுக்கு உண்டு. இவைகள் எல்லாம் எதைக் காட்டுகின்றதென்றால் தேவை ஏற்பட்டால் தமிழர்களுடைய அரசியலை ஏற்றுகொள்வதையும், தேவை இல்லை என்கின்ற போது அவர்களை தூரப்படுத்துவதை நமக்குள் பெரிதாக வேரூன்றி உள்ள முஸ்லிம் காங்கிரஸ் செய்து வந்திருக்கின்றது.

அந்த பின் புலத்தில்தான் கல்முனை மாநகர சபையின் பிரதி முதல்வர் பதவி ஒன்றுக்கு முஸ்லிம் காங்கிரஸே தமிழர் விடுதலைக் கூட்டணி சார்ந்த ஒருவரை முன்மொழிந்து வெற்றி பெறச் செய்திருக்கின்றனர். கல்முனையின் அரசியல் அதிகாரம் தமிழர்களிடம் பறிபோய்விடக்கூடாது என்று பிரசாரம் செய்த மு.கா.வினர்களே இதனையும் செய்திருக்கின்றனர். இது முஸ்லிம் அரசியல் கட்சிகளுக்குள் இருக்கின்ற போட்டித்தன்மையின் ஒரு வெளிப்பாட்டின் ஊடாக நிகழ்ந்ததேயன்றி மாறாக அவ்வாறான சூழல் உண்மையில் தோற்றுவிக்கப்பட்டிருந்து நடந்தேறிய ஒன்றல்ல.

கல்முனை மாநகர சபையில் மொத்த உறுப்பினர்கள் 41 பேராவர். இவர்களுள் 21 பேர் வரவு செலவுத் திட்டத்தையோ அல்லது வேறு சில பிரேரணைகளையோ நிறைவேற்றிக்கொள்வதற்கு தமது ஆதரவுகளை வழங்க வேண்டும். அவ்வாறு வழங்கப்படவில்லையானால் ஒரு ஸ்திரமான ஆட்சி அதிகாரம் இங்கு நிலவ முடியாத சூழல் தோன்றுமல்லவா? எனச் சிலர் கேள்வி எழுப்புகின்றனர். பொதுவாக ஒரு அமர்வில் கலந்துகொள்கின்ற உறுப்பினர்களுள் 51 வீதமானோர் ஆதரித்துக் கொள்வதின் ஊடாகவே நடைமுறைக்கு வருமென்று உள்ளூராட்சி நிறுவனங்களின் சட்டம் ஏற்பாடு செய்திருக்கின்றது.

நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் பெறுபேறுகளின் அடிப்படையில் தனித்து ஆட்சியமைக்கக்கூடிய 51% வீதமான ஆசனங்களைப் பெற்ற சபைகளைப் பார்க்கிலும் பல கட்சிகளின் ஆதரவுத்தளத்தோடு முதல்வர், நகர பிதா, தவிசாளர் தெரிவுகள் நடைபெற்ற சபைகளே அதிகமாக உள்ளன. இதனடிப்படையில் கூட்டாட்சி போன்ற ஒரு தோற்றப்பாடுடைய சபைகளின் போக்குகள் எவ்வாறு அமைய முடியுமோ அவ்வாறுதான் கல்முனை மாநகர சபையின் ஆட்சி நிலையும் அமைய முடியும்.

பொதுவாக ஓர் உள்ளூராட்சி மன்றத்தின் செயற்பாடுகள் அதன் வரவு செலவு திட்டத்தின் அங்கீகாரத்தோடு பெரும்பாலான நடைமுறைகள் செயலுருவம் பெறக்கூடிய தன்மை உடையது. அந்த வகையில் சபை அமர்வில் கலந்துகொள்ளும் மொத்த உறுப்பினர்களின் 51 வீதமானோரின் ஆதரவை ஒரு வரவு செலவுத் திட்டம் பெறாத நிலையிலும், அந்த வரவு செலவு திட்டத்தின் முன்மொழிவுகள் மாநகர முதல்வர், நகர பிதா மற்றும் தவிசாளர் ஆகியோர்களின் தற்துணிவின் அதிகாரத்தின் ஊடாக நடைமுறைப்படுத்தப்படுவதற்கான வாய்ப்பையே கொண்டிருக்கின்றது.

கூட்டாட்சி இருக்கின்ற இடத்தில் மட்டுமன்றி தனியாட்சி இருக்கின்ற இடங்களில் கூட மாநகர முதல்வருக்கோ,நகர பிதாவுக்கோ மற்றும் தவிசாளருக்கோ எதிராக எந்த பிரேரணையை கொண்டுவந்தும் அந்த சபையின் முதல் இரண்டாண்டு காலத்திற்குள் மாற்றங்களைக் கொண்டுவர முடியாது. இந்த உறுதித்தன்மையில் ஓர் உள்ளூராட்சி மன்றத்தின் ஆட்சிக்காலமான நான்கு வருடத்தின் பாதிக்காலம் கழிந்துவிடும்.

உள்ளூராட்சி மன்றத்தின் மூன்றாவது ஆண்டுக் காலத்தில் முன்வைக்கப்படுகின்ற வரவு செலவு திட்டம் அன்றைய அமர்வில் கலந்துகொண்டவர்களின் 51வீதமானோரினால் நிறைவேற்றப்படாத நிலையில் அந்த வரவு செலவு திட்டம் மீண்டும் இரண்டு வாரங்களுக்குள் 51 வீத அங்கீகாரத்தைப் பெற வேண்டும். பெறத்தவறுகின்ற போது மாநகர முதலவர், நகர பிதா மற்றும் தவிசாளர் தமது பதிவிகளிலிருந்து விலகியவர்களாகக் கருதப்படுவர். அதேநேரம் அவர்களின் உள்ளூராட்சி மன்ற உறுப்புரிமை வறிதாகமாட்டாது.

இவ்வாறான நிலை தோன்றுகின்ற இடத்தில் மீண்டும் மாநகர முதல்வர், நகர பிதா மற்றும் தவிசாளர் தெரிவு என்பன நடைபெற்று குறித்த சபையின் எஞ்சிய காலப்பகுதியான பிந்திய இரண்டாண்டுகளும் , முன் சென்ற இரண்டு ஆண்டுகள் போன்று நடைமுறைப்படுத்தப்பட்டு நிறைவுக்கு வரும்.

ஆகையால் தனித்து ஆட்சி அமைக்கக்கூடிய ஒரு கட்சி, ஆட்சி அமைக்கின்ற சபைகள் முற்றுமுழுதான நான்கு வருடத்தை பூர்த்தி செய்யும் ஸ்திரத்தன்மை உடையது என்றும், 51 வீதத்தைப் பெறாத சபைகளில் ஒரு வகையான கூட்டோடு தோற்றுவிக்கப்படுகின்ற ஆட்சி ஸ்திரத்தன்மையற்றது என்ற பேச்சுக்கே இடமில்லை. கூடாட்சியில் மட்டுமன்றி தனியாட்சி அமைத்தவர்களுக்கிடையிலும் கருத்து பேதங்கள் வருவதற்கு வாய்ப்பிருக்கின்றது.

எப்படிப்பார்த்தாலும் ஒரு உள்ளூராட்சி சபை அதன் முழு ஆட்சிக் காலமான 04 ஆண்டுகள் முடிவுறுவதற்கு முன்னர் முற்றாக கலைக்கப்பட்டு புதிய ஒரு தேர்தல் நடைபெறுவதற்கு இன்றைய உள்ளூராட்சி தேர்தல் சட்டத்தில் ஏற்பாடுகள் இல்லை என்பதினால் நிலையான ஆட்சி, நிலையற்ற ஆட்சி என்பதற்கப்பால் ஒரு உள்ளூராட்சி மன்றத்தின் ஆட்சிக்காலமான நான்கு வருடங்களும் பூரணப்படுத்தப்படும் என்பதையும் நாம் இவ்விடத்தில் மறக்கலாகாது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -